For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளப்பெருக்கு ஒருபக்கம், தண்ணீர் பஞ்சம் மறுபக்கம்.. உழவர் முன்னணி சொல்வதை கேளுங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஒருபக்கம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இப்பிரச்சினைகளை தீர்க்க, தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நீர் நிலைகள் நிரம்பும் வகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

Tamilaga Ulavar Munnani on water management

இதன் தொடர்ச்சியாக, கிருட்டிணகிரி மாவட்டத்தில், ஒசூர் கெலவரப்பள்ளி அணை நீர்மட்டம் 42.48 அடியாகவும் (மொத்த கொள்ளளவு 44.28 அடி), கிருட்டிணகிரி அணையின் நீர்மட்டம் 51 அடி (மொத்த கொள்ளளவு 52 அடி), சாத்தூர் அணையின் நீர்மட்டம் 110 அடி (மொத்த கொள்ளளவு 119 அடி)யாக உள்ளன.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருக்கும் முக்கிய நீர்தேக்கங்களின் நிலை இது. இன்னொருபுறம், கர்நாடக மாநிலத்தில் பெய்த பெருமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், மறுபுறம் கிருட்டிணகிரி மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்று கரையோரப் பகுதிகளான உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் பெரும்பாலான ஏரி - குளங்கள் நிரம்பாமல் தண்ணீர் தட்டுப்பாடே நிலவுகிறது.

தொடர்ச்சியான வறட்சியாலும், முறையான நீர் நிலைப் பராமரிப்பின்மையாலும் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்குக் கீழ் சென்று வேளாண்மையும், குடி தண்ணீரும் பெரும் தட்டுப்பாட்டில் தவிக்கின்றன.

அதேநேரம், இப்போது வந்தது போல சில ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தென்பெண்ணையில் பெருவெள்ளம் ஏற்படுவதும், அதில் கிடைக்கும் தண்ணீர் உத்தனப்பள்ளி - ராயக்கோட்டை மக்களுக்கு கிடைக்காமல் கடலில் சென்று கலப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கிடைக்கும் நீரை பயனுள்ள வகையில் சேகரித்து வேளாண்மைக்கு பயன்படுத்தும் வகையில், தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணியின் தலைமையில் அப்பகுதி உழவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

கருக்கநல்லி, பெரிய ஏள்ளி, குட்டை , கீழ் ஏலி, மேல் ஏலி, இராசப்பன் குட்டை உள்ளிட்ட 12 ஏரி - குளங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தினால், வெள்ளப்பெருக்கு அபாயமும் குறையும், இப்பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வேளாண்மையும் செழிக்கும்.

எனவே, நேர்ந்துள்ள இப்பெருவெள்ளத்தை ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்தை, வரும் நிதியாண்டிற்குள் நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilaga Ulavar Munnani wants water management should be more effectiveness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X