For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தொடர்பாக தொடரும் நாடகங்கள்.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

நீட் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து நாடகத்தை அரங்கேற்றி வருவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து நாடகத்தை நடத்தி வருவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலே மத்திய அரசு முடக்கிவிட்டது.

மத்திய அரசு இப்படிச் செய்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ரங்கராஜன் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துக் கேட்டபோதுதான் தெரியவந்தது. அதுவரை தமிழக அமைச்சர்கள், "நீட்டுக்கு நிச்சயம் விலக்கு பெற்றுவிடுவோம்; மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது" என்றுதான் சொல்லிவந்தார்கள். ஆனால் கடைசிவரை ஒன்றும் நடக்கவில்லை. நீட் தேர்வுதான் நடந்தது.

படுதோல்வி

படுதோல்வி

சிபிஎஸ்இ அடிப்படையில் நடைபெற்ற நீட் தேர்வு மாநில அரசுப் பாட மாணவர்களைப் படுதோல்வியில் தள்ளியது. அதனால் மருத்துவக் கல்லூரியை கனவில்கூட காண முடியாத நிலை! மருத்துவக் கல்லூரியில் சேரத் தேவைப்படும் மதிப்பெண்களுக்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்துவிட்டு புலம்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் நிற்கிறார்கள் ஏழை எளிய மாணவர்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு வகைகளில் நீட் விலக்கு கோரி போராடிக் கொண்டிருக்கின்றன.

நீட்டுக்கு விலக்கு

நீட்டுக்கு விலக்கு

இந்தப் போராட்டங்களால் மீண்டும் பொறி தட்டுகிறது அரசுக்கு. ஆனாலும் நீட்டை விலக்கச் செய்ய வேண்டியதைச் செய்யாமல், தொடர்ந்து மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றும் செயலிலேயே ஈடுபட்டிருக்கிறது எடப்பாடி அரசு. கடந்த வாரம் அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியைப் பார்த்தார்கள். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார்.

பிரதமர் என்ன கூறினார்

பிரதமர் என்ன கூறினார்

பிரதமரைச் சந்தித்த அவர்கள் பிரதமர் இதில் என்ன சொன்னார் என்பதை யாருமே செய்தியாளரிடம் தெரிவிக்கவில்லை. தம்பித்துரையோ "நீட் தேர்வுதான் நடந்துவிட்டதே; ஆனாலும் பிரதமரைப் பார்த்திருக்கிறோம்" என்றுதான் சொன்னார்.
அமைச்சர் செங்கோட்டையனோ "நீட்டை விலக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே, "நீட்டை எதிர்கொள்ள ஒன்றிய அளவில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அமைக்கப் போகிறோம்" என்றும் சொல்கிறார்.

எல்லா மாநிலங்களும்...

எல்லா மாநிலங்களும்...

நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ "நீதிமன்ற உத்தவுப்படி எல்லா மாநிலங்களுமே நீட்டை ஏற்றுக் கொண்டுவிட்டன; தமிழ்நாடு மட்டுமே எதிர்க்கிறது; நாங்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்கிறார். இந்த நிலையில் மறுபடியும் ஐந்து அமைச்சர்கள் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பார்க்கிறார்கள். இப்படியாக இவர்கள் நடந்துகொள்வது, நீட்டுக்கு எதிராகத் தமிழகம் கொந்தளிப்பதைத் தடுக்க வேண்டும் என்றுதானே தவிர, உண்மையில் நீட்டிலிருந்து விலக்கு பெற அல்ல.

தமிழகத்தின் உரிமை

தமிழகத்தின் உரிமை

நீட்டை விலக்குவதென்றால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்.அதிமுகவின் ஐம்பது எம்.பிக்களும் நாடாளுமன்ற அவையை முடக்கியிருக்க வேண்டும்.பொதுப்பட்டியலில் தமிழகத்தின் உரிமை எப்படி இல்லாமல் போகும் என்று கேட்டிருக்க வேண்டும்.எந்த நீதிமன்ற உத்தரவும் அரசின் கொள்கை முடிவை ஒன்றும் செய்ய முடியாது; எனவே தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவையே நீட் விடயத்திலும் ஏற்க வேண்டும் என வாதாடியிருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வி ஆணையம்

மருத்துவக் கல்வி ஆணையம்

எதற்குமே ஒத்துவரவில்லையா; தமிழ்நாடு அரசே தனி மருத்துவக் கல்வி ஆணையத்தை அமைத்துவிட வேண்டியதுதான். இதையெல்லாம் செய்ய உறுதியில்லாதவர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் மக்களுக்காக அல்ல; தங்களுக்காக, தங்கள் சுயலாபத்திற்காக என்றுதான் பொருள் கொள்ள முடியும். எனவே நீட் தொடர்பான நாடகங்களை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Tamilaga Valvurimai party condemns Central government plays drama in Neet Exam by without sending the ordinance to President of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X