For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை சிறுவாணி அணை விவகாரம்: கேரளா பேருந்துகளை தடுத்த த.பெ.தி.க வினர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வால்வு அடைக்கப்பட்டதை கண்டித்து கேரளா செல்லும் பேருந்துகளை தடுத்து நிறுத்தி கோவையில் மறியல் செய்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் சிறுவாணி அணை கேரள வனப்பகுதியில் உள்ளது. இந்த அணையில் இருந்து தினமும் 7 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து கோவை மாநகர மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, அணையின் உள்பகுதியில் இருந்து, கோவை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான கிணறு அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தண்ணீர் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய அளவிலான சிமென்ட் குழாயை, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கான்கிரீட் கலவை மூலம் அடைத்துள்ளனர்.

Tamil Nadu's TPDK protest over Siruvani dam water issue

இந்த குழாய் அடைக்கப்பட்டுள்ளதால் கோடை காலத்தில் கோவைக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக இயக்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

பஸ்மறியல் போராட்டம்

கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்வதற்காக கேரள அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. பாலக்காடுக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்வதற்காக பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தது. அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அந்த பஸ்சை மறித்து, பஸ் முன்பு உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மறியல் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சிறுவாணி அணையில் இருந்து கோவை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அணையை நம்பித்தான் கோவையை சேர்ந்தவர்கள் உள்ளனர். சிறுவாணியினால் கேரளாவுக்கு பலன் கிடையாது.

இருந்தாலும் அந்த அணையில் இருந்து கோவைக்கு வரும் மற்றொரு குழாயை கான்கிரீட் கலவை மூலம் அடைத்து கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

இதற்காக 50 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு வாரமாக சிறுவாணி அணையில் இருந்துகொண்டு இந்த பணியை மேற்கொண்டுவருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் கோடை காலத்தில் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

போராட்டம் தீவிரமாகும்

கோவையில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். சிறுவாணி அணையினால் அவர்களும் பலன் அடைந்து வருகிறார்கள். கேரளா, குழாய் அடைப்பை நீக்காவிட்டால் எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.

கேரளாவிற்கு எதுவும் போகாது

கேரளாவுக்கு எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காகவே சிறுவாணியிலும் பிரச்சனை வேண்டும் என்றே கேரள அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தேவையில்லாமல் கேரளா இடையூறு செய்து பிரச்சினை ஏற்படுத்திவருவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கு.ராமகிருஷ்ணன் கூறினார்.

கைதாகி விடுதலை

இந்த மறியல் போராட்டம் காரணமாக கு.ராமகிருஷ்ணன், மற்றும் 20 பேர் கைது செய்யப்பட்டு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

முல்லைப்பெரியாறு தீர்ப்புக்கு எதிராக

அண்மையில் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது. அணை தண்ணீரை 152 அடிவரை உயர்த்த உத்தரவிடப்பட்டதை அடுத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிறுவாணி அணை தண்ணீரில் கைவைத்துள்ளது கேரளா அரசு. தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Activists in Coimbatore city of Tamil Nadu protested on Tuesday against Kerala state government's move to cease supply of water from Siruvani dam to Coimbatore. Kerala had informed Tamil Nadu government in April about its plan to seal the nine-foot diameter pipeline in order to prevent drawing excessive water. However, activists suspect the step taken by Kerala government is in reply to Mullaperiyar dam case, in which the Supreme Court agreed to Tamil Nadu's demand to raise the water level of the dam from 142 to 152 feet, rendering it safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X