சுவாதி கொலை வழக்கு சமூக விழிப்புணர்வு படமே... இயக்குநர் எஸ். டி ரமேஷ் செல்வன் : வீடியோ
சென்னை: சுவாதி கொலை வழக்குத் திரைப்படத்தில் சுவாதியையோ அல்லது ராம்குமாரையோ தவறாக சித்தரிக்கவில்லை. இரு குடும்பத்தாருக்கும் படத்தை போட்டுக் காண்பித்து தவருகள் இருப்பதை சுட்டிக் காட்டினால் அதை சரி செய்வோம் என படத்தின் இயக்குநர் எஸ்.டி ரமேஷ் செல்வன் கூறியுள்ளார்.
நிர்பயா கொலைக்கு அடுத்து, மொத்த இந்தியாவையும் உலுக்கியது சென்னை மென்பொறியாளர் சுவாதியின் கொலை. கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் அங்கிருந்தவர்களின் கண் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார் சுவாதி. இந்த பயங்கர கொலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த கொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சுவாதி கொலை வழக்கு என்று திரைப்படம் எடுக்கிறார் இயக்குநர் எஸ். டி ரமேஷ் செல்வன். இவர் விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கியவர்.
இந்த படத்தை திரையிடக் கூடாது என சுவாதியின் தந்தை காவல் துறையில் புகார் கொடுத்தார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் செல்வன், இந்த படத்தில் சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை. அதே போல் ராம் குமாரையும் தவறாக சித்தரிக்கவில்லை. சமூகத்துக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலேயே இது எடுக்கப்பட்டுள்ளது.
படத்தை இரு குடும்பத்தாருக்கும் போட்டுக் காட்டுவோம். ஏதேனும் தவறுகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினால் அதை சரிசெய்வோம். மேலும் படத்தில் வரும் லாபத்தில் சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்துக்கும் கொடுப்போம் என கூறியுள்ளார்.