For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிலாடிநபி திருநாள்: வைகோ, டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tamil Nadu leaders greet Muslims on eve of Milad-un-Nabi

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில்,

"வெம்மை நாட்டில் பிறந்து
வெண்மதி அதிலும் சிறந்து
செல்வ வாழ்வைத் துறந்து
ஓர் இறைவன் ஒன்றே குலம் என்று உரைத்தவராய்
சத்திய சீலராய்
அகமும் புறமும் தூயவராய்
கல்லடி சொல்லடி பட்டு
உயர்ந்த நல்லடியாராய்
மறையோர் போற்றுபவராய்
கந்தைத் துணியைத் தைத்து,
கயிற்றுக் கட்டிலில் துயின்று
விந்தைச் செயல்கள் புரிந்தவராய்
பசியால் வயிரே காய்ந்தாலும் படையின் நடுவே பாய்ந்தவராய்
பக்கத்தில் இருப்போரை தோழராய் நேசித்த புண்ணியராய்
செங்கதிரும் தண்மதியும் சேர்ந்து கையில் தந்திடினும்
எம்கொள்கை விடமாட்டோம் என்று உரைத்தவராய்

இப்புவியில் தோன்றிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை மீலாது விழாவாகக் குதூகலமாகக் கொண்டாடிடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இந்த இனிய நாளில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

அனைத்து மத நம்பிக்கை கொண்டோரிடத்திலும் நேசமும் அன்பும் காட்டி அரவணைத்தவர் நபிகள் நாயகம் ஆவார். இந்திய உபகண்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமமான பாதுகாப்பு வழங்கிடும் மதச் சார்பின்மையை, ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டைப் பாதுகாக்க மீலாது விழா அன்று உறுதி ஏற்போம்" என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு தலை சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள்.

எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே அவர் வாழ்ந்து காட்டினார். தொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்திற்கு வேண்டும்; எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்க வேண்டும் என்ற தத்துவத்தை போதித்த அவர், அதை தமது வாழ்விலும் கடைபிடித்தார். ஆனால், அவரது தத்துவத்திற்கு முரணான செயல்களில் சில கும்பல்கள் ஈடுபடுகின்றன. இஸ்லாமிய சகோதரர்களை கட்டாய மறுமதமாற்றம் செய்தல், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகத் திகழும் முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல் நடத்துதல் போன்ற தீய செயல்களை அரங்கேற்றுகின்றனர்.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுன் நபியாக கொண்டாடும் நாம், அவரது போதனைகளை உண்மையாக பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். எனவே, அவர் போதித்த அன்பு, அமைதி, சமாதானம், சமய நல்லிணக்கம், தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை ஆகியவற்றை கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்" என்று கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்,

திருமறையாம் திருக்குர்ஆனில் ‘நாம் மனிதர்களுக்கு அழகிய முன் மாதிரியாக அனுப்பியுள்ளோம்' என்ற இறைவசனத்திற்கு எடுத்துக்காட்டாக உதித்த இளம்பரிதி தான் நபிகள் நாயகம்.

அரசியல் திட்டம், அறிவுக்குப் பொருத்தமான நம்பிக்கை, புனிதம் பொருந்திய நடத்தை ஆகிய மூன்றும் இல்லாத நாட்டிலே பிறந்து, அதே நாட்டில் இம்மூன்றையும் நிலை பெறச் செய்தவர். நற்குணத்தின் மிக உன்னத நிலையில் நின்று வாழவும், வழிகாட்டவும் செய்த பூமான் நபி அவர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த இனிய நாளாம் மிலாது நபி திருநாளில், இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் வாழ்வில் நன்மைகள் பெருகிட, மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திட, சிறப்பான வாழ்வு வாழ்ந்திட எனது இதயப்பூர்வமான மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தே.மு.தி.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

"இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே" என்பது தே.மு.தி.க.வின் கொள்கை முழக்கமாகும். இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாம் மார்க்கத்தின் உயரிய நோக்கமாகும். அதன் வழியில் நாட்டில் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் ஆகிய நற்பண்புகள் அனைவரின் உள்ளங்களிலும் மலர்ந்திட வேண்டுமென, நபிகள் நாயகம் பிறந்த இனிய நாளில் நாட்டில் உள்ள அனைத்து மக்களும், இஸ்லாமிய மக்களும் சீரும் சிறப்புமாக வாழ்ந்திட வேண்டுமென்று எனது இதயமார்ந்த மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து:

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணல் நபிகள் போதித்த உயரிய தத்துவங்கள் அனைவரது நெஞ்சங்களிலும் பதிந்திட வேண்டும். இந்த இனிய நன்னாளில் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிற பெருமகிழ்ச்சி என்றென்றும் நிலைத்ததாக நீடிக்க வேண்டும்.

தற்போதைய இந்திய அரசியல் சூழலானது இஸ்லாமிய சமூகத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதனை அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நபிகள் நாயகம் போதித்த சமாதான நல்லிணக்க வியில் நின்று எதிர்கொள்வோம்.

இந்த இனிய மிலாது நபி திருநாளில் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
MDMK general secretary Vaiko and PMK leader Dr. Ramadoss are greeted Muslims on the eve of Milad-un-Nabi, the birthday of Prophet Mohammed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X