For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின்

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

நேற்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்கள் அதிமுகவின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலிருந்தும், அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், கல்லூரிகள் போன்றவற்றிலிருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.

Stalin urges CBI to investigate money distribution in R.K.Nagar

89 கோடி ரூபாய்க்கும் மேல் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்க ஒரு "செயல் திட்டம்" வகுக்கப்பட்டு, அதை அமைச்சர்கள் முன்னின்று நடத்தியுள்ளதாக வெளிவந்துள்ள ஆதாரங்கள் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற கோட்பாட்டை குழிதோண்டி புதைத்துவிட்டது. மொத்த வாக்காளர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் வழங்கி ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தல் வெற்றியை அபகரிக்க சதி திட்டம் தீட்டி, அதை அமைச்சர்களே செயல்படுத்தியிருப்பததாக வெளியாகியுள்ள தகவல்களின் மூலம், "நேர்மையான நியாயமான தேர்தல்" என்ற ஜனநாயகத்தின் ஆணிவேர் அடியோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளதைப் பார்த்து மனம் பதறுகிறது.

அதிமுக ஆட்சியில் இப்படி வியூகம் வகுத்து வாக்குக்கு பணம் கொடுப்பது யாரும் அறியாதது அல்ல. அவர்களுக்கு இது கைவந்த கலை. அதிமுகவின் இடைத்தேர்தல் வரலாறுகள் அனைத்துமே பணப்பட்டுவாடா "பார்முலா"க்கள் அடங்கிய கேடுகெட்ட வரலாறுதான் என்பதையும், வாக்காளர்களின் கண்ணியத்தை சூறையாடி வெற்றி பெறவே ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் செயல்பட்டார்கள் என்பதையும் தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்களும், தேர்தல் அதிகாரிகளும் நன்கு உணர்வார்கள்.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் இதுமாதிரி நடைபெற்ற தாராளமான பண விநியோகத்தை தடுக்குமாறு திராவிட முன்னேற்றக் கழகம் இடைவிடாது குரல் கொடுத்தது. ஆனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஆணையம் பெயரளவிற்கு நடவடிக்கைகளை எடுத்ததே தவிர, மற்ற தொகுதிகளில் அதிமுகவின் பண விநியோகத்தை தேர்தல் அதிகாரிகள் கண்மூடி வேடிக்கை பார்த்தார்கள். அதன் விளைவாகவே ஒரேயொரு சதவீத வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டது. நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டிய தமிழகத்தில் இன்று பொல்லாத ஆட்சி நடப்பதற்கு அன்று தேர்தல் அதிகாரிகள் அனுமதித்த பண நாயகமே

காரணம் என்பதை இந்தநேரத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதே மோசமான நடைமுறையை இன்னும் சற்று விரிவுபடுத்தி இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பூத் வாரியாக வினியோகம் செய்ய பணம் பிரித்துக் கொடுத்து, அதை அறிவியல்ரீதியான வியூகங்கள் மூலம் விநியோகித்து ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறையில் அடித்த கொள்ளைகள் பற்றியும், பெற்ற லஞ்சங்கள் பற்றியும் பட்டியலிட்டு டைப் அடித்து வைத்திருந்தது பற்றி வெளியாகியிருக்கும் தகவல்கள், இந்த வசூல் அமைச்சர்கள் மட்டத்தில் மட்டுமின்றி, ஊழல் பணம் வசூல் செய்யப்பட்டது பற்றிய விவரங்களை வேறு யாருக்கோ முறையாக கணக்கு கொடுக்கும் பொறுப்பும் அமைச்சர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. "கமிஷனை" வசூல் செய்து, "கச்சிதமாக" மேலிடத்திற்கு செலுத்துவோரே அமைச்சர்களாக தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நீடிக்க முடியும் என்பது கடந்த ஆறு வருடங்களாக எழுதப்படாத விதி என்று கோட்டை வட்டாரத்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இப்போது ஆதாரங்களாக வருமான வரித்துறை சோதனை மூலம் ஒவ்வொன்றாக வெளி வரும்போது தமிழக அரசின் நிர்வாகம் தலைகுனிந்து நிற்கிறது.

தேர்தல் ஜனநாயகத்தை "பண நாயகமாக" மாற்றி, நேர்மையான அரசு நிர்வாகத்தை "ஊழல் சாக்கடையாக" திசைதிருப்பி, நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் வசூலுக்கு உட்படுத்தி, அரசு கஜானாவை எப்படியெல்லாம் காலி செய்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இன்றைக்கு அதிமுக ஆட்சியில் தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருப்பது ஏன் என்பதற்கு வருமான வரித்துறை சோதனைகளையொட்டி வெளிவரும் ஊழல் பட்டியல் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கும் பட்டியல்கள் "உள்ளங்கை நெல்லிக்கனி" போல் ஆகியிருக்கிறது.

ஆகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அமைச்சர்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். வருமான வரித்துறை சோதனையில் தொலைக்காட்சிகளில் வெளிவந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் உடனடியாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, அந்த அமைச்சர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்யப்பட வேண்டும்.

பட்டியல் போட்டு ஊழல் வசூலில் ஈடுபட்டு, அரசு கஜானாவை திட்டம் போட்டு கொள்ளையடித்தவர்கள் அடங்கிய இந்த அமைச்சரவை இனி ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்கக்கூடாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அமைச்சரவை நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
Dmk working president m.k.Stalin urges CBI to investigate money distribution in R.K.Nagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X