For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரமடையும் என்.எல்.சி தொழிலாளர்கள் போராட்டம்: அதிகாரிகள் வீடு மீது கல்வீச்சு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெய்வேலி: பணிக்கு செல்லும் என்.எல்.சி அதிகாரிகளின் வீடுகள் மற்றும் கார்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்கிய சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வீச்சில் அதிகாரிகள் குடும்பத்தினர் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் கடந்த 20ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்.எல்.சி. தொழிலாளர்கள் இன்று 29வது நாளாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் என்.எல்.சி.யின் மின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த உற்பத்தி 2990 மெகாவாட். ஆனால், இன்று 2320 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. இது மொத்த மின் உற்பத்தியில் 670 மெகாவாட் குறைவாகும்.

Stone pelted at NLC officers's houses

உண்ணாவிரதம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொ.மு.ச. தலைவர் திருமாவளவன் பணி நீக்க அறிவிப்பு வெளியானதால் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 14ம் தேதி முதல் நெய்வேலியில் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள்.

பேச்சுவார்த்தை தோல்வி

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிற்சங்க நிர்வாகிகளுடன் என்.எல்.சி. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அது தோல்வியில் முடிவடைந்தது. நேற்று காலையில் மீண்டும் நெய்வேலியில் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

மயங்கிய தொழிலாளர்கள்

உண்ணாவிரதம் இருந்த தொழிலாளர்களில் மத்தியாஸ், சண்முகம் ஆகியோர் மயக்கமடைந்தனர். ஞாயிறு பிற்பகலில் மேலும் 7 தொழிலாளர்கள் உண்ணாவிரத பந்தலிலேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் 9 பேரும் சிகிச்சைக்காக நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதிகாரிகள் மீது தாக்குதல்

நான்காவது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கும் நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு என்.எல்.சி. பொது மேலாளர் முதலாவது சுரங்கத்தில் இருந்து வீட்டுக்கு ஜீப்பில் புறப்பட்டு சென்றார். ஆடிட்டர் பாலு அந்த ஜீப்பை ஓட்டினார். முதலாவது சுரங்கம் ‘பி' பாயிண்ட் அருகே சென்றபோது 10 பேருக்கும் மேற்பட்ட ஒரு கும்பல் அந்த ஜீப்பை வழி மறித்து நிறுத்தியது.

வாகனங்கள் சேதம்

என்.எல்.சி. பொது மேலாளர் மோகனையும், ஆபரேட்டர் பாலுவையும் அவர்கள் தாக்கினார்கள். பிறகு அருகில் கிடந்த பாறாங்கல் உதவியுடன் அந்த ஜீப்பை அடித்து நொறுக்கினர். இதில் ஜீப் சேதமடைந்ததுடன் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. பின்னர் அந்த கும்பல், தாக்கப்பட்ட என்.எல்.சி. அதிகாரியை மிரட்டிவிட்டு தப்பி சென்றது.

போலீசில் புகார்

இதுபற்றி நெய்வேலி தெர்மல் போலீசில் என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து என்.எல்.சி. அதிகாரி ஜீப்பை தாக்கி விட்டு தப்பி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

தடுத்த தொழிலாளர்கள்

இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் முதல் ஷிப்ட் பணிக்காக என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில் சிலர் வழக்கம் போல் புறப்பட்டு சென்றனர். அவர்களை நெய்வேலி புதுக்குப்பம், ரவுண்டானா, தெர்மல் க்யூ பாலம் உள்ளிட்ட பல இடங்களிலும் திரண்டு நின்றிருந்த என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

தொழிலாளர்கள் மறியல்

மேலும் என்.எல்.சி. விருந்தினர் இல்லம் அருகே திரண்டு நின்று, அங்கிருந்து என்.எல்.சி. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் சுரங்கம் அனல்மின் நிலைய வேலைக்கு செல்லும் அதிகாரிகளை செல்ல விடாமல் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு தீவிரம்

இதனையடுத்து போலீசாரும், என்.எல்.சி. பாதுகாப்பு படையினர், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என 500க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்தனர். அவர்கள் என்.எல்.சி. சுரங்கம், அனல்மின் நிலையங்கள் மற்றும் நெய்வேலியின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மறியல் நடைபெறாமல் தடுக்க வேன்களில் ரோந்து சுற்றி வந்தனர்.

ரயில் மறியல் போராட்டம்

தொழிலாளர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் செவ்வாய்கிழமையன்று என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு மறியல் போராட்டமும், 22ம்தேதி கடலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் ஏற்கனவே தொழிற்சங்கங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் காயம்

இதனிடையே பணிக்கு செல்லும் என்.எல்.சி அதிகாரிகளின் வீடுகள் மற்றும் கார்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் கல்வீசினர். கல்வீச்சு சம்பவத்தில் அதிகாரிகள் குடும்பத்தினர் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 10 பேருக்கும் என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நீடிக்கும் பதற்றம்

நெய்வேலியில் உள்ள பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் செல்லும் வாகனங்கள், பேருந்துகளுக்கு முன்னும் பின்னுமாக போலீசார் வாகனங்களில் பாதுகாப்புக்காக சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் நெய்வேலி பகுதியில் பதட்டம் நிலவுகிறது. எனவே, அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
NLC strike has increased further today as the protesters stone pelted the officers and their residences,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X