For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட்: தமிழகத்தை உலுக்கிய ஒரு போராட்டத்தின் கதை #GroundReport

By BBC News தமிழ்
|

மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டமும் பொதுக்கூட்டமும், கடந்த 20 ஆண்டுகளாக அந்த ஆலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் உருவெடுத்தது ஏன்?

தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தாமிரத் தாதிலிருந்து தூய தாமிரத்தைப் பிரித்து கம்பிகளாக மாற்றுவது, அதன் துணைப் பொருட்களான அமிலத்தை பிரித்தெடுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகிறது.

இந்த ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாகவே போராடிவருகின்றனர்.

இந்த நிலையில், தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்ட மேலும் ஒரு ஆலையை அருகில் உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை ஸ்டெர்லைட் காப்பர் மேற்கொண்டுள்ளது.

இந்த தகவல் அருகில் உள்ள கிராமங்களில் பரவியதும், அவர்கள் அதனை எதிர்த்து போராட்டத்தைத் துவங்கத் திட்டமிட்டனர். பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ. குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களுமாக சுமார் 300 பேர் திரண்டு எம்.ஜி.ஆர். பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், போராட்டத்தை கைவிட மறுத்த பொதுமக்கள், அந்தப் பூங்காவில் குடியேற முயன்றனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த 271 பேரை காவல்துறை கைதுசெய்து பிறகு விடுவித்தது. 8 பேர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

"அந்தப் போராட்டத்தைக் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கையாண்ட விதம் பெரும் கோபத்தை எங்களிடம் தூண்டியது" என்கிறார்கள் அ. குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர்கள்.

இதற்குப் பிறகு, அ. குமரெட்டியாபுரத்திலேயே ஒரு வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து தொடர் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தனர். அந்தத் தொடர் போராட்டம் தற்போதுவரை 45 நாட்களையும் கடந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் மார்ச் 9ஆம் தேதியன்று தூத்துக்குடியில் ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்குக் காவல்துறை அனுமதி மறுக்கவே போராட்டக்காரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதற்கிடையில், மார்ச் 17ஆம் தேதியன்று போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கோரி மீண்டும் காவல்துறையையும் அணுகினர்.

மார்ச் 14ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது. ஆனால், 17ஆம் தேதி மிக அருகில் இருந்ததால், இந்தப் பொதுக்கூட்டத்தை மார்ச் 24ஆம் தேதிக்கு போராட்டக்காரர்கள் தள்ளிவைத்தனர்.

இருந்தபோதும், இந்தப் போராட்டத்தை நடத்த காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்ததாக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழிடம் குற்றம்சாட்டினார். "ஊர்வலம் நடத்தக்கூடாது, வாகனங்களில் ஆட்களை அழைத்துவரக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்தது காவல்துறை. ஆனால், நீதிமன்ற உத்தரவில் அப்படியேதும் இருக்கவில்லை" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இதையடுத்து, மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி நகரில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. முந்தைய போராட்டங்களைப் போல அல்லாமல் இந்த முறை வணிகர் சங்கங்களைச் சேர்ந்தவர்களிடமும் சென்று போராட்டக்காரர்கள் ஆதரவு கோரினர்.

"தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்களில் பொதுவாக வணிகர் சங்கங்கள் பங்கேற்பதில்லை. இந்தத் தொழிற்சாலைக்கு எதிராக இப்பகுதி மக்கள் நீண்ட காலமாகப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ஆகையால், இந்தப் போராட்டங்களில் பங்கேற்க வேண்டுமென முடிவுசெய்தோம்" என்கிறார் வணிகர் சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜா.

இதையடுத்து போராட்டம் நடக்கும் தினத்தன்று, தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம், புதியமுத்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் கடைகளை முழுமையாக மூடுவது என்று முடிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, உப்பு உற்பத்தியாளர்கள், தூத்துக்குடி வர்த்தகர் சங்கம், ஆட்டோ ரிக்ஷா யூனியன்களும் இதில் பங்கேற்க முடிவுசெய்தனர்.

மார்ச் 24ஆம் தேதியன்று சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகில் இந்தப் பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு வாகனத்தில் ஆட்கள் வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதால் வாகனங்கள் வெகுதூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன.

அந்த வாகனங்களில் வந்தவர்கள், அதிலிருந்து இறங்கி பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். இதுதான் சிறு ஊர்வலங்களைப் போல காட்சியளித்தது.

மாலையில் பொதுக்கூட்டம் துவங்கியபோது சாலையே தெரியாத வண்ணம் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடியிருந்தனர். "இப்படி ஒரு கூட்டம் கூடுமென நாங்களே எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் எந்த அரசியல்கட்சியும் இதில் பங்கேற்கவில்லை. பொதுமக்களும் வணிகர்களும் மட்டுமே இதில் பங்கேற்றனர்" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்திற்குப் பிறகுதான், ஊடகங்கள் இந்த விவகாரத்தைக் கவனிக்க ஆரம்பித்ததால், ஊடகங்கள் மீதும் இப்பகுதி பொதுமக்களுக்குக் கோபம் இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, பொதுக்கூட்டம் நடந்ததற்கு அடுத்த நாள், தூத்துக்குடியில் வெளியாகும் பல நாளிதழ்களில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கமளிக்கும் ஒரு விளம்பரமும் இடம்பெற்றது. இது ஊடகங்கள் மீதான கோபத்தை மேலும் அதிகரித்தது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும், குறிப்பாக நாளிதழ்களை வாங்கக்கூடாது என்றுகூறி பிரச்சாரங்கள் துவங்கப்பட்டிருக்கின்றன.

அ. குமெரெட்டியாபுரத்தில் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில், இந்த போராட்டத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று கலந்துகொள்ளப்போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். அரசியல் கட்சிகள் பலவும் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்திருக்கின்றன.

1996ன் பிற்பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்ததிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இதனை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2013 மார்ச் 23ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்களுக்கு மூச்சுத் திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டது.

இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது. அப்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஒப்புதலையடுத்து மீண்டும் இந்தத் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தது.

தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்திருக்கும் இந்த ஸ்டெர்லைட் ஆலை, வருடத்திற்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் துணைப் பொருட்களாக கந்தக அமிலமும் பாஸ்போரிக் அமிலமும் உற்பத்தியாகின்றன. தொழிற்சாலைக்கு அருகிலேயே 160 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள அனல் மின் நிலையத்தையும் ஸ்டெர்லைட் இயக்கி வருகிறது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தாமிரத் தாதிலிருந்து தூய தாமிரத்தைப் பிரித்து கம்பிகளாக மாற்றுவது, அதன் துணைப் பொருட்களான அமிலத்தை பிரித்தெடுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X