For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளி மாணவர்களுக்கு டூவீலர் வாங்கி தராதீங்க - பெற்றோர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

பள்ளி மாணவர்களே சாலை விபத்துகளில் அதிகம் பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: காற்றை கிழிக்கும் வேகம், காதை துளைக்கும் சத்தம், வீசும் அலட்சிய பார்வை, பாம்பு போல் நெளியும் துணிச்சல்... இதெல்லாம் சாலைகளை வியாபித்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் செல்லும் இன்றைய மாணவர்களின் செயல்பாடு.

இதன் விளைவு - இறுதியில்... துர்மரணம். உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில் இந்தியா ஒன்றாகவும், அதிலும் தமிழகம் முதன்மையாகவும் இருக்கிறது. 15 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டோரின் அகால மரணத்திற்கு முழு முதற்காரணமே சாலைவிபத்துகள்தான் என எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும்,வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாக குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலைவிதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதுதான். அதுமட்டுமல்ல... விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடிஇருப்பதும்தான்

அரபு நாடுகளிலெல்லாம் சாலையின் சிக்னல்களில் இருக்கும் கேமிராவானாது, யாராவது விதி மீறினால் படம் பிடித்து உடனடியாக அபராத நோட்டீஸை அனுப்பி விடுமாம். இங்கும் அதே சட்டம் இருந்தும் அதை யாரும் பின்பற்றுவதும் இல்லை - அமல்படுத்துவதும் இல்லை என்பது வருந்தத்தக்க விஷம். அதேபோல இந்திய நீதிமன்றங்களில் அதிகளவில் தேங்கி இருப்பது விபத்து வழக்குகள்தானாம் என்பதும் வேதனைக்குரிய விஷயமே.

16 முதல் 18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில், இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது மற்றும் வாகனங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும், பள்ளிக்கல்வித் துறை சார்பாக பலமுறை தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழக அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பிரச்சாரங்கள், விழிப்புணர்வு பிரசுரங்கள், போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துகளை குறிப்பாக விபத்துகளில் மாணவர்களின் உயிரிழப்பு சதவீதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

போலீஸ் விடுக்கும் வேண்டுகோள்

போலீஸ் விடுக்கும் வேண்டுகோள்

மாணவர்களின் சாலைவிபத்துக்கள் குறைய உத்தரவுகளும், சட்டங்களும் போட்டும் குறையாததால், போக்குவரத்து போலீஸார் ஒரு படி மேலே போய் பெற்றோர்களிடத்தில் ஒரு வேண்டுகோளே வைத்து விட்டனர். 18 வயது பூர்த்தியடையாத தங்கள் பிள்ளைகளுக்கு தயவு செய்து இரு சக்கர வாகனங்களை வாங்கி தரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். அராஜக போக்கோடும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் வாகன போக்குவரத்து போலீசாரின் ஒரு சில நிகழ்வுகள் நமக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், சாலை விபத்துக்களை தடுக்க அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு நாம் மதிப்பளிக்காமலும் தலைவணங்காமலும் இருக்க முடியாது. சரி, சாலைவிபத்துகளில் மாணவர்களின் உயிரிழப்புக்கு மனநல ஆலோசகர்கள் தரும் விளக்கம் என்ன தெரியுமா?

ரேஸ் தேவையா

ரேஸ் தேவையா

நம் குழந்தைகள் செல்போன், கம்ப்யூட்டர், போன்றவற்றில் ரேஸிங் கேம் என்ற வகை விளையாட்டுக்களை நிறைய பார்க்கவும், விளையாடவும் தொடங்கிவிட்டனர். அதனால் ரேஸ் நாயகன் போலவே தங்களையும் வரித்துக்கொள்ளும் மனப்பான்மை உருவாகிறதாம். சாலைகளில் செல்லும்போதும், வளையும்போதும், திரும்பும்போதும், அந்த ரேஸ்நாயகன்தான் மனம் முழுவதும் வியாபித்திருப்பானாம். ரேஸ் நாயகனுக்கு இலக்கு தெரியுமா? புரிதல் தெரியுமா? உணர்வு தெரியுமா? அவனுக்கு தெரிந்ததெல்லாம் வேகம்... வேகம்... வேகம்...தானே? அவனை மனதில் நிறுத்திக் கொள்வதுடன் அவனைபோலவே தன்னையும் ஒரு ரேஸ்நாயகனாக நினைத்துக் கொண்டு இளம்கன்றுகள் வண்டிஓட்டுவதன் விளைவே பெரும்பாலான மரணத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறதாம்.

ஆணவப் போக்கு

ஆணவப் போக்கு

இயற்கையிலேயே பொறுமையான, அமைதியான, சாதுவான, இலகுவான மனம் கொண்டவர்கள் கூட வாகனங்களை ஓட்டும்போது, தங்களது இயல்பிற்கு மாறாக நடந்துகொள்வார்கள் என சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதாவது சாலைகளில் செல்லும்போது, அகம்பாவமும், அகந்தையும் வந்து தொத்திக் கொள்ளுமாம். இதனால் தனக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினாலோ, ஓவர்டேக் செய்தாலோ, இயல்பு தன்மை மறந்து ஆணவ தன்மை மேலோங்குவதாக அந்த ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது. இந்த ஆணவதன்மையானது சாலையில் தன்னை முந்தி செல்பவரை விரட்டி துரத்தி பிடிக்க செய்கிறது கடைசியில் விபத்தில் போய் முடிகிறது என்கின்றன சர்வதேச ஆராய்ச்சிகள்.

பெற்றோர் செல்லம்.

பெற்றோர் செல்லம்.

தங்கள் குடும்ப கௌரவமே தன் முதிர்ச்சியடையாத மகன் ஓட்டும் விலை உயர்ந்த பைக்கில்தான் என நினைத்து அவனுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள்தான் சாலை விபத்துகளின் முதல் குற்றவாளி. செல்லப் பிள்ளைகளுக்கு கேட்கும் பைக்கை வாங்கி கொடுப்பதும், அவன் வண்டி ஓட்டும் அழகை பார்த்து பெருமை பொங்க பார்த்து நிற்கும் மனோபாவம் உடைய பெற்றோர்கள் இருக்கும்வரை சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பேயில்லை.

வீலிங் எமன்

வீலிங் எமன்

தங்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதோ இல்லையோ, தனக்கு ஒன்றும் ஆகாது என்ற மெத்த நினைப்பும் அசட்டு தைரியமும், சேர்ந்து கோணல்மாணலாக வண்டியை சாலையில் விர்ரென்று பறக்க செய்கின்றன. தங்களை மற்றவர்கள் கவர வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக தென்படும் வயது இது. எனவேதான், இத்தகைய வீலிங், என்ற பெயரில் அவர்கள் அரங்கேற்றும் மரண சாகச கன்றாவிகள் நிறைய பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்துவிடுகிறது. வாகனங்களை முந்துவதில் காட்டுகின்ற ஆர்வத்தை நல்ல காரியங்களில் காட்ட இளைஞர்கள் என்றுமே முன்வருவதில்லை. இது பெரும்பாலும் புத்தாண்டின்போது அதிகமாக நடக்கக்கூடிய இளைஞர்களின் சம்பிரதாய கொண்டாட்டங்களில் ஒன்று. சாகசம் இருந்தால்தான் புத்தாண்டு நிறைவடைகிறது என்னும் மாயையை மாணவர்கள் தூக்கியெறிய வேண்டும்.

நொடி தவறினால் நரகம்

நொடி தவறினால் நரகம்

இன்றைய மாணவர்கள் வாழ்வின் முழு அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டுமானால், சாலை விபத்துகளில் பகுதியளவு அல்லது முற்றிலுமாக படுகாயமடைந்தோரின் அன்றாட வாழவியலை பார்த்தாலே போதும். வலிகள், காயங்கள், ரணங்கள், ஏக்கங்கள், இழப்புகள், தவிப்புகள், ஊனம், உருக்குலைப்புகள், நடைமுறை சிக்கல்கள்.... என தொடரும் இன்னொரு நரகம் அது. ஒரு நொடி தவறில் நடக்கும் ஆயுள் சிறை.

பிள்ளைகளின் போக்கு மாற வேண்டும்

பிள்ளைகளின் போக்கு மாற வேண்டும்

என் பிள்ளை கேட்டு இதுவரை நான் எதையும் இல்லைன்னு சொன்னதே இல்லை.... வசதி படைத்தோர்கள் சொல்லும் இந்த வார்த்தைகள் வளரும் குழந்தைகள் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எத்தனை பெற்றோர் அறிவார்கள்? விளைவு... தன் நண்பன் வைத்திருக்கும் அதே விலைஉயர்ந்த வாகனம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிக்கும் மனோபாவத்தை வளர்க்காதா? பணம், செல்வாக்கினை பயன்படுத்தி போக்குவரத்து காவலர்களிடம் தப்பித்துக் கொள்ளும் எண்ணத்தை உருவாக்காதா? எதை அழுது கேட்டாலும் உடனே கிடைத்துவிடும் என்ற மனப்பான்மையை தூண்டிவிடாதா?

மாடல் பெற்றோர்

மாடல் பெற்றோர்

என்னதான் போக்குவரத்து போலீசார் சாலைவிபத்துகளை தடுக்க கெடுபிடி செய்தாலும், வேண்டுகோளை விடுத்தாலும் பெற்றோரின் கட்டுப்பாடு இல்லையென்றால் எதுவுமே செய்ய முடியாதுதான். பெற்றோர்கள் இரு சக்கர வாகனங்கள் தாங்கள் ஓட்டும்போது பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருப்பதுடன் சாலைவிதிகளை பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். உரிமங்கள் ரத்தானால் திரும்ப பெறலாம்... ஆனால் உயிரை பெற முடியுமா என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

'கெத்து' வேண்டாம்

'கெத்து' வேண்டாம்

மாணவர்களே... ஹெல்மட் அணியாமலும், சிக்னல்களை மதிக்காமலும் வண்டி ஓட்டி பயமுறுத்துவதை இனியாவது நிறுத்துங்கள். ஒருவரை முந்தி செல்லும் கெத் காட்டும் மாயையை உடைத்தெறியுங்கள். தனிமனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முடியும் என்பதை நம்புங்கள். சாலை விதிகளை முறையாக பின்பற்றி, முந்திசெல்லுதலை தவிர்த்து, அவசியமற்ற வேகத்தை குறைத்து ஓட்டினாலே உங்கள் பயணம் ரம்மியமானதாக மாறும். மனித மாண்பின் உயிர்களின் மதிப்பீடுகளை அற்ப ஆயுளில் குலைத்து விடவும் வேண்டாம்.. சாலைகளை மயானங்களாக்கி விடவும் வேண்டாம்.

English summary
Students die more in road traffic. So, traffic guards ask parents not to buy two wheelers. They have also requested parents not to allow students to drive two-wheelers before the 18-year-old
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X