For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்கள் நிலை மாறவில்லை.. இலங்கை அரசுக்கு கால நீடிப்பு கூடாது.. கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழர்களின் நிலை மாறவில்லை என்றும் இலங்கை அரசுக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது என்றும் தமிழகத்தில் செயல்பட்டுவரும் இயக்கங்கள் மற்றும் கட்சிகள் கோரியுள்ளது. அதற்கான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் தற்போது இனங்களுக்கிடையே அமைதி நிலவுவதாகவும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதாகவும் கூறி இலங்கை அரசு கால அவகாசம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் குணங்குடி அனீபா, திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேச விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழர் தேசிய முன்னணியின் அய்யநாதன், பேராசிரியர் எஸ். டி. பி. அய்., கட்சியின் கரீம், இராமு. மணிவண்ணன், பேராசிரியர் சரசுவதி, இயக்குநர் புகழேந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பேரியக்கம், ஆதி தமிழர் பேரவை, ம.தி.மு.க, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, நாம் தமிழர் கட்சி, இளந்தமிழகம், தமிழ்த் தேச குடியரசு இயக்கம், தமிழர் எழுச்சி இயக்கம், தமிழர் விடியல், சி.பி. எம் எல் மக்கள் விடுதலை, மே 17 இயக்கம், தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகளின் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

Tamil activist’s memorandum to UNO

அப்போது அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கை :

கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது. "கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியான மற்றும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பதை உறுதி செய்வது" என்பதே அந்த வாக்குறுதி.
15 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 13, 2017 அன்று, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா, இலண்டனில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது இலங்கை அரசுக்கு இது முதல் முறை அல்ல. 1948-ஆம் ஆண்டு இலங்கை பிரிட்டனிடமிருந்து விடுதலைப் பெற்ற உடனேயே பவுத்த சிங்கள பெரும்பான்மையினருக்கும் தமிழ்ச் சிறுபான்மையினருக்குமான சிக்கல்கள் தொடங்கிவிட்டன. 1956 முதல் தொடர்ந்து வந்த அரசுகள் சிங்கள பேரினவாதக் கோட்பாட்டினுள் நின்றே அரசியல் நடத்தினர். 1948 முதல் 2008 வரையிலான 60 ஆண்டுகளில், இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே இலங்கை அரசால் ஒரு சார்பாக கைவிடப்பட்டும் உள்ளன. 1958-ஆம் ஆண்டு, பவுத்த பிக்குகள் மற்றும் சிங்கள பேரினவாதிகளின் அழுத்தத்தைத் தாங்க இயலாமல் அன்றைய இலங்கை பிரதமர் பண்டாரநாயகே, தமிழர் தலைவர் செல்வநாயகத்துடன் தான் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலப் பிரதியை அனைவரும் பார்க்க கிழித்து எறிந்த நிகழ்வு சிங்கள அரசுகளின் மனப்போக்கை விளக்கும்.

இந்தப் பின்னணியில், இலங்கையில் நிலவும் சூழலை, மாறிவரும் அரசுகளை கடந்து பார்க்க வேண்டியது முக்கியமாகிறது. கடந்த மே 2009 உடன் இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. அதற்கு பிறகு தமிழர்களின் நிலையானது அதற்கு முன் இருந்ததை விட பல மடங்கு சீரழிந்து நிற்கிறது.

கடந்த மார்ச் 31, 2011 அன்று அய். நா. வின் பொதுச் செயலாளரின் வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி ஆகஸ்டு 2008 முதல் மே 13 2009 வரையிலான காலக்கட்டத்தில் ஏறத்தாழ 40,000 வரையிலான தமிழ் பொது மக்கள் இறந்து போயுள்ளனர். எஞ்சிய தமிழர்கள், வன்னியிலும் பிற இடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டும், அவர்களது சொந்த உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் உள்ளனர். தங்களது வாழ்வாதாரங்களை மறு கட்டமைப்பு செய்யவும் தங்கள் நிலங்களில் மீள் குடியேறவுமான அவர்களது உரிமைகளை இலங்கை இராணுவம் அவர்களிடமிருந்து பறித்து விட்டது. உலக நாடுகளிடமிருந்து இலங்கை அரசு பெறும் பணத்தைக் கொண்டு நடத்தப்படும் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது இலங்கை இராணுவமாக உள்ளது. தமிழர்களின் மரபுவழி தாய் மண்ணில் சிங்களரை குடியேற்றும் நோக்கில் இந்த வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காலம் காலமாக, வரலாற்று ரீதியாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளின் மக்கள் தொகை விகிதாச்சாரம் திட்டமிட்டு மாற்றி அமைக்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினரால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன.
மைத்திரிபால சிறிசேனா பதவி ஏற்றப் பிறகு எந்த வகையிலும் தமிழர்களின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

• பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், சிறைகளுக்குள் சிறையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சிறைகளில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குடும்பத்தினர் அவர்களை சந்திப்பது கடினமாக உள்ளது. வழக்கு விசாரணைகள் உரிய காரணமின்றி தாமதிக்கப்படுகின்றன. இதனால் தங்கள் மீதான வழக்குகளுக்கான தண்டனைக்குரிய காலத்தைக் கடந்தும் விசாரணைக் கைதிகளாகவே பலரும் சிறையில் வாடுகின்றனர்.

• காவல் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தின் நான்காவது மாடி சித்ரவதைகளுக்குப் பெயர் பெற்றதாகவே இன்னமும் விளங்குகிறது. அய். நா. மனித உரிமைக் குழுவில் இது தொடர்பில், ஏறத்தாழ 400 தனி நபர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

• நல்லிணக்கம் குறித்து பெரிதாக பேசும் சிறிசேனா அரசு இதுவரை தமிழர் தாயகப் பகுதியிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளவில்லை. 5 குடிமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்ற விகிதத்தில் இருக்கும் அதீத இராணுவ இருப்பானது தமிழ் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை பெரிதும் பாதிப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் உள்ளது. இராணுவத்தினர் கடைகள், பண்ணைகள், உணவகங்கள், சிறார் பள்ளிகள் என பொது மக்கள் நிறுவனங்களை நடத்துவது, மறைமுகமாக அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே உள்ளது.

• இலங்கை அரசு உருவாக்கியுள்ள உள்நாட்டு விசாரணைக் குழுவிடம் இந்த இராணுவத்தினர் முன் தங்கள் வாக்குமூலங்களை அளிக்க மக்கள் முன் வர மாட்டார்கள்.

• கடந்த அக்டோபர் 20, 2016 அன்று யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் எனும் இரு மாணவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடுவதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களே முன்னணியில் நிற்கின்றனர். எனவே இந்த இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதானது ஒட்டுமொத்த மாணவர்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே உள்ளது.

• கடந்த பிப்ரவரி 1 2010-இல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரால் 11,000 பேர் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இலங்கை அரசும் 11,000 பேர் முன்னாள் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என ஒப்புக் கொண்டுள்ளது. இந்த 30 பக்க அறிக்கைக்கு மிகப் பொருத்தமாக "விடுதலைப் புலிகள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் நிச்சயமற்ற நிலை" என்று தலைப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் யார் யார், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்ன நிலையில் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. இது அவர்களின் குடும்பங்களை கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றப் பிறகும் இந்த நிலை மாறவில்லை.

• கடந்த ஆகஸ்டு 7, 2016 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன், "இலங்கை அரசின் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி போடப்பட்டதாகவும் அதனால் பல போராளிகள் புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கு ஆளாகி இறந்ததாகவும்" தனக்கு புகார் வந்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பில் மேலதிக விவரங்களை தான் சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழ் மக்கள் சமூகம் இது தொடர்பில் பன்னாட்டு மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.

• நீதிக்காக எழும்பும் குரல்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் மற்றொரு ஆயுதம் பொய்யாக புனையப்பட்ட வழக்குகளும் அதை தொடர்ந்த கைதுகளும். போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டப் பிறகான கடந்த 7 ஆண்டுகளில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் நெடுகிலும், ஆண்களும் பெண்களுமாக பலரும் காரணமின்றி கைது செய்யப்பட்டனர். இந்நிலை சிறிசேனாவின் ஆட்சியிலும் தொடர்கிறது

• போரின் ஆகப் பெரிய விளைவுகளில் ஒன்று மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்தும், தங்கள் வாழ்வாதாராத்திற்கு நம்பியிருந்த நிலங்களிலிருந்தும் இடம் பெயர்ந்ததே. இவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள், என்றாவது ஒரு நாள் தங்கள் நிலங்களின் மீதான உரிமைகள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பானது பல்லாயிரக்கணக்கான மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்தும் வாழ்வாதாரங்களிலிருந்தும் தள்ளியே வைத்துள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் போரின் போதும் அதற்கு பின்னரும் இராணுவம் ஏராளமான நிலங்களை கையகப்படுத்தியது. கடந்த அரசும் தற்போதைய அரசும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட விரோதமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நிலங்களை பறிப்பதில் ஈடுபட்டனர். இவ்வாறு நில அபகரிப்புத் தொடர்பான சிக்கல்களை வருவாய்த் துறை இது வரையில் கவனிக்க மறுக்கிறது. கடந்த ஆண்டு ஆட்சி மாறியப் பிறகும் கூட இந்நிலையே தொடர்கிறது. ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் உள்ளுர் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, உணவு விடுதிகளையும் பண்ணைகளையும் இந்நிலங்சளில் நடத்தி வருகின்றனர்.

• தனி நபர்களின் நிலங்களை மட்டுமல்ல, மாவீரர் துயிலும் இல்லங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. தமிழ் மக்கள் புனிதமாக கருதும் இந்த துயிலும் இல்லங்களை இடித்து, சிலவற்றை கால்பந்து மைதானமாகக் கூட மாற்றியுள்ளது இலங்கை இராணுவம்.

• கடந்த 1989 முதல் தமிழ் மக்கள் தங்களுக்கு உயிர் துறந்த மாவீரர்களை நினைவு கூரும் வண்ணம் நவம்பர் 27-ஆம் தேதியை மாவீரர் நாளாக அனுட்டித்து வருகின்றனர். அந்நாளை தமிழ் மக்கள் அதீத புனித நாளாகவே கருதுகின்றனர். அன்று மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் 2009-க்குப் பிறகு, மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தின் அதீத இருப்பின் காரணமாகவும் ஒரு சில ஆண்டுகள் மக்கள் தங்கள் இல்லங்களிலேயே மாவீரர்களை நினைவு கூர்ந்தனர். ஒரு சில பொது நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. ஆனால் அரசு அக்காலக்கட்டத்தில் கூடுதல் படையினரை அனுப்பி மக்களை அச்சுறுத்த முயன்றது. கடந்த ஆண்டு (2016), தமிழ்த் தலைவர்கள் மாவீரர் நாளை பொது வெளியில் கடைபிடிக்க அனுமதிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தனா, கடந்த நவம்பர் 22, 2016 அன்று மாவீரர் நாளை பொதுவில் நடத்த அனுமதிக்க முடியாது எனவும், அவ்வாறு கடைபிடிப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இவற்றின் மூலம், தற்போதைய சிறிசேனா அரசு தனது முந்தைய அரசுகளிடமிருந்து எவ்வகையிலும் மாறுபடவில்லை என்பது தெளிவாகிறது. உண்மையான நல்லிணக்கத்தின் பால் இந்த அரசு அக்கறை காட்டவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது. தனது முந்தைய அரசுகளைப் போலவே இந்த அரசும் நடந்து விட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை மூடி மறைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. எனவே கால நீட்டிப்புத் தருவது என்பது நல்லிணக்க நடவடிக்கைகளை மேலும் சிதிலப்படுத்தவே செய்யும். அதன் மூலம் தமிழர் நிலையை மேலும் மோசமாக்கும்.

இலங்கை அரசு தொடர்ந்து தனது வாக்குறுதிகளை காக்க தவறிய போதும், அந்த வரலாற்றினை நன்கு அறிந்திருந்த போதும், அய். நா. மற்றும் அதன் மனித உரிமைக் குழு உள்ளிட்ட பன்னாட்டுச் சமூகம் இலங்கை அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. எனவே இலங்கை அரசுக்கு கூடுதல் நேரம் வழங்குவதைக் காட்டிலும் இலங்கை அரசின் மோசமான செயல்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடப்பாடு பன்னாட்டுச் சமூகத்திற்கு உள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகி வரும் மனித உரிமைச் சூழல், தமிழ் மக்களின் நிலை ஆகியவை குறித்தும் பன்னாட்டுச் சமூகம் அக்கறையும் புரிதலும் கொள்ள வேண்டும்.

அய். நா. மனித உரிமைக் குழு, அய். நா. வின் பாதுகாப்பு அவையை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு விசாரணை நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். இலங்கையின் இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணக் கூடிய சரியான பன்னாட்டு செயல் முறைகளை வகுப்பதே இன்றைய கட்டாயத் தேவையாக உள்ளது.

இந்தப் பின்னணியில் தமிழர்கள் தனி தேசம் என்பதையும் அவர்களுக்குரிய சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்து அவர்களுக்கென ஒரு நாடு அமைவதற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதுமே இலங்கையில் நிலவும் இனச் சிக்கலுக்கான ஒரே தீர்வு என நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.

English summary
Tamil activists will send memorandum to UNO to save Tamils and not extend time to Sri Lanka government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X