For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனுமதிக்கப்பட்ட ரூ.15,000 கோடி சாலை பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுள்ளன: ஸ்டாலின் கேள்வி

அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.15,000 கோடி சாலை பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுள்ளன என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள 15,000 கோடி ரூபாய்க்கான சாலைப் பணிகள் எந்த அளவில் நடைபெற்றுள்ளன என்பது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக ஆட்சியில் "ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" (CRIDP) மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

stalin asked statement about Development plan for road construction

இத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளை அகலப்படுத்தும் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் போன்றவை மேற்கொள்ளப் படுவதாகவும், மிக முக்கியமாக 40 சதவீதத்திற்கு மேல் ஆதி திராவிடர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களை மாவட்ட சாலைகளுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-17 ஆம் ஆண்டிற்கான "மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்" துறையின் செயலாக்கத் திட்டத்தில் அதிமுக ஆட்சியின் கடந்த ஐந்து வருடங்களில் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இதே கருத்தை 2016-17 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோதும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்நிலையில் "ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்" கீழ் 2015-16 ஆம் ஆண்டிற்கு 3500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய டெண்டர்கள் விரைவில் கோரப்படும் என்றும் கூறப்பட்டது.

அதேபோல் 2016-17 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து சட்டமன்றத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், "2016-17 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்டப்பட்ட வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 1000 கிலோ மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணிகளும், 3000 கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தும் பணிகளும் நிறைவேற்றப்படும். அதற்காக 2800 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

ஆனால் இப்பணிகள் எல்லாம் நிறைவேறியிருக்கிறதா? 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுகளில் புதிதாக அறிவிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கு டெண்டர்கள் கோரப்பட்டு விட்டனவா என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளிப்படையாக ஏதும் வெளிவரவில்லை. இதனால், அதிமுக ஆட்சியில் வழக்கமாக வெளியிடப்படும் 110 அறிவிப்புகள் போலவே இந்த "ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டத் திட்டப் பணிகள்" அறிவிப்பும் அமைந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி "விபத்துக்களால் மரணம்" நிகழ்வதில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அதிலும் குறிப்பாக சாலைகள் மோசமாகவும், பராமரிப்பு இன்றியும் இருப்பதால் சாலை விபத்துக்கள் மட்டுமின்றி மரணங்களும் நிகழ்ந்து விடுகின்றன. மோசமான சாலைகளால் ஏற்படும் மரணங்களில் பிஹார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தமிழகம் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையே தெளிவுபடுத்துகிறது.

ஆகவே "ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்" கீழ் கடந்த ஐந்து வருடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைப்பணிகளின் நிலை என்ன? எத்தனை சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன? எத்தனை பணிகள் நிறைவுபெற்றுள்ளன ?

எத்தனை பணிகளுக்கு இன்னும் டெண்டர் விடப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன? 40 சதவீத ஆதி திராவிடர் இன மக்கள் வாழும் எத்தனை கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அதிமுக அரசு வெளியிட வேண்டும். உட்கட்டமைப்பு மற்றும் சாலை கட்டமைப்பு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிகவும் அடிப்படையான அம்சங்களாக திகழ்கின்றன.

மக்கள் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் சாலைக் கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சாலை விபத்துக்களை தவிர்க்கவும், சாலை விபத்தால் மரணங்களை தடுக்கவும் சாலைக் கட்டமைப்பு மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள 15,000 கோடி ரூபாய்க்கான சாலைப் பணிகள் எந்த அளவில் நடைபெற்றுள்ளன என்பது நாட்டு மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

ஆகவே முதல்வரின் இலாகாக்களைக் கவனித்து வரும் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வமோ அல்லது அவரது அறிவுரையின் பேரில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களோ இந்த வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

English summary
tamilnadu Opposition Leader m.k.stalin asked statement about Development plan for road construction
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X