For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்… கோரிக்கைகளை முன் வைத்த வணிகர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2014-15ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதன்பின், நிதிநிலை அறிக்கை மீதான உறுப்பினர்களின் விவாதங்களுக்கு அவர் பதிலளிக்கிறார்.

இதற்காக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு வியாழக்கிழமை கூடி விவாதிக்கிறது. பிப்ரவரி 21-ஆம் தேதி வரை பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu budget for 2014-15 to be presented on February 13

புதிய திட்டங்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. திட்டச் செலவினங்களுக்கான நிதி, மேலும் ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நிதியாண்டில் திட்டச் செலவினத்தின் அளவு ரூ.42 ஆயிரத்து 185 கோடியாக இருக்கும். இந்தத் தொகைக்கு இணையான அளவுக்கு நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என நிதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை:

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, தொழில் வர்த்தக சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்களுடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வணிக வரிகள் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாட் வரி விதிப்பு உள்பட பல்வேறு வரிகள் தொடர்பான கருத்துகளை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

வணிகர்கள் கோரிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அதன் பொதுச்செயலாளர் கே.மோகன், செய்தித்தொடர்பாளர் பி.பாண்டியராஜன் மற்றும் சிலர் கலந்துகொண்டனர். இந்த பேரமைப்பு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:-

விற்பனை வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சம் என்றிருப்பதை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். காம்பவுண்டிங் முறையில் வரி செலுத்துவதில், விற்பனைத்தொகை வரம்பை ரூ.50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.

அதிகாரிகள் கெடுபிடி

வணிகத்தை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் தேவையற்ற கெடுபிடிகளை அதிகாரிகள் செய்கிறார்கள். எனவே வணிகப் பதிவை எளிமைப்படுத்த வேண்டும். மதிப்புக்கூட்டு வரிச்சட்டத்தின் பிரிவுகளை மீறி சுற்றுபடைப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டு அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும்.

ஒரு முனை வரி

பலமுனை வரியை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும். கோல மாவுக்கு 14.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருப்பதை விலக்க வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொம்மைகள், மிதிவண்டி, மூன்று சக்கர வண்டி, உள்நாட்டு ஆயத்த ஆடைகள், பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியதற்கு நன்றி.

உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு

சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். நடுத்தர வணிகர்கள் பயன்பெறும் வகையில் வேளாண் விளைபொருள் விற்பனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அமைச்சர்கள் உறுதி

இந்த கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை உள்பட 20-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. இந்த ஆலோசனைக் கூட்டம் இரண்டரை மணிநேரம் நடைபெற்றது. வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று அமைச்சர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

English summary
Tamil Nadu government's budget for the year 2014-15 will be presented on February 13, 2014, Assembly Secretary A M P Jamaludeen said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X