For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகளுக்காக நாங்க ஒன்னும் செய்யலையா… காய்த்த மரம்தான் கல்லடி படும்… ஸ்டாலின் ஆவேசம்

முழு அடைப்புப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகும் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுக மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள் என்று

Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகளுக்காக திமுக ஒன்றும் செய்யவில்லை என்று பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூறிவருவதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் நலன் காக்கவும் தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்து நடத்திய முழு அடைப்புப்போராட்டம் மக்களின் பேராதரவுடன் பெருவெற்றி பெற்றிருக்கின்ற நிலையில், 'காய்த்த மரம் கல்லடி படும்' என்பது போல, இந்தப் போராட்டம் எந்த அரசுகளுக்கு எதிராக நடத்தப்பட்டதோ அந்த அரசுகளையும் ஆளுங்கட்சிகளையும் சேர்ந்தவர்களும், இந்தப் போராட்டத்தில் அரசியல் காரணங்களுக்காகப் பங்கேற்காத சில கட்சிகளின் தலைவர்களும் தி.மு.கழகத்தின் மீது வசை மாரி பொழியத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதுவே முழு அடைப்புப் போராட்ட வெற்றியின் விளைவுதான் என்றபோதும், விவசாயிகளின் நலனுக்காகப் போராட தி.மு.கவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும், விவசாயிகளுக்கு தி.மு.க துரோகம் இழைத்துவிட்டது என்றும் அவதூறு பரப்புவதையே அன்றாட அரசியல் நடவடிக்கையாக சிலர் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, காவிரி பிரச்சினையில் தி.மு.க. மீது பழிபோடுவது என்பது இங்கே நெடுங்கால அரசியல் உத்தியாகக் கையாளப்பட்டு வருகிறது.

விளக்கம்

விளக்கம்

முழு அடைப்புப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகும் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க., மற்றும் இன்னும் சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நிர்வாகிகளும் இதே குற்றச்சாட்டைக் கூறி வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் அவதூறுகளை அப்படியே பரப்புவோருக்கும் விளக்கம் அளிக்கும் வகையில், காவிரி விவகாரம் குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் 26-10-2016 அன்று விரிவாக வெளியிட்ட அறிக்கையின் சில பகுதிகளை சுட்டிக்காட்டிட விரும்புகிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: காவிரிப் பிரச்சினையிலே திராவிட முன்னேற்றக் கழகம் துரோகம் செய்து விட்டது என்றும், உச்சநீதிமன்றத்திலே தொடுக்கப்பட்ட வழக்கினைத் தி.மு.கழகம் தன்னிச்சையாக திரும்பப் பெற்றதால், குடி முழுகி விட்டது என்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப அறிக்கைகள் வாயிலாகவும்,தொலைக்காட்சி வாயிலாகவும் வெறுப்பையும் விரோதத்தையும் ஒரு சிலர் கக்கி வருகிறார்கள்.

உண்மைக்கு மாறாக..

உண்மைக்கு மாறாக..

அவர்களின் உண்மைக்குப் புறம்பான அந்தப் பேச்சுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும், நடந்தது என்ன என்பதைப் புரியாதவர்களுக்கும், புரிந்தும் புரியாததைப் போல நடிப்பவர்களுக்கும் அழுத்தந்திருத்தமாகப் புரிய வைக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கடமையின் அடிப்படையில் பின்வரும் விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். நான் பிறந்த வருடமான 1924 க்கும் காவிரிப் பிரச்சினைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அப்போதுதான் மைசூர் ராஜ்யமாக இருந்த கர்நாடக மாநிலத்துக்கும், சென்னை ராஜதானியாக இருந்த தமிழ்நாட்டுக்கும் காவிரி சம்பந்தமான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஐம்பது ஆண்டுக்குப் பிறகு காவிரியில் வரக்கூடிய உபரி நீரை இரு மாநிலங்களும் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது பற்றிக் கலந்து பேசி அதனை முறைப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படையில் முடிவெடுப்பது என்றும், ஒருவேளை அதில் பிரச்சினை ஏற்படின் மத்திய அரசை நாடியோ, நடுவர் தீர்ப்பை நாடியோ, உரிய முடிவெடுக்கக் கூடிய வழிவகை காண்பது பற்றித் தீர்மானித்திட 1974-ஆம் ஆண்டு ஆய்வு செய்யலாம் என்பதும்தான் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தமாகும்.

ஒப்பந்தத்தை மீறிய கர்நாடகா

ஒப்பந்தத்தை மீறிய கர்நாடகா

இடைப்பட்ட ஐம்பதாண்டு காலத்தின் பெரும் பகுதி பிரச்சினைகள் எதுவும் அதிகமாக இன்றி இருந்த நிலைமைக்கு மாறாக, 1974 -க்கு முன்பே கர்நாடக மாநில அரசினர், 1924 -ஆம் ஆண்டு ஒப்பந்தமே 1974 -ஆம் ஆண்டு முடிந்து விடுகிற ஒப்பந்தமென்று வாதிடத் தலைப்பட்டு, அதற்கு முன்னதாகவே 1924 -ஆம் ஆண்டு ஒப்பந்தப் பிரிவுகளுக்கு மாறாக 1968 ஆம் ஆண்டு ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர். அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த கழக அரசு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டுமென்றும் கோரியது.

தமிழக அரசின் வாதம்

தமிழக அரசின் வாதம்

மத்திய அரசு செய்த ஏற்பாட்டின்படி 19-8-1968 அன்றும் 20-8-1968 அன்றும் டெல்லியில் காவிரித் தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையை மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார். கர்நாடக முதலமைச்சர் திரு. வீரேந்திரபட்டீல் அவர்கள் பொதுப்பணித்துறைக்கும் அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டார். நான், தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் சட்ட அமைச்சர் மாதவனுடன் சென்று கலந்து கொண்டேன். முக்கியமாக 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் வாதமாக எடுத்து வைக்கப்பட்டது; முடிவு எதுவும் தோன்றவில்லை. பின்னர் 1969-ல் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு 1970 பிப்ரவரி 9 ஆம் நாள், மீண்டும் கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திரும்பத் திரும்ப நாம் வலியுறுத்தியதன் காரணமாக, 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாட்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன; எனினும் அவை பலனளிக்கவில்லை.

வழக்கு

வழக்கு

எனவே 1971 ஜூலை 8-ஆம் நாள் காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கழக அரசு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ந்து ஆகஸ்ட் திங்களில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசிற்கு ஆணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கர்நாடக அரசு, புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், நடுவர் மன்றத்திற்கு பிரச்சினையை விடவும் தஞ்சை விவசாயிகள் சார்பில் முரசொலி மாறன் ஒரு வழக்கு தொடுத்தார்.

இந்திராகாந்தி ஐடியா

இந்திராகாந்தி ஐடியா

21-5-1972 அன்று தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், வழக்கு இல்லாமலே பேச்சுவார்த்தை மூலமே சுமுகத் தீர்வு காணலாம் என்று கூறினார்கள். அப்போது கூட நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்திலே கூட்டி, கலந்துப் பேசி, அந்த வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று தீர்மானித்து - அப்படித் திரும்பப் பெறுகின்ற நேரத்திலே கூட மீண்டும் வழக்கு போட வழி வைத்துக் கொண்டுதான் அந்த வழக்கை, தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டது. அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73 ஆகிய நாட்களில் மத்திய பாசன அமைச்சர் கே.எல்.ராவ் முன்னிலையிலும், 27-6-74 அன்று கே.சி.பந்த் முன்னிலையிலும், 29-11-1974 மற்றும் 15-2-75 ஆகிய நாட்களில் பாபு ஜெகஜீவன்ராம் முன்னிலையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் அனைத்துக் கட்சிகளைக் கலந்தாலோசித்து, தமிழக அரசு மத்திய அரசினை நடுவர் மன்றம் அமைக்குமாறு கோரி 1975 மே திங்களில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

எம்ஜிஆர் கடிதம்

எம்ஜிஆர் கடிதம்

25-8-1976 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சியில் மத்திய அரசால் மீண்டும் ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். தலைமையில் இருந்த அ.தி.மு.க. அரசும் அந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காத நிலையில், கழக ஆட்சியின்போது தீர்மானிக்கப்பட்டபடி, நடுவர் மன்றம் அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு எம்.ஜி.ஆர் அரசால் 6-7-1986 அன்று கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்நாடு காவேரி நீர்ப்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கம் தொடுத்திருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. இதையொட்டி 19-9-1988 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால், நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசிற்கு ஆணை வழங்கும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் 25-9-1988 அன்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 18-10-1988 அன்று பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

அனைத்துக் கட்சிக் கூட்டம்

1989 இல் கழக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன் இதற்கு முடிவு காண முற்பட்டபோது, கர்நாடக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. எனினும் கர்நாடக மாநில ஆளுநரோடு 8-8-1989 அன்று பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததையொட்டி, அந்தப் பேச்சுவார்த்தையில் அப்போது சுமுகமான முடிவு காண முடியாவிட்டால் உடனடியாக நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் 27-7-1989 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்று திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராக 2-12-1989 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

விபி சிங்கிடம் கடிதம்

விபி சிங்கிடம் கடிதம்

கழக அரசின் சார்பில் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கடிதம் எழுதினேன். பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த மனுவினை அளிக்க, சேர்ந்து வருவதாக முதலில் ஒப்புக்கொண்ட போதிலும், கடைசிநேரத்தில் வர மறுத்து அவர்கள் தனியாகச் சென்று ஒரு மனுவினை பிரதமரிடம் அளித்தார்கள்.

அதிமுகவிற்கு கண்டனம்

அதிமுகவிற்கு கண்டனம்

ஆனால், அவர்கள் பிரதமரிடம் அளித்த மனுவின் முதல் வாக்கியமே கர்நாடகாவின் வாதத்தை வலுப்படுத்துவது போல, '1924 ஆம் ஆண்டின் காவேரி ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது' என்பதாகும். அதனை ஏடுகளில் படித்துவிட்டு தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துத் தரப்பினரும், பத்திரிகைகளும் அ.தி.மு.க.வைக் கண்டித்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தின் சார்பில் திரு. ரெங்கநாதன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இனி பேச்சுவார்த்தை இல்லை என்கிற தமிழக அரசின் கருத்து, மத்திய அரசின் வழக்கறிஞர் மூலமாக உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை இல்லை என்றால் நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடுகிறோம் என்று அப்போதுதான் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. காவிரி நடுவர் மன்றம் அமைக்க தி.மு.கழகம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்தான் இவை அனைத்தும்.

இடைக்கால தீர்ப்பு

இடைக்கால தீர்ப்பு

நடுவர் மன்றம் அமைந்த பிறகு, இந்தப் பிரச்சினையை முழுவதும் விசாரித்து தீர்ப்பு சொல்வதற்கு நீண்ட நாளாகும் என்பதால் ஒரு இடைக்காலத் தீர்ப்பு வழங்குங்கள் என்று கழக அரசின் சார்பில் 28-7-1990 அன்று வேண்டுகோள் விடுத்தோம். இடைக்காலத் தீர்ப்பைப் பெறவும் கழக அரசுதான் நடவடிக்கை மேற்கொண்டது என்பதையும் இதன் வாயிலாகப் புரிந்து கொள்ளலாம். 1991 முதல் 1996 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. 1996 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான், நடுவர் மன்றத்தின் ஆணையைச் செயல்படுத்துவதில் தாமதத்தைத் தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமென்று 9-7-1997, 23-7-1997, 29-9-1997, 1-11-1997, 6-11-1997 ஆகிய நாட்களில் பிரதமருக்கு நான் எழுதிய கடிதங்கள் மூலமாகவும், 27-7-1997 மற்றும் 29-9-1997 ஆகிய நாட்களில் பிரதமரை நேரில் சந்தித்தும் கேட்டுக் கொண்டேன். மேலும் 10-11-1997அன்று மத்திய அரசுக்கு அப்படியொரு ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றும் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரிம் கோர்ட் கண்டனம்

சுப்ரிம் கோர்ட் கண்டனம்

21-7-1998 அன்று உச்சநீதிமன்றம், "பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கப் போவதாக மத்திய அரசு உறுதியளித்து, 15 மாதமாகிறது. இன்னமும் இணக்கமான திட்டம் உருவாக்கப்படவில்லை. இந்த நிலை நீடித்துக் கொண்டே போவதை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தது. இதன்பின், பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்திய அந்தக் கூட்டத்தின் இறுதியில்தான், 7-8-1998 இல் தி.மு.கழக ஆட்சியில், இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்படும் என்றும் முடிவாயிற்று.

இறுதித் தீர்ப்பு

இறுதித் தீர்ப்பு

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் தி.மு.கழக ஆட்சியிலேதான் 5-2-2007 அன்று வெளியிடப்பட்டது. ஆனால், இந்த இறுதித்தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்" என்று எப்போதும் போல எனது ராஜினாமாவை வலியுறுத்தி ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். அந்த நிலையிலும், இந்த இறுதித்தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவைப் போலத் தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்பாமல், 19-2-2007 அன்றும் 15-4-2007 அன்றும் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டித்தான் முடிவெடுக்கப்பட்டது". என்று அந்த அறிக்கையில் விரிவாக விளக்கியுள்ள தலைவர் கலைஞர் அவர்கள், நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு தொடர்பான விளக்கத்தை கோரி இரு மாநிலங்களும் மனு தாக்கல் செய்திருந்ததால், அதனையொட்டியே விசாரணைகள் நடைபெற்று, இறுதியில் நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்ற உத்தரவிட, அதனை அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதையும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவதூறு

அவதூறு

காவிரிப் பிரச்சினையாக இருந்தாலும், மீத்தேன் ஆய்வுக்கு மட்டுமான புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருந்தாலும் அது குறித்து புரிந்தும் புரியாதபடி தி.மு.க மீது குற்றம்சாட்டுவது சில கட்சிகளுக்கு அன்றுதொட்டு இன்று வரை வழக்கமாக இருக்கிறது. எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் அவதூறு சுமத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்ற கட்சிகள் பற்றிக் கவலைப்படவேண்டாம். தூங்குவோரை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்போரை எழுப்ப முடியாது. விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, குடிமனைப் பட்டா, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன்கள் ரத்து, உழவர் சந்தை, ஆறுகளைத் தூர்வாருதல், தமிழக நதிநீர் இணைப்பு, நெல் - கரும்பு உள்ளிட்டவற்றுக்கான நியாயமான ஆதார விலை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியதும் முன்னெடுத்ததும் தி.மு.கழக அரசுதான் என்பதை விவசாயிகள் அறிவார்கள். அவர்களின் நலனுக்காகத் அனைத்து கட்சிகளுடன் தொடர்ந்து பயணிக்கும் பணிகளை தி.மு.கழகம் என்றென்றும் மேற்கொள்ளும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK working president M K Stalin has condemns BJP and PMK about their anti DMK speeches.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X