கரூருக்கு வந்த மு.க.ஸ்டாலினை வரவேற்ற "அம்மா" பேனர்கள் மற்றும் விளம்பரங்கள்!!
கரூர்: கரூர் வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், வழியெங்கும் காணப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாள் சுவர் விளம்பரங்களைப் பார்த்து எரிச்சலாகி விட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சியசிலிருந்து கரூர் வழியாக திருப்பூர் சென்றார் ஸ்டாலின். அவர் கரூருக்கு நேற்று வந்தபோது மாவட்ட எல்லையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

ஆனால், கரூர் மாவட்ட எல்லையிலிருந்து கரூர் வரைக்கும் உள்ள நெடுஞ்சாலைகளின் இருபுறமும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மற்றும் அதிமுக அரசின் சாதனைகள் குறித்து ஆங்காங்கே சுவர் விளம்பரம், பேனர்கள் என வழிநெடுகிலும் காணப்பட்டதைப் பார்த்து அதிருப்தி அடைந்தார் ஸ்டாலின்.

கரூரில் திமுக காணாமல் போய் விட்டதா என்று கேட்டு தி.மு.க மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனை கடிந்து கொண்டாராம். ஏற்கனவே கரூர் மாவட்ட திமுகவில் பல குழப்பங்கள் நிலவுகிறதாம். அதிமுகவைக் கண்டித்து போராட்டங்கள் நடத்துவதில்லை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கரூர் திமுக நடந்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நன்னியூர் ராஜேந்திரன் அதிமுக மீது அதிக பாசத்துடன் இருப்பதாகவும் கட்சிக்குள் புகைச்சல் உள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுக கரூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆட்சிக் காலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தி ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். நெருக்கடி கொடுத்ததோடு பொதுமக்களிடையே ஆட்சியாளர்களின் மீது எதிர்ப்பு நிலை வளர்த்தார்.

ஆனால் தற்போதைய தி.மு.க மாவட்ட செயலாளராக உள்ள நன்னியூர் ராஜேந்திரனோ தனக்கு வரவேண்டிய பங்கு வந்தால் போதும், யார் ஆண்டால் என்ன என்ற மனநிலையோடு கரூர் மாவட்டத்தில் வலம் வருவதால் போராட்டம் குணம் கொண்ட தி.மு.க இளைஞர்களிடையே பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications