For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் புதிய விதிகள் மூலம் சமூக நீதியை சீர்குலைக்கிறது பாஜக : ஸ்டாலின் கண்டனம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் புதிய விதிகள் மூலம் சமூக நீதியை சீர்குலைக்கிறது பாஜக என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வுகளுக்கு மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய விதிகள் சமூக நீதியை சீர் குலைக்கும் வகையில் உள்ளது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான விதிகளில் புதிய முறை கொண்டு வர இருப்பதாக மத்திய பணியாளர் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் விஜயகுமார் சிங் அறிவித்துள்ளார்.

இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டால், அது ஒரு தலைபட்சமான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராகவும், சமூகநீதிக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும், பின்னடைவுப்பாதையில் அநியாயமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடித்துக் கொண்டிருப்பதற்கு, திமுக கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

இளைஞர்கள் ஆதங்கம்

இளைஞர்கள் ஆதங்கம்

ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு இதுவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத்தேர்வை நடத்தியும் தேர்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுதாயங்களை சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.

100 பயிற்சிக்கான மதிப்பெண்

100 பயிற்சிக்கான மதிப்பெண்

இப்போது சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து விட்டு, முசோரியில் நூறு நாள் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறையின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை தட்டிப் பறிக்கும் செயல்.

சமூக நீதிக்கு எதிரானது

சமூக நீதிக்கு எதிரானது

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இரவுபகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூகநீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது.

பாஜகவின் செயல்பாடு

பாஜகவின் செயல்பாடு

அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் சிவில் சர்வீஸ் தேர்வு தவிர, ஒரு பவுண்டேஷன் கோர்ஸ் என்ற போர்வையில், ஒருவகையிலான நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்கால கனவுகளைச் சிதைக்க முயற்சிப்பதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, பவுண்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

பழைய முறையே வேண்டும்

பழைய முறையே வேண்டும்

ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன். தவறினால் சமூகநீதி கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க. நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Stalin condemns on the new Rules of IAS and IPS. DMK Leader Stalin Condemns that the new rules framed for the Civil Service Exams should ruin youngsters dreams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X