For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நா முத்துக்குமார்... பெரும் இழப்பின் வலி!

By Shankar
Google Oneindia Tamil News

-இர தினகர்

ஒரு சிலரை மட்டும் பார்த்தவுடன் நீண்ட நாள் பழக்கம் உள்ளவர் போல், அவர் மீது உடனடியாக ஒரு வித அக்கறையும் தோன்றும். அப்படிப் பட்டவர்கள் வாழ்நாள் நண்பர்களாக அமைவார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்தது. இதுவரையிலும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களிடம் மட்டுமே இத்தகைய நட்பு உண்டு.

உலகம் போற்றும் மாபெரும் கவிஞருடன், பார்த்தவுடன் பரஸ்பர தோழமையும், பாசமும், அக்கறையும் உணர முடிந்தது இறைவனின் அருள்தான், இல்லை இறைவனே கவிஞரின் வடிவத்தில் வந்தது போல் தான் இருக்கிறது.. இத்தனை சீக்கிரம் விடைப் பெற்றுக்கொள்ளவதற்காகவா அவ்வளவு ஆனந்தத்தை அள்ளித் தந்தீர்கள் கவிஞரே!

வேலை நிமித்தமாக படிக்கும் புத்தகங்கள் தவிர, எனக்கு செய்திகள் வாசிக்கும் பழக்கம் மட்டுமே தான். எதை நினைத்துச் சொன்னாரோ தெரியாது.நிறைய புத்தகங்கள் படியுங்கள், இலக்கியங்கள் படியுங்கள், அமெரிக்காவில் உங்களைப் போன்றோர்கள் செய்ய வேண்டியது ஏராளம் இருக்கிறது என்று அறிவுறுத்தினார். வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேவையான இன்னும் சில தனிப்பட்ட அறிவுரைகளையும் கூறினார்.

Tamil diaspora in US remembering Na Muthukkumar

ஒரு மாலை வேளையில் அவர் பாரதியார் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்க, நண்பர் மகேஷ் வருகைக்காக காத்திருக்கும் சூழலில் கவிஞரின் அணிலாடும் மூன்றில் புத்தகத்தை கையில் எடுத்தேன். முதல் இரண்டாம் அத்தியாயம் என தொடந்து கொண்டே இருந்தது. நான் படிப்பதைக் கவனித்த கவிஞர் 'எந்த உறவுப் பக்கத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே வருவார்.

அந்த உறவு பற்றி கூடுதலாக சில தகவல்களையும் சொல்வார். கவிஞர் முன்னிலையில் அவருடைய புத்தகத்தை படித்து முடித்து, உணர்வுகளையும் பரிமாறிக்கொண்ட அனுபவம் எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும்.. வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவும் தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும் கொடுத்தது.

காரில் சென்று கொண்டிருக்கும் போது, இந்தியாவில் இப்போது எத்தனை மணி எனக் கேட்பார். மகள் மகாலட்சுமியும் மனைவியும் முழித்துக் கொண்டிருக்கும் நேரம் என்று தெரிந்தவுடன் போனில் அழைத்து நான்கு மாதங்கள் மட்டுமே நிறைந்த மகளிடம் கொஞ்சுவார். இல்லை வளர்ந்த பெண்ணிடம் பேசுவது போல் உரையாடுவார். ஆச்சரியமாக இருக்கும்.

என்னுடைய மகளைப் பார்த்து, மகள் கிடைக்கபெற்ற நீங்கள் பாக்கியசாலி. அவளிடம் தினமும் கட்டாயம் ஏதாவது பேசிக்கொண்டே இருங்கள் என்று அன்புக் கட்டளை இட்டார். அவருடையை பாசத்தைப் பார்த்து, நீங்கள் மகளிடம் பேசுவது புதுமையாக இருக்கிறது என்று ஒரு முறை கேட்டும் விட்டேன். மனைவி வயிற்றில் இருக்கும் போதே பேசுவேன். ஒரு காலால் உதைப்பாள். இப்பவும் அதே போல் பேசும் போது இடது காலால் உதைப்பாள். போனில் பேசும் போது கூட அதைச் செய்கிறாளாம்.

அம்மாவிடம் பிடிவாதம் பிடிக்கக் கூடாது. தங்கைப் பாப்பாவை பார்த்துக் கொண்டாயா என்று மகனிடம் அக்கறையாக விசாரிப்பார். நான் விளையாடப் போயிட்டேன் என்றால், அப்பா ஊர்லே இல்லேல்ல. பாப்பாவை நீதானே பாத்துக்கணும் என்பார்.

அன்று பாசக்காரத் தந்தையாக மட்டுமே உணர்ந்தவைகள், இன்று அவையெல்லாம் ஒத்திகை போலல்லவா தெரிகிறது. எப்படி அய்யா இந்த பச்சிளங்குழந்தைகளை விட்டுப் பிரிய மனம் துணிந்தது.

மனைவியிடம் அவர் காட்டிய பாசமும் அளவிற்கடங்காதது. காரில் பயணத்தின் போது பேசுகிறாரே என்று, இறங்கிய பிறகு பேசுங்களேன் என்பேன். சரி சரி பேசலாம் என்பார். மனைவி விழித்திருக்கும் நேரங்களில், நினைத்தவுடன் பேசிவிடுவார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது.

மேடைகளில் அவர் பேசும் நேரங்களில் மட்டுமே கவிஞராக இருந்தார். மற்ற நேரங்களில் கவிஞருடன் இருக்கிறோம் என்று கிள்ளிப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

தங்கை சித்ராவுடனும் நண்பர் மகேஷ் உடனும் அளவில்லா பாசத்தைக் காட்டினார்.
அவர்களுடைய இலக்கியப் பேச்சில் நான் வேடிக்கைப் பார்ப்பவன் ஆனேன். தங்கை மகளிடம் 'சித்தப்பா' என்று உரிமையுடன் தன்னை அறிமுகப்படுத்திய பாசக்காரக் கவிஞர். அவரை நினைத்தால் அவர் காட்டிய பாசமும் நேசமும், உரிமையும், அக்கறையும் தான் ஞாபகம் வருகிறதே தவிர தேசிய விருது பெற்ற கவிஞர் என்ற அடையாளம் அல்ல.

சில வாரங்கள் முன்னர்தான் தொலைபேசியில்அழைத்தார். சென்னை வரும் போது வீட்டிற்கு கட்டாயம் வரவேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார். நள்ளிரவு தங்கையின் அழைப்பு வந்ததும் படப்படப்புடன் எடுத்தேன். என்னண்ணா இப்படி செய்தி போட்டிருக்காங்க என்றதும் உடல் பதறியது.

இல்லை 'இப்படி இருக்கக் கூடாது' என்று உடனடியாக நண்பர் ஷங்ககருக்கு அழைத்தேன். கனத்த குரலில் உண்மைதான் என்று மறுமுனையில் பதில் கேட்டதும் ஒன்றும் புரியவில்லை..

அவர் சென்னைக்கு எங்களை அழைக்க, 'நீங்களும் நண்பர் ஷங்கரும் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக மீண்டும் டல்லாஸ் வாருங்கள்' என்று நாங்கள்அழைப்பு விடுக்க, பூரிப்புடன் இருந்த தருணங்கள் இன்று வெறுமையாகப் போய்விட்டதே..

இரண்டு வாரங்களில் எவ்வளவு இனிமையான உரையாடல்கள், அனுபவப் பகிர்வுகள், பயணங்கள், சிரித்து மகிழ்ந்த நினைவுகள். தொடர்ந்த தொலைபேசி அழைப்புகள்.. எதற்காக இந்தக் கவிஞரை நண்பராக அறிமுகப்படுத்தி வைத்தாய் இறைவா! இத்தனை சீக்கிரம் அழைத்துக் கொண்டால் என்னாவது நாங்கள்.?

கவிஞர் நா.முத்துக்குமார் என்ற பெயரைக் கூட, நா தழுதழுப்பில் முழுமையாகச் சொல்ல முடியவில்லையே...

English summary
The Tamil diaspora in US remembering late poet Na Muthukkumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X