For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்றத்தில் 110 விதியின் நடைமுறையை சின்னாபின்னமாக்கிவிட்டார் ஜெ., : ஸ்டாலின் புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகள் மீது விவாதம் நடத்த அனுமதி தரப்படவில்லை என்று கூறி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் தற்போது மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2 அறிக்கைகளை வாசித்தார். பாலங்கள் கட்டுவது குறித்தும், ஏரிகளை புனரமைப்பது குறித்தும் அவர் விரிவாக பேசினார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

Stalin slams Jaya for her 110 announcements

இதற்கு அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த தமிமுன் அன்சாரி (மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி) தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) நடிகர் கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.

வாய்ப்பு கேட்ட துரைமுருகன்

தி.மு.க. சட்டசபை துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் சபாநாயகர் கூறுகையில், 110 விதியின் கீழ் நன்றியும் பாராட்டும்தான் சொல்ல முடியும். நீங்கள் நன்றி சொல்லப் போகிறீர்களா என்று கேட்டு விட்டு பேச வாய்ப்பு கொடுத்தார்.

புதிய அறிவிப்புகள்

அப்போது பேசிய துரை முருகன், முதல்வர் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் எங்களுக்கு மாறுபாடு இல்லை. ஆனால் ஒன்றை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை முடிந்து விட்டது. இப்போது மேலும் புதிய திட்டங்கள் பற்றி.... என்று தொடங்கினார்.

110 அறிக்கை ஏன்?

சபாநாயகர் குறுக்கிட்டு, 110 விதியின் கீழ் முதல்வர் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புகளை வெளியிட உரிமை உள்ளது என்று கூறினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு சில விளக்கங்களை அளித்தார். 110 விதியின் கீழ் அறிக்கை வாசிப்பது ஏன் என்பதற்கு ஆதாரங்களுடன் தகவல்களை தெரிவித்தார்.

துரைமுருகன் சந்தேகம்

முதல்வர் ஜெயலலிதாவின் இந்த விளக்கத்துக்கு துரைமுருகன் பதில் அளித்து பேச எழுந்தார். அப்போது சபாநாயகர் மீண்டும் அவருக்கு பேச அனுமதி கொடுத்தார். என்றாலும் தொடர்ந்து துரைமுருகன் 110 விதியின் கீழ் பேசுவது பற்றி விளக்கம் கேட்க முயன்றார். அதை சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

அமளி துமளி

இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜெ.அன்பழகன், ரங்கநாதன் உள்பட பல எம்.எல்.ஏ.க்கள் இருக்கையை விட்டு எழுந்து சபாநாயகர் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.

வெளிநடப்பு

ஜெ.அன்பழகனை சபாநாயகர் எச்சரித்தார். உங்கள் இடத்துக்கு செல்லுங்கள். சபைக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரஸ் - இ.யூ.முஸ்லீம் லீக்

இதே போல் வெளிநடப்பு செய்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமியும் இதே கருத்தை சொல்லி தி.மு.க.வுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தார்.

ஸ்டாலின் பேட்டி

வெளிநடப்பிற்கு பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டசபையில்110 விதியின் நடைமுறையை முதல்வர் ஜெயலலிதா சின்னாபின்னமாக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்ட நெடுஞ்சாலை துறைக்கு இப்போது புதிய திட்டம் அறிவிப்பது எப்படி என திமுக வினவியதாக குறிப்பிட்டார்.

சந்தேகத்தில் பதில் இல்லை

புதிய திட்டங்களுக்கு நிதி எப்படி வரும் என துரைமுருகன் வினவியதாகவும், ஆனால் தொடர்ந்து பேச துரைமுருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஸ்டாலின் சாடினார். இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக விளக்கமளித்தார்.

தவறான வாக்குறுதி

110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து பேரவையில் விவாதிக்க துரைமுருகன் வலியுறுத்தியதாகவும், ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் காற்றில் கரைந்துவிட்டதாக துரைமுருகன் குற்றம்சாட்டி பேசியதாக தெரிவித்தார். தவறான வாக்குறுதி தான் அவசர முக்கியத்துவம் வாய்ந்ததாக அதிமுக ஆட்சி கருதுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

English summary
Opposition leader MK STalin has slammed CM Jayalalitha for her 110 announements in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X