For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறைந்தார் பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்

Google Oneindia Tamil News

மூத்த தமிழறிஞரும் கல்லூரிக் கல்வித்துறையின் மேனாள் இயக்குநருமான முனைவர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் (அகவை 90) 18.11.2015 அன்று கோவையை அடுத்த வெள்ளங்கிணறு என்னும் தம் சொந்த ஊரில் அமைந்த ஞானமணிப் பண்ணை இல்லத்தில் இயற்கை எய்தினார். பேராசிரியரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். மூத்த அறிஞர்களிடம் கல்வி பயின்றதுடன் சிறந்த மாணவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. The Contribution of European Scholars to Tamil என்ற தலைப்பில் இவர் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் ஆகியோர் இவரின் நெறியாளர்களாக இருந்தவர்கள். 1966 இல் சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

Tamil schoalar Ka Meenakshi Sundaram no more

முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களின் முயற்சியால் பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்களின் ஆய்வேடு 1974 இல் நூல்வடிவம் பெற்றது. இது ‘ஐரோப்பியர் தமிழ்ப்பணி' என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தால் 2003 இல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கு முன்மாதிரியான ஆய்வேடாக இது விளங்குகின்றது. பேராசிரியர் கா.மீ. அவர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ள ஐரோப்பியர்களின் தமிழ்ப்பணிகளை மூலமாகக் கொண்டு, பல ஆய்வேடுகள் எதிர்காலத்தில் உருவாக்குவதற்குரிய செய்திகளை இந்த ஆய்வுநூல் தாங்கியுள்ளது.

பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:

கோவை மாவட்டம் வெள்ளங்கிணறு என்னும் சிற்றூரில் 11.07.1925 இல் உழவர் குடும்பத்தில் மகனாகப் பிறந்தவர். ஏழாம் வகுப்பு வரை பிறந்த ஊரில் கல்வி பயின்றவர். 1948 ஆம் ஆண்டு கோவை அரசு கல்லூரியில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை பயின்று 1950 ஆம் ஆண்டு, முதல் மாணவராகத் தேறிப், பரிசில் பெற்றவர். பணியிலிருந்தபடியே எம்.லிட், முனைவர் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பயின்று பெற்றவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1950 ஆம் முதல் 1957 ஆம் ஆண்டு வரை தமிழ் விரிவுரையாளராகப் பல்வேறு வகுப்புகளுக்குப் பாடம் நடத்தியவர். 1957 முதல் 1983 வரை அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவ்வகையில் சென்னை மாநிலக் கல்லூரி, சேலம், திருப்பூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் அமைந்த அரசு கல்லூரிகளில் பணியாற்றியவர். கல்லூரி முதல்வராகவும் பணிபுரிந்தவர். 1979 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்லூரி முதல்வர் விருதினைத் தமிழக அரசிடமிருந்து பெற்றவர்.

1981 ஆம் ஆண்டுமுதல் 1983 ஆம் ஆண்டுவரை தமிழக அரசின் கல்லூரிக் கல்வியின் இணை இயக்குநராகவும், தலைமை இயக்குநராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர்.

15.09.1971 முதல் 20.06.1974 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆட்சியராக இருந்தவர். அப்பொழுது தமிழியல் என்ற காலாண்டு ஆய்விதழைத் தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளிலும் தொடங்கி, முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்து நடத்தியவர்.

சென்னை, மதுரை, கோவை, பாரதியார், பாரதிதாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து பணிபுரிந்தவர். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்து பணியாற்றிய பெருமகனார் இவர்.

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பாஷா சம்மன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்களின் தமிழ்க்கொடை:

The Contribution of European Scholars to Tamil
A Study of the achievements of S. Bharathi

தமிழ் நூல்கள்

பன்மையில் ஒருமை
அகராதிக்கு அப்பால்
பாரதியின் பாநிலை
சிலம்பில் துணைப்பாத்திரங்கள்
கம்பன்
மகரிஷி தேவேந்திரநாத தாகூர்
வேதம் புதுப்பித்த தீரர்
மனோன்மணியம் சுந்தரனார் புரட்சி - திறன்
உடலும் மருந்தும் -நூறு வினா விடைகள்
பல்நோக்குக் கட்டுரைகள்
ஐரோப்பியர் தமிழ்ப்பணி
கற்க கணிப்பொறி(வழிகாட்டுக் குழுத்தலைவர்)
திருவள்ளுவரிடம் இல்லை மயக்கம்

செய்தி: முனைவர் மு. இளங்கோவன்
http://muelangovan.blogspot.in/

English summary
The noted Tamil scholar Ka Meenakshi Sundaram has expired in his house near Coimbatore yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X