For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.வி.எஸ் (வசூல்ராஜா) கல்லூரி மர்மங்கள்... தடுமாறும் மாணவர்கள்... என்ன செய்யப்போகிறது அரசு...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மூன்று மாணவிகளின் மர்ம மரணத்திற்கு பிறகுதான் அங்கீகாரம் இல்லாத எஸ்.வி.எஸ் மருத்துவ கல்லூரி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் பணம் கட்டி படித்த மாணவர்களின் நிலைதான் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளியில் வகுப்பறையை கூட்டினாலே படம் பிடித்து போட்டு குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால் லட்சக்கணக்கில் பணம் கட்டி படித்த கல்லூரியில் கட்டிடம் கட்டுவது முதல் கழிப்பறை கழுவுவது வரை மாணவர்களே செய்துள்ளனர். எந்த விட அடிப்படை வசதியுமே இல்லாத கல்லூரியில் படித்து தேர்ச்சியும் பெறாமல் பட்டமே வாங்காமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவ மாணவிகள்.

மாணவ, மாணவிகளே நோயாளிகளாகவும், மருத்துவர்களாகவும் நடித்துள்ளனர். கொத்தனார், சித்தாள் வேலைகள் செய்துள்ளனர். மூன்று மாணவிகளின் மரணத்திற்குப்பிறகுதான் இந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 பேர் கடந்த 24ம்தேதி மாலை கல்லூரியின் எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். அவர்கள் 3 பேரும் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் புகார் கூறினார்கள். அதன்பேரில், கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி இவர்களது மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் புழல் சிறையில் வைக்கவும், 28ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வாசுகியை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். 3 பேரின் மரணத்திற்குப் பிறகு கல்லூரிக்கு சீல் வைத்தவர்கள், கடந்த 7 ஆண்டுகாலமாக மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

யார் இந்த வாசுகி

யார் இந்த வாசுகி

சின்ன சேலத்தில் ஹோமியோபதி டாக்டராக இருந்த சுப்ரமணியத்திடம் உதவியாளராக இருந்த வாசுகி அவரையே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வலதுகரமாக இருந்தவர் ஆதி திராவிடர் மக்கள் கட்சியின் நிறுவனர் பெரு வெங்கடேசன். இவர்தான் மாணவ, மாணவிகளை மிரட்டும் வேலையை செய்து வந்தாராம். மாணவிகள் மரண வழக்கில் ஜனவரி 27ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

பாதியில் நிறுத்திய வாசுகி

பாதியில் நிறுத்திய வாசுகி

எஸ்.வி. எஸ் கல்லூரி துவங்கிய போது, அதன் முதல் பேட்சில், அதன் தாளாளரான வாசுகி சுப்ரமணியனும் யோகா படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், தேர்வு பயத்தில் படிப்பை தொடராமல் பாதியில் படிப்பை நிறுத்தியவராம். முதல் பேட்சில் வாசுகியுடன் சேர்ந்து படித்த மாணவர் மிஷாவேல் என்பவர் இதனை கூறியுள்ளார். எங்கள் பேட்ச்சில் சேர்ந்த பத்து மாணவர்களில், மூவர் மட்டுமே முழுவதுமாக படிப்பை முடித்தோம். அதில் இருவர் மட்டுமே சான்றிதழ் பெற்றோம் என்று கூறியுள்ளார்.

கொத்தனார், சித்தாள் வேலை

கொத்தனார், சித்தாள் வேலை

பல்கலைகழக தேர்வில் தேர்ச்சி அடைய வைப்பதாக கூறி, சில மாணவர்களிடமிருந்தே தாளாளர் வாசுகி பணம் பறித்தார். ஆனால் அவர்களை வாசுகியால் தேர்வடைய வைக்க முடியவில்லை என்று குற்றம்சாட்டும் மாணவர்கள், கட்டடம் கட்டுவது கர்மா யோகா என்று யோகாவிற்கு புது விளக்கம் கூறி, கல்லூரி நிர்வாகம் அதன் மாணவர்கள் அனைவரையும் கல்லூரிக்கான கட்டடம் கட்டும் வேலையில் ஈடுபடுத்தினார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் டிப்ளமோ மட்டுமே முடித்த வாசுகி, யோகா கல்லூரியை இத்தனை ஆண்டுகளாக நிர்வாகம் செய்து வந்துள்ளார்.கல்லூரி கழிப்பறைகளை சுத்தம் செய்ய, கல்லூரிக்கான புது கட்டடம் கட்ட மாணவர்களை வற்புறுத்தியுள்ளார். 'இது கர்மா யோகா; இதை நீங்கள் செய்யவில்லை என்றால் இன்டெர்னல் மார்க்கில் கை வைப்போம் என்று கூறி மிரட்டியுள்ளார்.

வசூல்ராஜா பாணியில்

வசூல்ராஜா பாணியில்

கமல் நடித்த வசூல்ராஜா படத்தில் ரவுடிகளை நோயாளிகளாகவும், டாக்டர்களாகவும் நடிக்க வைத்திருப்பார்கள். செட் அப் மருத்துவமனை நொடியில் தயாராகிவிடும். இப்படித்தான் எஸ்.வி.எஸ் கல்லூரியில் மருத்துவர், பேராசிரியராக மாணவர்கள் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியரை இல்லை

ஆசிரியரை இல்லை

எங்களை கொத்தடிமைகள் போலவே நடத்தினார்கள். படிப்பதற்கு எங்களுக்கு நேரம் கொடுப்பதில்லை. பாடம் நடத்துவதற்கு முறையான மருத்துவ ஆசிரியர்கள் யாரும் கிடையாது. தேர்வுக்கு ஒருவாரத்துக்கு முன்பு எங்கிருந்தாவது ஒருவரை அழைத்துவந்து பாடம் நடத்துவார்கள். அதை படித்து நாங்கள் எப்படி தேர்வு எழுத முடியும். அனைவரும் தேர்ச்சி பெற முடியாமல் தவித்தோம் என்கின்றனர்.

ஆய்வு நடத்த வந்தது எப்படி?

ஆய்வு நடத்த வந்தது எப்படி?

நாங்கள் மனுகொடுக்காத இடமே இல்லை. எல்லா கதவுகளும் அடைப்பட்டுவிட்டது. இப்போது 3 மாணவிகள் உயிரிழந்த பிறகுதான், எல்லா விஷயமும் வெளிவருகிறது. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதி வழங்கவில்லை என்று கூறியிருக்கிறார். அனுமதி வழங்காமலா அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்தார்கள் என்று கேட்கின்றனர் மாணவர்கள்.

துணைவேந்தர் கீதாலட்சுமி

துணைவேந்தர் கீதாலட்சுமி

எஸ்.வி.எஸ். கல்லூரியின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு பிரித்துக் கொடுக்க வேண்டும். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமியை வியாழக்கிழமை சந்தித்து மனுக் கொடுத்துள்ளனர்.

படிப்பு பாதிக்காதாம்

படிப்பு பாதிக்காதாம்

இதனைப் பெற்றுக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமியோ, இந்தக் கல்லூரியின் விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களது படிப்பு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களின் தேர்வு மையம் மற்றொரு கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது. கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார். எல்லாம் பாழான பிறகு இனி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாரோ அவருக்குத்தான் வெளிச்சம்.

வாசுகி வாக்குமூலம்

வாசுகி வாக்குமூலம்

நேற்று கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்பு வாசுகியை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர், இந்த வழக்கில் போலீசார் வேண்டும் என்றே தன்னை சிக்க வைக்க முயற்சிப்பதாக கூறினார். இறந்த மாணவிகள் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் இதுவரை கல்லூரிக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டது கிடையாது.

மாணவிகள் படுகொலை

மாணவிகள் படுகொலை

கல்லூரியை மூட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சிலர் செயல்பட்டு வந்தனர். எங்கள் கல்லூரியை மூடி காட்டுகிறேன் என போலீஸ்காரர் ஒருவர் சபதமிட்டு சென்றார். 3 மாணவிகள் கைகளை ஒன்றாக கட்டிக் கொண்டு, எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்? திட்டமிட்டு, 3 மாணவிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் எனக்கு எதிராக போலீசார் திசை திருப்பி உள்ளனர். இதில், தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

போலீஸ் காவலில் வாசுகி?

போலீஸ் காவலில் வாசுகி?

பின்னர் வாசுகி அங்கிருந்து கடலூர் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார். இன்று மதியம் அவர் மீண்டும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதையொட்டி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாசுகியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சின்னசேலம் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். வாசுகியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்தீப் கேள்வியும் ஸ்மிருதி பதிலும்

மாணவிகள் மரணம் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிக்கு பத்திரிகையாளர்
ராஜ்தீப் சர்தேசாய் தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக சில கேள்விகளை கேட்டுள்ளார். ராஜ்தீப்
தனது பதிவில், தமிழகத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அத்தகையை கொந்தளிப்பை
ஏற்படுத்தாது ஏன்? இத்தகைய மோசடி கல்லூரிகள் மீது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
நடவடிக்கை எடுக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மாநில அரசு தொடர்புடையது

மாநில அரசு தொடர்புடையது

அதற்கு டுவிட்டர் தளத்திலேயே தனது பதிலை பதிவு செய்திருந்த ஸ்மிருதி இராணி,
"சம்பந்தப்பட்ட கல்லூரி எனது அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. இது மாநில அரசு
சம்பந்தப்பட்ட விஷயம்" என பதிலளித்தார்.

கல்லூரி அங்கீகாரம்

கல்லூரி அங்கீகாரம்

ஆனால் ராஜ்தீப் தனது கேள்விகளைத் தொடர்ந்தார். அடுத்த கேள்வியில், "தாங்கள் சொல்வது உண்மையே. இவ்விவகாரத்தில் முதல் பொறுப்பு தமிழக அரசினுடையதே. இருந்தாலும் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அங்கீகாரம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வாயிலாகவே வந்துள்ளது என கேள்வி எழுப்பினார்.
அந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ஸ்மிருதி, "இவ்விவகாரத்தில் நீங்கள் என்னை ஏதோ ஒருவகையில் சிக்கவைக்க நினைப்பதாக தோன்றுகிறது. ஆனால், அதற்கு முன் சம்பவம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்" என பதிலை பதிவு செய்தார்.

நான் ரொம்ப பிசி

நான் ரொம்ப பிசி

அப்போதும்கூட சமரசம் ஆகாத ராஜ்தீப், "மோசடி கல்லூரிகளை கண்காணிக்க, கட்டுப்படுத்த ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டால் மாணவ சமுதாயமும், பெற்றோரும், ஊடகமும் துணை நிற்கும்" என்ற யோசனை தெரிவித்தார். இவ்வாறாக நீண்டு கொண்டிருந்த ட்வீட்டுகளுக்கு, "நான் அவசர பணியில் இருக்கிறேன். நீங்கள் என்னை நேர்காணல் செய்து உங்கள் கேள்விகளுக்கு பதில் பெற்றுக்கொள்ளுங்கள். இரவு வணக்கம்" என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்மிருதி.

யார் பொறுப்பு

யார் பொறுப்பு

மத்திய அரசைக் கேட்டால் மாநில அரசை கை காட்டுவதும், இப்போது ஆளும் மாநில அரசோ அப்போதைய மத்திய அமைச்சரும், அப்போது ஆண்ட மாநில அரசும்தான் பொறுப்பு என்கிற ரீதியில் பதில் சொல்லி தப்பித்துக்கொள்கின்றனர். மூன்று மாணவிகளின் மரணத்திற்கும் மாணவர்களின் கல்விக்கும் யார் பொறுப்பேற்றுக்கொள்வார்களோ?

English summary
TN Govt is keeping deepening silence over the SVS college mysteries and students are in a great mess.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X