For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமக ஆட்சி அமைந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2250 வழங்கப்படும்: ராமதாஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பாமக ஆட்சிக்கு அமைந்தால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2250 வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

வட மாவட்டங்களின் மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடமான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இதனால் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு இதை வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

statement issued by Ramadoss

காவிரி பாசன மாவட்டங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கணிசமான அளவில் மோட்டா ரக நெல் விளைவிக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யும் சந்தையாக செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தான் திகழ்ந்து வருகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களில் இந்த விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான விலை பெருமளவில் சரிந்து விட்டது. இப்போதைய நிலையில் 75 கிலோ மூட்டை ரூ.600 முதல் ரூ.675 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.9 வரை மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல் ரூ.1460-க்கும், சன்ன ரக நெல் ரூ.1520-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.14.60 முதல் 15.20 வரை வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 75 கிலோ நெல் மூட்டை ரூ.1095 முதல் ரூ.1140 வரை கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

ஆனால், கிட்டத்தட்ட அதில் பாதி விலைக்கு தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஒரே வகையான நெல்லுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு விலையும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்னொரு விலையும் வழங்கப்படுவது மிகப்பெரிய அநீதி ஆகும்.

தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1424 செலவாகிறது. அத்துடன் 50% லாபம் சேர்த்தால் ஒரு குவிண்டால் நெல் ரூ.2136க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் செஞ்சியில் 75 கிலோ மூட்டை ரூ.1602-க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், அதைவிட ரூ.1000 குறைவான விலைக்கே நெல் வாங்கப்படுகிறது.

இத்தகைய அநீதிகள்தான் விவசாயிகளை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து தற்கொலை என்னும் சோகம் வரை அழைத்துச் செல்கின்றன. விவசாயிகளுக்கு இந்நிலை ஏற்படுவதற்கு காரணம் தமிழக ஆட்சியாளர்களின் விவசாயி விரோத போக்கும், அலட்சியமும் தான்.

காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டிருப்பதைப் போன்று வட மாவட்டங்களிலும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. விழுப்புரம் மாவட்டத்தில் போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.

அண்மையில் தான் செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு என்ற இடத்தில் தற்காலிக கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அங்கு நெல் விற்பனை செய்ய செல்லும் விவசாயிகளுக்கு மிகவும் கசப்பான அனுபவம் தான் ஏற்படுகிறது. சிறிதளவு ஈரப்பதம் இருந்தால் கூட அதைக் காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.

நெல்லின் தரம் சிறப்பாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால், வேறுவழியில்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தவிர்த்து விட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலேயே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு வட மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யும் வணிகர்கள் அதை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். ஏற்கனவே, கடன் வலையிலும், வறுமையிலும் சிக்கி வாடும் விவசாயிகளை காக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இந்த கடமையை நிறைவேற்றும் வகையில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கட்டுப்பாடுகள் இல்லாமல் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் பல இடங்களில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதால் தமிழக அரசு தலையிட்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மறுக்காமல் கொள்முதல் செய்யும்படி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

பாமக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2250 வழங்கப்படும். அதுமட்டுமின்றி, விவசாயிகள் விரும்பும் இடங்களில் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK's founder Dr S. Ramadoss issues the statement about hike of rice rate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X