For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா 2017-க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்ப்பு

மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு நிர்வாக குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

யுனானி, ஹோமியோபதி, சித்தா போன்ற மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்களை 'பிரிட்ஜ்' எனும் குறுகிய கால படிப்பு மூலம் அல்லோபதி மருத்துவர்களாக அங்கீகரிப்பது, இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு அதற்கு பதிலாக புதிதாக 4 நிர்வாக குழுக்களை அமைப்பது, தனியார் மருத்துவ கல்லூரிகளை மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதிப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய மத்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாசிச நடவடிக்கை

பாசிச நடவடிக்கை

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக தமிழ்நாட்டை நடுவண் அரசின் "காலனி"யாக மாற்றும் மோடியின் மற்றும் ஓர் அதிரடிதான் "இந்திய மருத்துவக் கவுன்சி"லுக்குப் பதிலாகக் கொண்டுவரும் "தேசிய மருத்துவ ஆணையம்"!

சமூக நீதி, மாநில உரிமை மட்டுமல்ல; மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வியையே தமிழகத்திற்கு மறுக்கும் இந்த பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

முன்வரைவு தாக்கல்

முன்வரைவு தாக்கல்

நாட்டை கார்ப்பரேட்மயமாக்கவும் மாநிலங்களை குறிப்பாக தமிழ்நாட்டை நடுவண் அரசின் "காலனி"யாகவே மாற்றிவிடவும் தலைகீழாகவே நின்றுவருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதனால் அரசியல் சாசனத்தின் அனைத்து உறுப்பு அமைப்புகளையும் தன்வயப்படுத்தும் நோக்கில் தான்தோன்றித்தன, சர்வாதிகார, பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். திட்டக் கமிஷனைக் கலைத்ததிலிருந்து தொடங்கிய இந்த பாசிசப் பயணம் இப்போது "இந்திய மருத்துவக் கவுன்சி"லைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக "தேசிய மருத்துவ ஆணையம்" என்பதை அமைக்க சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்ய வந்திருக்கிறது.

மாநில உரிமைக்கு எதிரானது

மாநில உரிமைக்கு எதிரானது

இந்த சட்ட முன்வரைவின் கூறுகள் அனைத்துமே சமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரானதாக இருப்பது மட்டுமின்றி, மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையுமே குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மறுப்பதாக இருக்கிறது. இப்போது தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 விழுக்காடு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கும், 35 விழுக்காடு இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்படுகின்றன.

நீட் தேர்வின் நோக்கத்துக்கு எதிரானது

நீட் தேர்வின் நோக்கத்துக்கு எதிரானது

ஆனால் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் இது தலைக்கீழாக்கப்பட்டிருக்கிறது. அதாவது அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 40 விழுக்காடு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 60 விழுக்காடு. இதனால் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் வசதி படைத்த மாணவர்கள்தான் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைக் கைப்பற்றுவர். தகுதி பெற்றிருந்தாலும் ஏழை மாணவர்கள் பணம் இல்லாததால் மருத்துவமே படிக்க முடியாது. இது நீட் தேர்வின் நோக்கத்திற்கேகூட எதிரானது.

மருத்துவ கல்லி தரம்

மருத்துவ கல்லி தரம்

மேலும், மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் மீண்டும் ஒரு தேர்வில் தேறினால் மட்டுமே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்து மருத்துவராக பணிசெய்ய முடியும். அது வெளியேறும் தேர்வு என்ற எக்சிட் தேர்வு (EXIT TEST). இது கிராமப்புற மக்கள் மற்றும் ஏழைகளை மருத்துவப் பணியில் சேர விடாமல் திட்டமிட்டே தடுப்பதாகும். இப்போது "இந்திய மருத்துவக் கவுன்சில்" ஒப்புதல்படியே தனியார் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க முடியும். ஆனால் "தேசிய மருத்துவ ஆணையம்" தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விருப்பப்படி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள வழிவகுக்கிறது. இது மருத்துவக் கல்வியின் தரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

விகிதாச்சாரம்

விகிதாச்சாரம்

மிகவும் ஆபத்தானது என்னவென்றால், மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொள்ள புதிய "தேசிய மருத்துவ ஆணைய"த்தின் சட்டம் வழிவகை செய்திருக்கிறது என்பதுதான். இப்போதைய மருத்துவக் கவுன்சிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் மருத்துவ ஆணையத்தில் மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 20 பேரை நடுவண் அரசே நியமிக்கிறது; அவர்கள் மருத்துவர்கள் அல்ல; மாநிலங்கள் சார்பாக தேர்வு செய்யப்படும் 5 பேர் மட்டுமே மருத்துவர்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவமே இல்லாமல் போகும்.

தமிழகத்தை குறி வைத்து...

தமிழகத்தை குறி வைத்து...

இவ்வளவு மோசமான சட்டவிதிகளுடன் கூடிய தேசிய மருத்துவ ஆணையத்தை மோடி அரசு அமைக்கவிருப்பதன் ஆபத்தை உணர்ந்து நாடெங்கும் உள்ள 8 லட்சம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நாடெங்கும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 2.5 லட்சம் மருத்துவர்களும் அடங்குவர்.

நாட்டின் மொத்த 8 லட்சம் மருத்துவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் பேர் என்பதிலிருந்தே மருத்துவத் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே தமிழ்நாடுதான் உயரிடத்தில் இருப்பது புரியும். அதனால்தான் மோடி தன் பாசிச நடவடிக்கைகளை தமிழ்நாட்டைக் குறிவைத்தே எடுக்கிறார்.

வன்மையாக கண்டிப்பு

வன்மையாக கண்டிப்பு

எனவேதான் நாம் தெளிவாகக் குறிப்பிடுகிறோம் - தமிழ்நாட்டை நடுவண் அரசின் "காலனி"யாக மாற்றும் மோடியின் மற்றும் ஓர் அதிரடிதான் "இந்திய மருத்துவக் கவுன்சி"லுக்குப் பதிலாகக் கொண்டுவரும் "தேசிய மருத்துவ ஆணையம்" என்று!

சமூக நீதி, மாநில உரிமை மட்டுமல்ல; மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வியையே தமிழகத்திற்கு மறுக்கும் இந்த பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilaga Vazhvurimai party condemns Central government for proposing to pass New medical commission bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X