For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதி கொலை... ஆபரேசன் ராம்குமார்... சாதுர்யமாக செயல்பட்டு கைது செய்த போலீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக போலீசாரின் தூக்கத்தை தொலைக்க வைத்த சுவாதி கொலை வழக்கில் 8 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கொலையாளி ராம்குமாரை கைது செய்துள்ளனர். சென்னையில் சுவாதியை கொடூரமாக கொன்று விட்டு நெல்லைக்கு தப்பிச்சென்ற ராம்குமார், ஒருவாரகாலமாக ஒன்றும் அறியாத அப்பாவியாக ஊரில் தங்கி ஆடு மேய்த்த ராம்குமாரை பொறி வைத்து பிடித்த போலீஸ், தங்களின் மீது விழுந்த கறையை துடைத்துள்ளது.

10 தனிப்படை அமைத்து தேடியதில் வியாழக்கிழமையே கொலையாளி இருந்த இடத்தை கண்டுபிடித்த போலீஸ், சாதுர்யமாக செயல்பட்டு மடக்கியுள்ளனர். சுவாதியின் கொலை நாடு முழுவதும் பரபரப்பாக பரவ காரணம் கொலை நடந்த இடமும், கொலை நடந்த விதமும்தான்.

Swathi murder Police team arrest Ramkumar in Tirunelveli

வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடந்த இந்த கொலை அதிகாலை, இரவு ஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அரசியல்தலைவர்களின் கண்டனம் வேறு சென்னை பெருநகர காவல்துறையின் தூக்கத்தை தொலைக்கச் செய்தது.

கடந்த 24ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை தனிப்படை போலீசார் இரவு பகலாக தீவிரமாக கொலையாளியை தேடி அலைந்தனர். கொலையாளி யார்? அவன் எதற்காக சுவாதியை கொலை செய்தான் என்பது கடந்த ஒரு வாரமாகவே மர்மமாக இருந்தது.

இந்த கொலையில் போலீசாருக்கு துப்பு துலக்குவதற்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த கொலையாளியின் படம் மட்டுமே உதவியாக இருந்தது.

ஹைதராபாத் சென்று மெருகேற்றப்பட்ட அந்த படத்தை வைத்துக்கொண்டு சூளைமேடு பகுதியில் சல்லடை போட்டு சலித்தனர். சூளைமேட்டில் ஒரு மேன்சன் காவலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேன்சனில் தங்கி இருக்கும் ஒரு வாலிபர் போன்றே கொலையாளி இருப்பதாக வியாழக்கிழமை இரவு இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் அந்த காவலாளியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராம்குமார் எங்கே என்று போலீசார் விசாரித்தனர். அப்போது 24, 25ம்தேதிகளில் மேன்சனில் தங்கி இருந்த ராம்குமார், யாரிடமும் சொல்லாமல் வெளியேறியது தெரிய வந்தது.

இதுவே ராம்குமார் மீதான சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது. ராம்குமாதின் சொந்த ஊர் மற்றும் முழு விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். ராம்குமாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பன்பொழி பகுதியில் உள்ள தென்பொத்தை, மீனாட்சிபுரம் என்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி விக்கிரமனுடன் வெள்ளிக்கிழமையன்று காலை ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அந்த தனிப்படை போலீசார் நேற்று காலை முதல் மீனாட்சிபுரம் கிராமத் தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலையாளி ராம்குமார் வீட்டையும், அவன் எங்கே செல்கிறான் என்பதையும் ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணித் தனர்.

நேற்று காலை 10 மணியளவில் ராம்குமார் பக்கத்தில் உள்ள மலை பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். தனது வீட்டில் உள்ள ஆடுகளை அந்த பகுதிக்கு கொண்டு சென்றான். அவனை தனிப் படை போலீசார் பின் தொடர்ந்து சென்று படம் பிடித்து சென்னை தனிப்படை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்த படத்துடன் மீனாட்சிபுரத்தில் எடுக்கப்பட்ட கொலையாளியின் படத்தை தனிப்படை போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது சுவாதியை கொன்றது இந்த ராம் குமார்தான் என்பது தனிப்படை போலீசாருக்கு 100 சதவீதம் உறுதியாக தெரிய வந்தது.

ராம்குமார் தப்பிவிடாமல் எப்படி பிடிப்பது ஆலோசனை நடத்திய போலீசார், பகலில் ராம்குமாரை சுற்றி வளைத்தால் கிராமத்தில் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கருதி இரவில் பிடிக்க முடிவு செய்தனர்.

இரவு 11 மணிக்கு 3 போலீஸ் வேன் களில் போலீசார் மீனாட்சி புரம் கிராமத்தை சுற்றி வளைத்தனர். ஒரு பிரிவு போலீசார் கிராமத்தில் வெளி பகுதியில் அரண் போல நின்றனர். 5 போலீசார் மட்டும் கிராமத்துக்குள் சென்றனர்.

சரியாக இரவு 11 மணிக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொலையாளி ராம்குமாரின் வீட்டு கதவை தட்டினார். ராம்குமாரின் தந்தை பரம சிவம் கதவை திறந்தார். போலீசாரை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன போலீஸ்காரங்க வந்திருக்காங்க என்று அவர் பயத்தில் அலறினார்.

இதை கேட்டதும் வீட்டுக்குள் படுத்திருந்த ராம்குமார் அலறியடித்தபடி எழுந்தான்.போலீசார் எப்படியோ தன்னை மோப்பம் பிடித்து சுற்றிவளைத்து விட்டார்களே என்ற அதிர்ச்சியுடன் அவன் வீட்டின் பின்பக்கமாக ஓடி னான். தப்பி செல்ல அவன் முயன்றான்.இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அவனை பிடிக்க விரட்டினார். ஆனால் ஒரு கல்லில் மோதி தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

இதற்கிடையே வீட்டின் பின்பகுதிக்கு ஓடிய ராம் குமார் வீட்டை சுற்றி போலீஸ் நிற்பதை அறிந்ததும் இனி தப்பிக்க முடியாது என்று உணர்ந்தான். உடனே அவன் தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தின் இரு பக்கமும் அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.

ரத்தம் பீறிட்டு வழிய அவன் அலறியபடி கீழே சாய்ந்தான். அதற்குள் போலீசார் அவனை சுற்றி வளைத்தனர். அவனை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் அவன் கழுத்தில் துணியால் கட்டினார்கள். பிறகு அவனை வேனில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு 11.30 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவல் தெரிந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். ராம்குமாரை காப்பாற்ற கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை உணர்ந்த போலீசார் அவனை தென்காசியில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்தனர்.

இரவில் 5 டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ராம்குமாரை காப்பாற்ற அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். ராம்குமாருக்கு கழுத்துப் பகுதியில், மொத்தம் 18 தையல் போடப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் வைத்தே ராம்குமாரிடம் போலீசார் வாக்குமூலம் பெற முயற்சித்து வருகின்றனர்.

கொலையாளி யார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் சென்னை போலீசார் துரிதமாக செயல்பட்டு சுவாதியை கொலை செய்த கொலையாளி ராம்குமாரை ஒரே வாரத்தில் கைது செய்துள்ளது பாராட்டுதலுக்கு உரியதே எனினும் இதேபோல சூளைமேடு அருணா கொலை வழக்கில் கொலையாளி யார் என்று தெரிந்தும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

English summary
Tamil Nadu Police cleaver opertion for Swathi murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X