For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாக் அப் மரணங்கள் நீதிக்கு எதிரானது: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவல்துறையினர் வீடுகளிலும், பணியிடங்களிலும் பொது இடங்களிலும் உள்ள குடிமக்களை பாதுகாக்க வேண்டிய நிலையில், காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே ஒரு குடிமகன் உயிரிழந்தால், அது நீதியை கேலிக்குரியதாக்கிவிடும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடந்தது. மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துப் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

காவல்துறையினருக்கு குற்றவாளிகளிடமிருந்து சமூகத்தை பாதுகாத்தல், சமுதாய ஒற்றுமையை பராமரிக்கும் வகையில் விதிமுறைகளை பாரபட்சமின்றி செயல்படுத்துதல், மனிதாபிமான முறையில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் என, 3 முக்கிய கடமைகள் இருக்கிறது.

Stern action for lock-up deaths, says Jayalalithaa

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயனுள்ள ஆலோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு என்பது முக்கியமான விஷயம் என்ற போதிலும், இந்த அம்சம் காவல்துறையினரின் கடமைகளில் ஒரு பகுதி தான்.

காவல்துறையிருக்கு குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், குற்றங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், முக்கியமான அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், இயற்கை சீற்றங்களை சமாளித்தல், பல்வேறு சமூக சீரமைப்பு விதிகளை அமலாக்குதல் போன்ற விரிவான பங்கு பணி இருக்கிறது.

தமிழக காவல்துறையினருக்கு அரசு சுதந்திரமாக பணியாற்றும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. எந்த இக்கட்டான நிலைமையையும் சமாளிக்கும் திறன் நமது காவல்துறையினரிடம் இருக்கிறது.

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழப்பது, நீதியையே கேலிக்கூத்தாக்கிவிடும் தற்போதைய சூழ்நிலையில் புதிய வகையான குற்றங்கள் தொடர்ந்து தலைதூக்கி வருகிறது.

கொடும் குற்றங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் ஜாமீன் மனுக்களை எதிர்ப்பதோடு, குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்.

காவல்துறை அதிகாரிகளின் இன்றைய மாநாட்டின் போது, பிரச்னைகளை அலசுவதுடன், அவற்றுக்கான பயனுள்ள தீர்வுகளும் காணப்படும். காவலர், மகளிர் காவலர் ஆகியோருக்கு 3 முக்கிய பங்கு பணிகள் இருக்கின்றன. சமூகத்தின் காவலர் என்ற வகையில், பயங்கர குற்றவாளிகளிடமிருந்து சமூகத்தை பாதுகாக்கும் அரணாக அவர்கள் விளங்க வேண்டும். இரண்டாவதாக, சட்டத்தின் அங்கம் என்ற வகையில், காவலர்கள் சமூக செயல்பாடுகளில் ஒழுங்கை ஏற்படுத்த சட்ட விதிகளை நடுநிலையோடு செயல்படுத்தும் நடுவராகவும் செயலாற்ற வேண்டும்.

மூன்றாவதாக ஒரு அரசு ஊழியர் என்ற முறையில் சட்டத்திற்கு அப்பாற்பட்டும் கூட காணாமல்போன குழந்தைகளை கண்டு பிடிப்பது, நடுவழியில் நின்றுபோன காரை தள்ளிவிடுவது போன்ற நட்பு முறையிலான பணிகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால்தான் ஒரு அறிஞர், காவல்துறை அதிகாரிகள் சாலமனை போன்ற அறிவுக் கூர்மையுடனும், சாம்சனை போன்ற வலிமையுடனும், ஜாப் போன்ற பொறுமையோடும், மோசஸ் போன்ற தலைமைப் பண்புடனும், இரக்கத்தில் நல்ல சமேரியனைப் போன்றும் விளங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுபோன்ற உயரிய லட்சியங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அதிகப்படியான எதிர்ப்புகள் காவல்துறை மீது பெரும் சுமையை ஏற்றிவிடுகின்றன. ஆனால், தமிழக காவல்துறையினர் தங்கள் பணியில் சுதந்திரமாக செயல்பட எனது அரசு அதிகாரம் அளித்துள்ளது. தமிழக காவல்துறையினர் எப்போதுமே எந்த வகையான சவால்களையும் திறம்பட சமாளித்து வருகின்றனர்.

அண்மையில், பக்ருதீன் கைது செய்யப்பட்டதும், அதனைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் புத்தூரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அவரது 2 கூட்டாளிகள் எந்த உயிர்ச்சேதமுமின்றி கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இதற்காக காவல் துறையைச் சேர்ந்த 260 பேருக்கு நான் நேரடியாக பாராட்டு தெரிவித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை சன்மானம் வழங்கியுள்ளேன். இதுமட்டுமின்றி, 20 காவல்துறையினருக்கு பதவி உயர்வும் அளித்துள்ளேன். இதுபோன்ற பரபரப்பான நடவடிக்கைகள் பெரிய செய்திகளாக ஆகி விடுகின்றன.

அதே சமயம், காவல்துறையினரின் கடும் உழைப்பு பொதுமக்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கவனிக்கப்படுவதே இல்லை.

உதாரணமாக, அச்சுறுத்தல் உள்ள முக்கிய பிரமுகர்களின் வருகையின்போதும், சாதித் தலைவர்களின் ஆண்டு விழாக்கள் அல்லது பெரிய கோயில் விழாக்கள் போன்றவற்றில் போலீசார் பெரும் உழைப்பை செலவிடுகின்றனர்.

இந்த சம்பவங்கள் அமைதியாக நடந்தேற, விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, காவல்துறையினரின் முயற்சியும் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது. காவல்துறையினர் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் பற்றி நான் அறிவேன். இதனால்தான் தனிப்பட்ட காவலர்களின் நலன், முழு காவல்துறையின் நலன் மற்றும் காவல்துறை ரீதியான நலன் ஆகியவை குறித்து எனது அரசு குறிப்பாக கவனம் செலுத்தி வருகிறது.

இத்தருணத்தில் எனது சில முன்னுரிமைகள் குறித்து காவல்துறையினரான உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் (காவல்துறையினர்) 9 லட்சம் பேரை கைது செய்தால், அவர்களில் ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்தால் கூட அது புள்ளிவிவர அடிப்படையில் முக்கியத்துவமற்றதாகவே தோன்றலாம்.

ஆனால், இறந்த அந்த மனிதன், அவனை நேசித்தவர்களுக்கு வெறும் புள்ளி விவரம் அல்ல. சந்தேகத்தின்பேரில் பிடித்து செல்லப்பட்டவர்கள் திடீரென உடல்நலம் குன்றி காவல் நிலையத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் பற்றி செய்திகள் வருகின்றன. அல்லது காவலில் இருக்கும்போது தற்கொலை செய்து கொள்கின்றனர்.

காவல்துறையினர் வீடுகளிலும், பணியிடங்களிலும் பொது இடங்களிலும் உள்ள குடிமக்களை பாதுகாக்க வேண்டிய நிலையில், காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே ஒரு குடிமகன் உயிரிழந்தால், அது நீதியை கேலிக்குரியதாக்கிவிடும்.

தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டதாலும், நடமாட்டம் எளிதாகி விட்டதாலும் குற்றங்களின் தன்மை மாறிவிட்டன. ஒரு காலத்தில் மாவட்டங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளைப் பற்றி காவல்துறையினர் கவனம் செலுத்தி வந்தனர்.

இன்று மாநிலங்களுக்கு இடையே, ஏன்? நாடுகளுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டியுள்ளது. புது வகையான குற்றங்கள் தலைதூக்கி வருகின்றன. கொடும் குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்வது மட்டும் போதாது. அவர்களின் ஜாமீன் மனுக்களை கடுமையாக எதிர்ப்பதுடன், குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்து விசாரணையை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

English summary
Chief Minister Jayalalithaa assured that her government will take stern action against police personnel responsible for lock-up deaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X