For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.ஆர்.எம். குழும மோசடிகள் குறித்து வாய் திறக்க அஞ்சும் தமிழக அரசு, திமுக.... ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த காலங்களில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் நிகழ்ந்த சில தவறுகள் தொடர்பாக புகார்கள் எழுந்தபோது அவற்றின் நிர்வாகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட தமிழக அரசு, எஸ்.ஆர்.எம். விவகாரத்தில் மட்டும் நீண்ட அமைதியை கடைபிடிப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த வேந்தர் மூவிஸ் நிறுவனத் தின் உரிமையாளர் மதன், சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, மருத்துவப் படிப்பில் சீட் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துவிட்டதாக மதன் மற்றும் எஸ்ஆர்எம். கல்வி நிறுவனம் மீது பலர் புகார் அளித்தனர். இதனிடையே ‘வேந்தர் மூவிஸ்' மதன் காணாமல்போன விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய பாமக நிறுவனர் ராமதாசைக் கண்டித்து ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது

ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதிதாக பல புகார்களும், புதிய ஆதாரங்களும் வெளியாகி வருகின்றன. ஆனால், கண்ணெதிரில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் போதிலும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையும், அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மக்களிடையே பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

26 நாட்கள் - தலைமறைவு

26 நாட்கள் - தலைமறைவு

எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாகக் கூறி 102 பேரிடம் தலா ரூ.62 லட்சம் வீதம் பணம் வசூலித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் பினாமியும், வேந்தர் மூவீஸ் நிறுவன அதிபருமாகிய மதன் தலைமறைவாகி இன்றுடன் 26 நாட்கள் ஆகின்றன.

புகார்கள் ஏராளம்

புகார்கள் ஏராளம்

மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் 70-க்கும் மேற்பட்டோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடமும், வளசரவாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அவர்கள் யாருமே மதனை நம்பிப் பணம் தரவில்லை. மாறாக, எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு அனைத்துமாக இருந்தவர் மதன் என்பதாலும், கடந்த 8 ஆண்டுகளாக மதன் மூலமாகவே எஸ்.ஆர்.எம். குழும கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்பதாலும், மதனை எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பிரதிநிதியாக நம்பியே பணம் கொடுத்துள்ளனர்.

போராட்டம்

போராட்டம்

இதன் காரணமாக தங்களிடம் மதன் வாங்கிய பணத்திற்கு எஸ்.ஆர்.எம் குழுமம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவின் வீட்டு முன் பல நாட்கள் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கடிதத்தில் தெளிவான விளக்கம்

கடிதத்தில் தெளிவான விளக்கம்

தலைமறைவான மதன் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதத்தில் 102 மாணவர்களிடம் பணம் வாங்கியது உண்மை தான் என்றும், அந்த பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதால் அவர்கள் அனைவருக்கும் மருத்துவப்படிப்பு இடம் வழங்க வேண்டும், இல்லாவிட்டால் பணத்தை திரும்பத் தர வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுப்பது தான் முறை

நடவடிக்கை எடுப்பது தான் முறை

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முகவராக மதன் செயல்பட்டு வந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாலும், பண மோசடி குறித்து புகார் அளித்த மாணவர்கள் தங்களின் புகார் மனுவில் பச்சமுத்துவின் பெயரையும் குறிப்பிட்டிருப்பதாலும் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது தான் முறையாகும். கடந்த காலங்களில் மோசடிகள் தொடர்பாக எவர் மீதேனும் புகார்கள் வந்தால், அதன் மீது முதற்கட்ட ஆதாரம் இருப்பது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதே நடைமுறையைத் தான் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மோசடி விவகாரத்திலும் தமிழக அரசும், காவல்துறையும் கடைபிடித்திருக்க வேண்டும்.

அரசு தயங்குவது ஏன்?

அரசு தயங்குவது ஏன்?

இந்த மோசடி குறித்து மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பின் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டிருந்தது. அம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பல்கலைக்கழக மானியக் குழு இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதேபோன்ற நடவடிக்கையைக் கூட எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு எதிராக மேற்கொள்ள அரசு தயங்குவது ஏன்? கடந்த காலங்களில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிகழ்ந்த சில தவறுகள் தொடர்பாக புகார்கள் எழுந்தபோது அவற்றின் நிர்வாகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட தமிழக அரசு, எஸ்.ஆர்.எம். விவகாரத்தில் மட்டும் நீண்ட அமைதியை கடைபிடிப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டல்

பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டல்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உயர்மட்டத் தொடர்புகளைக் கொண்டது. காவல்துறை உயரதிகாரிகள் பலரின் வாரிசுகள் அந்த பல்கலைக் கழகத்தில் இலவசமாக மருத்துவம் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் எஸ்.ஆர்.எம். குழுமம் மீது புகார் அளித்து 25 நாட்களாகியும் அதன்மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, புகார் அளித்தவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டல் விடுத்து வருகிறது.

தமிழக அரசு எங்கள் கட்டுப்பாட்டில்

தமிழக அரசு எங்கள் கட்டுப்பாட்டில்

இதுகுறித்து புகார் அளித்தவர்களை தொடர்பு கொள்ளும் எஸ்.ஆர்.எம். குழுமப் பிரதிநிதிகள் ‘‘தமிழக அரசு எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டு அதிமுகவுக்கு உதவியது எங்கள் தொலைக்காட்சி தான். இந்த அரசு எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஒழுங்காக புகாரை திரும்பப் பெறவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்'' என அச்சுறுத்துகின்றனர். இவ்வழக்கின் முக்கியமான சாட்சிகள் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சியிலும் எஸ்.ஆர்.எம். ஈடுபட்டிருக்கிறது. இவை எதுவுமே ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

அரசின் மௌனத்திற்கு பொருள் என்ன?

அரசின் மௌனத்திற்கு பொருள் என்ன?

எஸ்.ஆர்.எம். குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் மருத்துவப் படிப்புக்கு மதன் மூலம் பணம் வாங்கி ஏமாற்றியதுடன் முடிந்து விடவில்லை. இந்திய மருத்துவக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு மாறாக மருத்துவப் படிப்புக்கான இடங்களை விலைக்கு விற்பது உள்ளிட்ட செயல்களிலும் எஸ்.ஆர்.எம். குழுமம் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும். அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கும் பொறுப்பும், கடமையும் ஜெயலலிதா அரசுக்கு உள்ள நிலையில், அந்த அரசு மவுனமாக இருப்பதன் பொருளை புரிந்துகொள்ள முடியவில்லை.

திமுக-வுக்கு துணிச்சல் இல்லை

திமுக-வுக்கு துணிச்சல் இல்லை

தமிழ்நாட்டிலுள்ள திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் கடைபிடிக்கும் அணுகுமுறை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துவிட்டதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் தி.மு.க., எஸ்.ஆர்.எம். குழுமத்தின் மோசடிகள் குறித்து வாய்திறக்க அஞ்சுகிறது. சட்டப்பேரவையில் கலைஞரின் பெயரைக் குறிப்பிட்டதையெல்லாம் பெரிய விஷயமாக்கி சர்ச்சை கிளப்பிய திமுக-வுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களின் நலன்களை பாதிக்கும் எஸ்.ஆர்.எம். குழும மோசடி குறித்து பேச துணிச்சல் வரவில்லை.

இடதுசாரிகள் - அவர்களுக்கே வெளிச்சம்

இடதுசாரிகள் - அவர்களுக்கே வெளிச்சம்

கல்விக் கட்டணக் கொள்ளை குறித்து நீட்டி முழக்கும் இடதுசாரிகளும், அவர்களின் கூட்டணிக் கட்சிகளும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மோசடி பற்றி கருத்து தெரிவிக்க தயங்குகின்றனர். மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக கருத்து தெரிவிக்கும் இடதுசாரிகள், இப்பிரச்சினையில் கருத்து தெரிவிக்காமல் முடங்கிக் கிடப்பதற்கு காரணம் என்ன? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்

விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்

உயர்கல்வியை கடைச் சரக்காக்கி விற்பனை செய்யும் இந்த விஷயத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகள் அனைத்தும் அமைதியை கைவிட்டு, களமிறங்கி போராட முன்வர வேண்டும். அரசும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் அல்லது இவ்வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (சி.பி.ஐ.) ஒப்படைக்க முன்வர வேண்டும்,

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Pattali Makkal katchi founder said that TN Govt., had to take action on SRM issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X