For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறந்த பிறகும் பிரிட்ஜோவுக்கு தொடரும் அநீதி!

இறந்த பிறகும், சடலத்தை கூட உரிய மரியாதையோடு புதைக்க முடியாமல் வேதனையில் உள்ளனர் பிரிட்ஜோ குடும்பத்தார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சுட்டு கொலை செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர், பிரிட்ஜோவின் உடலை அவரது குடும்பத்தார் வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசிடமிருந்து உறுதியான ஒரு பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த குடும்பத்தாருக்கு இதுவரையில் குறைந்தபட்சம் ஒரு இரங்கலை கூட பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ தெரிவிக்கவில்லை.

தமிழக மீனவர்கள் நிலைமை என்பது விவசாயிகள் நிலைமையை விட மோசமானது. கன்னியாகுமரி முதல் காசிமேடுவரை ஏதாவது ஒரு பிரச்சினையை தினம் தினம் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும், கடல்தான் எங்கள் வீடு. முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும், இதுதான் எங்கள் வாழ்க்கை" என படகோட்டி திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிய வலி மிகுந்த வரிகளுக்கான காரணங்கள் இன்னமும் மீனவர்களின் வாழ்க்கையில் மாறவில்லை.

படாதபாடு

படாதபாடு

புயல், சூறாவளி, மோதல்கள், பிற நாட்டு துப்பாக்கி சூடு, கடல்கொள்ளையர்கள் அட்டூழியம், விபத்து என எத்தனையோ இடர்களுக்கு நடுவே அவர்கள் வாழ்ந்தாலும், வாலி கூறியதை போல, "ஒரு ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்" என்ற வரிகளுக்கு ஏற்பத்தான் அவர்கள் நிலை உள்ளது.

மீனவர்கள் வாக்கு வங்கி

மீனவர்கள் வாக்கு வங்கி

கடலில் தொழில் செய்வதாலேயே மீனவர்களை ஏதோ வேறு நாட்டுக்காரர்களை பார்ப்பது போன்ற பார்வைதான் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. அரசுகளும், அரசியல்வாதிகளும் கூட அவர்களை மதித்து, கோரிக்கைகளை பரிசீலிப்பது வெகு அரிது. இதற்கு காரணம், சுமார் 10 லட்சம் எண்ணிக்கையிலுள்ள மீனவர்கள் பரந்துபட்டு வாழ்வதுதான்.

இரண்டாம் தரமாக மதிக்கிறார்கள்

இரண்டாம் தரமாக மதிக்கிறார்கள்

அதாவது, வாக்கு வங்கி சிதறிக்கிடக்கிறது. எந்த ஒரு தொகுதியிலுமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக மீனவ சமூகம் இல்லை. அப்படித்தான் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே, பிற ஜாதிக்காரர்களின் எண்ணிக்கையை எண்ணிப்பார்த்து போட்டியிட சீட் கொடுக்கும் அரசியல் கட்சிகள், மீனவர்களை எப்போதுமே 'சாய்ஸில்தான்' விடுகின்றன.

மதிப்பு இல்லை

மதிப்பு இல்லை

அரசுகளும், அரசியல்வாதிகளும், மீனவர்களை, வாக்கு வங்கியாகத்தான் பார்க்கவில்லை, நம்மிடையே வாழும் சக ஜீவனாக கூட அவர்களை கருதுவதில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இதோ கண்முன் இன்னொரு உதாரணம்தான், பிரிட்ஜோவின் கொலை. இம்முறை தமிழகம் முழுக்க மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வும், அதனால் ஏற்பட்ட அதிர்வுகளும்தான், உள்ளூர் அரசியல்வாதிகளை தங்கச்சிமடம் நோக்கி தள்ளிச் சென்றது. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு செய்வது என்ன?

விசாரணை

விசாரணை

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால்தான் விசாரணை நடத்தப்போவதாக இலங்கை அறிவித்துள்ளது என்று மார்தட்டுகிறார்கள் தமிழக பாஜகவினர். ஆனால் இலங்கை விசாரணை லட்சணம் பற்றி யாருக்குத்தான் தெரியாது? இலங்கை நடத்தும் விசாரணைகள் எந்த நிலைமையில் உள்ளது என்பது வரலாறு கண்முன் வைக்கும் காட்சி. விசாரணை என்ற பெயரை சொல்லி விவகாரத்தை ஆறப்போட நடக்கும் முயற்சியை தங்கச்சி மடம் மீனவர்கள் மட்டுமல்ல, மொத்த தமிழகமுமே அறிந்துதான் வைத்துள்ளது.

தாயாரின் பெருந்தன்மை

தாயாரின் பெருந்தன்மை

ஏற்கனவே ஒருமுறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிய பிரிட்ஜோ மீண்டும் கடலுக்கு சென்று குண்டடிபட்டு இறந்துள்ளார். இப்போது அவரது சகோதரரும் மீன்பிடி தொழிலை தொடரப்போவதாகத்தான் சொல்லியுள்ளார். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை. வேறு தொழிலும் தெரியாது. ஆனாலும் பெருந்தன்மையாக, பிரிட்ஜோவின் தாயாரோ, தனது மகன் சாவே இறுதியாக இருக்க வேண்டும் என்றும், இனி ஒருவரும் சாகக்கூடாது என்பதே தனது கோரிக்கை என்று கூறியுள்ளார்.

சுஷ்மாவின் பாராமுகம்

சுஷ்மாவின் பாராமுகம்

பிரிட்ஜோவின் தாயாருக்கு இருக்கும் பெருந்தன்மை, சுஷ்மாசுவராஜுக்கு இல்லையே. சுஷ்மா நேரில் வந்து மீனவர்கள் பிரச்சினையை கேட்டால்தான், பிரிட்ஜோவின் உடலை வாங்குவோம் என கூறி போராட்டம் நடந்துவரும்போதிலும், ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை சுஷ்மா. உயிரோடு இருக்கும்போதுதான் அவல நிலை என்றால், இறந்த பிறகும், சடலத்தை கூட உரிய மரியாதையோடு புதைக்க முடியாமல் வேதனையில் உள்ளனர் பிரிட்ஜோ குடும்பத்தார். பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் கள்ள மவுனம், மீனவர்களின் உள்ளத்தில் எரியும் நெருப்புக்கு நெய் வார்த்தபடி உள்ளது.

English summary
Why Sushma Swaraj didn't made any comment on Tamilnadu fisherman killing?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X