For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைவரே! உங்கள் மகனுக்காக என்னை அவமானப்படுத்தியது நியாயமா..? கே.பி.ராமலிங்கம் கேள்வி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி அக்கட்சித் தலைவர் கருணாநிதிக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட கே.பி. ராமலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தல் தோல்வியை முன்னிட்டு தி.மு.க.வில் இருந்து விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட 33 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் கட்சி அனுப்பும் கடிதத்துக்கு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பதில் அளிப்பேன் என்றும் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராசிபுரத்தில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கருணாநிதிக்கு எழுதிய விளக்க கடிதத்தை கே.பி. ராமலிங்கம் வெளியிட்டார்.

Suspended DMK leader K P Ramalingam slams MK Stalin

அதில் ராமலிங்கம் கூறியிருப்பதாவது:

1990 ஆம் ஆண்டு இப்போது போன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது இயக்கம் தோற்ற நிலையில் தங்களிடம் என் அரசியல் வாழ்வை ஒப்படைத்து தி.மு.க.வில் இணைந்தேன். தாங்களும் இந்த 24 ஆண்டுகளில் என்னை உங்கள் பிள்ளையாக கருதி 3 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும், ஒருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தும் நாடாளுமன்ற மக்களவையில் பணியாற்றுவதற்கும் தற்போது 2010 முதல் மாநிலளங்களவையில் பணியாற்றுவதற்கும் வாய்ப்பளித்தீர்கள்.

அது மட்டுமல்லாமல் என் குழந்தைகளுக்கு சிந்தாமணி, அதியமான் என்று பெயர் சூட்டியும் என் குடும்பத்தின் பாதுகாவலராக இருக்கின்றீர்கள்.

என் வாழ்நாளில் தங்களை நன்றிக்குரியவராகத்தான் பார்க்கிறேன். என் தந்தை இல்லாத நிலையில் தங்களை என் தந்தை இடத்தில் வைத்துதான் வணங்குகிறேன். தங்கள் குடும்பத்தைச் சார்ந்த அனைவரிடமும் பாசத்துடன்தான்-தலைவர் குடும்பம் என்ற பக்தியுடன்தான் பழகி வருகிறேன்.

அவமானப்படுத்துவதா?

ஆனால் அதில் உங்களது பிள்ளைகளில் ஒருவருக்கு என்னை பிடிக்கவில்லை என்பதற்காக கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி என்னை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

கடந்த 10 ஆண்டு காலமாக எனக்கு நமது கட்சியில் அரசியலில் அதிகாரம் படைத்த அந்த பிள்ளையால் ஏற்பட்ட அவமானங்களை நீங்கள் ஏன் சரிபடுத்தவில்லை?.

அவர் சுற்றுப்பயணம் வரும்போது 2 மணி நேரம் 3 மணி நேரம் ரயிலடியிலும் சாலை ஓரங்களிலும் கால்கடுக்க சால்வையை தூக்கிக்கொண்டு நின்றால் காரில் அமர்ந்து கொண்டு கூட்டத்திற்குள் சிக்கி தவிக்கும் எங்களைப் பார்த்து ஒரு புன்முறுவல்கூட இல்லாமல் ஏதோ அடிமை ஒருவன் தங்களுக்கு சேவை செய்ய நிற்கிறான் என்பது போல பார்ப்பது; முக்கிய நிகழ்வுகளில் எங்கள் பெயரை போட வேண்டாம் என்பது-நாங்கள் வகிக்கும் பொறுப்பை கேலி பேசுவது-தான் நிர்வகிக்கும் அணிதான் சிறந்தது என தனக்குத்தானே மார்தட்டி எங்களை தோழர்கள் முன்பே மட்டமாக பேசியது தாங்கள் அறியாததா?

ஏன் புறக்கணிப்பு?

வீரபாண்டியார் சேலம் மாவட்ட செயலாளராக இருந்த காலம் வரை சேலத்தில் நடந்த அத்தனை போராட்டங்கள்-தாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அது அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டிருந்ததை தாங்களால் மறுக்க முடியாது.

ஆனால் தற்போது ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஏன் தேர்தல் பணிக்குழுவில் என் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அந்த அரசியல் அதிகாரம் படைத்த பிள்ளையிடம் தாங்கள் ஏன் கேட்கவில்லை? நாடாளுமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் கிரிமினல் குற்றவாளிகளுக்கு கூட இடம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் எனக்கு ஏன் இடம் அளிக்கப்படவில்லை என்று தேர்தலை முன்னின்று நடத்திய அந்த பிள்ளையிடம் தாங்கள் ஏன் கேட்கவில்லை?

நான் கட்சியில் சேர்ந்த காலத்திலேயே திருச்சியில் நடைபெற்ற 6வது மாநில மாநாட்டில் என்னை பேச அனுமதித்த தாங்கள் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் என்னை பேச அனுமதிக்காதது ஏன் என்று அந்த மாநாட்டின் சூத்திரதாரியாக இருந்த தங்கள் பிள்ளையை கேட்காதது ஏன்?

என்ன குற்றம் செய்தேன்?

இப்படி இன்னும் நூற்றுக்கணக்கான ஆதங்கங்கள் என் உள்ளத்தில் இருக்கின்ற நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தவறு செய்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு என்ன தவறு செய்தாய் என்று கூட என்னை கேட்காமல் நான் வகித்த பொறுப்புகளை நீக்கியும் ;கழகத்தைவிட்டு தற்காலிகமாக நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டு தலைமை கழகத்தின் பெயரில் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 1 வார காலத்திற்குள் பதிலும் கேட்டுள்ளார்கள்.

என் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது? யார் சுமத்தினார்கள்? கழக வேட்பாளர்களுக்கு எதிராக எந்த பகுதியில் நான் ஓட்டு கேட்டேன்? எந்த கூட்டத்தில் கழகத்திற்கு எதிராக பேசினேன்? என்ற விவரங்கள் இல்லாமல் சட்டதிட்ட விதி 37 பிரிவு 4-ன் படி ஒழுங்கு நடவடிக்கையென்றால் அதுவும் ஊடகங்கள்-பத்திரிக்கைகள் மூலம் நடவடிக்கையென்றால்-இது கழகத்திற்கு 24 ஆண்டுகள் உழைத்த உங்கள் தொண்டனுக்கு அவமானமாக இருக்காதா?

இந்த அவமானத்தை சுமந்துகொண்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளின் அவலங்களை மேடையில் நான் முழங்க முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? சுயமரியாதை உணர்வும்-தன்மான உணர்வும் தி.மு.க.வின் உயிர் மூச்சு யென்றால் அது நமது தலைமைக்கு மட்டும்தானா? என்னை போன்ற உங்கள் தொண்டனுக்கு இருக்க கூடாதா?

தலைவர் கலைஞரின் செல்வாக்கு- தியாகம்-உழைப்பு இவைகளை கேடயமாக பயன்படுத்தி தலைமைக்கு வர துடிக்கும் தங்கள் பிள்ளை-தலைவர் கலைஞருக்கு தொண்டு செய்ய நினைப்பவர்களை அடிமைகளாக நடத்த தாங்கள் அனுமதிக்கலாமா?

இவைகள் என் இதயத்தை நொறுங்கச் செய்யும் கேள்விகள். இந்த நிலையில் தலைமை கழகத்திற்கு, என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கு ஆதாரம் வழங்கப்படாத நிலையில் என்ன பதில் சொல்வது?

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அவைகள் என்பது மட்டுமே என்னுடைய பதிலாக ஏற்றுக்கொள்ள பணிவன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.

English summary
The Suspended DMK senior party leader and Rajya Sabha member K P Ramalingam on Wednesday slams Karunanidhi's son MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X