For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐநா சபையில் ராஜபக்சே பேசக் கூடாது... செப்.26ந்தேதி சென்னையில் எழுச்சிமிகு தமிழர் பேரணி!

Google Oneindia Tamil News

சென்னை: ஐநா சபையில் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 26ந்தேதி சென்னையில் எழுச்சிமிகு தமிழர் பேரணி நடத்த உள்ளதாக தமிழக வாழ்விரிமைக் கட்சித் தலைமையில் நடந்த நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.

இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைகள் இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனைகள், அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன :-

1) தமிழீழம் மக்கள் இனக்கொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்தின்படி அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஈழ இனப்படுகொலைக்கு சான்றுரைக்கக் கூடியவர்கள் ஏராளமாய் இருந்து வரும் நிலையில் புலனாய்வுக் குழுவும் புலனாய்வு அறிவுரைக் குழுவும் தங்கு தடையின்றி இந்தியா வந்து செல்லவும், இந்தியாவில் தங்கிப் போதிய அளவு புலனாய்வுகள் செய்யவும் இந்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும். இந்தப் புலனாய்வை இந்தியா ஏற்காது என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவிற்கு வர விசா தரமாட்டோம் என்று இந்திய அரசு அதிகாரிகளும் அறிவித்திருப்பது அதிர்ச்சிக்கும் கண்டனத்துக்கும் உரியது.

இனக்கொலைக்குத் துணை போன பழைய காங்கிரஸ் கூட்டணி அரசின் அதே தமிழினப் பகைக் கொள்கையை நரேந்திர மோதி தலைமையிலான பா.ஜ.க. அரசும் தொடர்ந்து மேலும் தீவிரமாகக் கடைபிடித்து வருவதையே இந்நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய அரசு இப்போக்கை மாற்றிக் கொண்டு ஈழத் தமிழர் இனக்கொலைக்கான பன்னாட்டுப் புலனாய்வுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க ஆவண செய்யுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழக அரசும் தன்னளவில் இந்த முயற்சிக்கு துணை நிற்கக் கோருகிறது.

Tamil political parties oppose Rajapaksa to participate in UN meeting

2) இனக்கொலைக் குற்றவாளியும் ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானங்களைப் பற்றி கவலைப்படாமல், பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் நுழையவிடமாட்டோம் என்று கொக்கரித்துக் கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சேவை ஐ.நா.பொதுச் செயலவையில் உரையாற்ற அழைத்திருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அழைப்பை விலக்கிக் கொள்ளும்படி வலியுறுத்துகிறோம். ராஜபட்சே உரையாற்றும் ஐ.நா. மன்றத்தை முற்றுகையிட உலகத் தமிழர்கள் நடத்தி வரும் இயக்கத்துக்கு இக்கூட்டம் தமிழகத் தமிழர்களின் சார்பில் தன் தோழமையைத் தெரிவித்துக் கொள்கிறது.

3) ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது அரசமைப்புத் திருத்தத்தையும் அதன் அடிப்படையிலான வடக்கு மாகாண சபையும் ஈழத் தமிழர் இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வாக முன்னிறுத்தும் இந்திய அரசின் நயவஞ்சக முயற்சியை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ இறைமையை மீட்பது அல்லாத எந்தத் தீர்வும் தமிழீழ மக்களின் நலவுரிமைக்குப் பயன்படாது என்று இக்கூட்டம் உறுதியாக நம்புகிறது. இடைக்காலத்தில் தமிழீழ மக்கள் மீதான கட்டமைப்பில் இன அழிப்பைத் தடுத்த நிறுத்த ஐ.நா. ஒரு பாதுகாப்புப் பொறியை நிறுவன வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.

4) தமிழீழ மக்களின் நீதிக் கோரிக்கை தொடர்பாகவும், பிற நலவாழ்வுக் கோரிக்கைகள் தொடர்பாகவும் ஐ.மு.கூட்டணி அரசின் வழித் தோன்றலாகவே இப்போதைய மோடி அரசும் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. பதவியேற்புக்கு இராஜபட்சேயை அழைத்ததும், பன்னாட்டுப் புலனாய்வுக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதும், மீனவர் சிக்கல், கச்சத்தீவு ஆகியவை தொடர்பாக பழைய அரசின் நிலைப்பாட்டையே தொடர்ந்து வருவதும் கண்டனத்துக்குரியது.

5) தமிழினப் பகைவன் சுப்பிரமணியசாமி இந்திய அரசின் கொள்கை வகுப்புக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் கொழும்புக்கு சென்று படைத்துறை பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். பன்னாட்டுப் புலனாய்வு குறித்தும் தமிழ் மீனவர் சிக்கல் தொடர்பாகவும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை முழுமையாக நியாயப்படுத்திப் பேசியுள்ளார். சுப்பிரமணியசாமி தமிழகத்தில் நுழையவும் எவ்வித நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் உணர்வுள்ள தமிழர்கள் சார்பில் தடை விதிப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

6) ஈழத் தமிழர் இனக் கொலை தொடர்பாக நடைபெறும் பன்னாட்டுப் புலனாய்வுக்கு நாமும் இனக்கொலை சான்றுகளைத் திரட்டி அனுப்ப முடியும். அதற்கான மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து சிங்கள அரசின் குற்றங்களுக்கு எதிரான புலனாய்வுச் சான்றுகளைத் திரட்டி அனுப்பும் முயற்சிகளை மேற்கொள்ள தமிழகத்துக்குத் தமிழர்களுக்கும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

7) தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்களையும் அவர்களது படகுகளையும் சிறைப்பிடிப்பது தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசும் தமிழக அரசும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். வரலாற்று அடிப்படையில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டுக் கொடுக்க மறுப்பதோடு, அது இலங்கைக்கே சொந்தம் என்று இந்திய அரசு வாக்குமூலம் அளித்து வருவதும் மீனவர் சிக்கலை மேலும் கடுமையாக்கியுள்ளது. இந்திய அரசின் இந்த தமிழர் விரோதப் போக்கை கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

8) கூடங்குளம், அணு உலை, காவிரிப்படுகையில் மீத்தேன் எரிவாயு எடுப்பு, காவிரி உரிமை மறுப்பு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்லாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் துன்பத்தில் உழல்வதும் ஆகிய தமிழினத்தின் கவலைக்குரிய சிக்கல்களைத் தீர்க்க தமிழினம் ஒன்றுபட்டு அணி திரளுமாறு தமிழக மக்களை இந்தக் கூட்டம் அறைகூவி அழைக்கிறது.

9) தமிழகத்தில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் சர்வதேசச் சட்டங்களுக்கும் உள்நாட்டுச் சட்டங்களுக்கும் புறம்பாகவும் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. குறிப்பாகச் சிறப்பு முகாம்கள் சிறை முகாம்களவே செயல்பட்டு வருகின்றன. சிறப்பு முகாம்களை உடனே இழுத்து மூடும்படியும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. ஏதிலியர் தொடர்பான 1951 ஜெனிவா ஒப்பந்தத்திலும் 1067 வகைமுறை உடன்படிக்கையிலும் இந்தியா கையொப்பமிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலியருக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வலியுறுத்துகிறோம்.

10) ராசீவ் காந்தி கொலை வழக்கில் தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் உறூதியாக மேற்கொண்ட முயற்சியால் உச்சநீதிமன்றம் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான மரண தண்டனையைக் குறித்து ஆணையிட்டது. இந்த ஆணையைத் திருத்தி மீண்டும் மூவரையும் மரண தண்டனைக்கு ஆளாக்க இந்திய அரசு செய்து வரும் முயற்சிகளை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியும் உச்சநீதிமன்றத்தில் தடைபட்டு நிற்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு அரசமைப்புச் சட்டத்தின் 161வது உறுப்பைப் பயன்படுத்தி எழுவர் விடுதலைக்கு உடனே வகை செய்ய வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

11) இனக்கொலை புரிந்ததோடு ஐ.நா. மனித உரிமை மன்றப் புலனாய்வுக்கும் அனுமதி மறுக்கும் இலங்கை அரசைப் பணிய வைக்க ஐநாவும் உலக நாடுகளும் உறுப்பு தடைகள் (Sanctions) விதிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அரசியல், பொருளியல், பண்பாட்டுத் துறைகளில் இலங்கையைப் புறக்கணிக்கும் இயக்கத்தை உலகத் தமிழர்களோடு சேர்ந்து தமிழக மக்களும் தீவிரமாக முன்னெடுக்க இக்கூட்டம் அறைகூவி அழைக்கிறது.

திரைப்படங்கள் குறித்து...

12) புலிப் பார்வை திரைப்படத்தைப் பொறுத்தவரை படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் மறுப்புக்குரிய காட்சிகளை நீக்கி திருத்தம் செய்து நமக்குத் திரையிட்டுக் காட்டுவதாக உறுதியளித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் திரையிட்டுக் காட்டிய பின் இப்படத்திற்கான எதிர்ப்பு அல்லது ஏற்பு குறித்து இறுதி முடிவு செய்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

13) கத்தி திரைப்படத்தைப் பொறுத்தவரை லைக்கா தயாரிப்பில் வெளியிடப்படுவதை தொடர்ந்து உறுதியாக எதிர்க்கிறோம். இது இயக்குநர் முருகதாசுக்கோ, நடிகர் விஜய்க்கோ மற்ற கலைஞர்களுக்கோ எதிரானது அன்று. லைக்கா வெளியிடாமல் வேறு எந்த தமிழ்த் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதாயினும் கத்தி திரைப்படம் வெளியிடுவதில் நமக்கு மறுப்பு இல்லை என்று தீர்மானிக்கப்படுகிறது.

செயல் தீர்மானம்:

ஈழத் தமிழர் இனக்கொலை தொடர்பான ஐ.நா. மனித உரிமை மன்ற பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிவிட மறுக்கும் ராஜபட்சேவை ஐ.நா. பொதுச்செயலவையில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது எனக் கோரியும் பன்னாட்டுப் புலனாய்வுக்கு இந்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியும் வருகிற செப்டம்பர் 26-ம் நாள் சென்னையில் எழுச்சிமிகு தமிழர் பேரணி நடத்தத் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ் அமைப்புகள் உட்பட அனைத்து தமிழர்களும் இப்பேரணியில் முனைப்புடன் பங்கேற்க அழைக்கிறோம்.

English summary
Tamil political parties including TVK has opposed the participation of Srilankan president Rajapaksa at the United Nations meeting to be held on September 26
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X