For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்தா,ஹோமியோவிற்கும் நீட் : ஏழை,கிராம மாணவர்களின் மருத்துவ கனவு சிதைப்பு - ஸ்டாலின்

'ஆயுஷ்' கல்விக்கும் நீட் தேர்வு அறிவித்து ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவுகளை மத்திய அரசு சிதைத்துவிட்டதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட 'ஆயுஷ்' கல்விக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவுகளை மத்திய அரசு சிதைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறையின் உத்தரவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Stalin condemns Siddha courses for NEET exam

இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வை, பல்வேறு மாநிலங்களில் உள்ள சமுதாய அமைப்புகளும், மாணவர்களும் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவை முற்றிலுமாகச் சிதைத்துவிட்ட மத்திய அரசு, இப்போது இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளில் சேருவதற்கும் நீட் தேர்வு கட்டாயம் என்றும், நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டனத்துக்குரியது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நீட் தேர்வை அவசர அவசரமாக திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையை அத்துமீறிப் பறித்துவிட்ட மத்திய அரசு இப்போது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கும் நீட் தேர்வை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடுவது சமூகநீதிக் கொள்கைக்கும், சமத்துவத்திற்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல, மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர் வேட்டையாக கருதப்படுகிறது.

கிராமப்புறங்களுக்குத் தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில், ஏற்கனவே நீட் தேர்வு மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இப்போது கிராமப்புற சுகாதாரத் தேவைகளுக்காக எஞ்சியிருக்கும் சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளின் மீதும் கை வைப்பது எதேச்சதிகாரமானது.

அதுமட்டுமின்றி, கிராமப்புற மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன என்ற பாஜகவின் உள்நோக்கத்தையும் மக்கள் விரோத எண்ணத்தையும் இது வெளிப்படுத்துகிறது. ஆகவே, சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

கிராமப்புற வளர்ச்சியில், அங்குள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளில் மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிப்பது மட்டுமின்றி, மருத்துவப் படிப்பிற்கும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் விதத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரவேண்டும்.

English summary
DMK working president stalin condemned central government to announce Ayush courses including Siddha and Ayurvedha, yoga eduction under neet entrance exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X