For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - தமிழருவி மணியன் பேச்சு

By Shankar
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி பற்றி தமிழருவி மணியன் பேச்சு-வீடியோ

    சென்னை: ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள் என்று ரஜினி ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.

    வேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது.

    ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் தமிழருவி மணியன் பேசுகையில், "ரஜினிகாந்தின் ரசிகர்கள் சேர்ந்து மகாத்மா காந்தியின் சிலையை புனரமைப்பார்கள் என்று யாராவது ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லியிருந்தால் நான் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். ரஜினி ரசிகர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்? இந்த மண்ணில் இருக்கிற மக்கள் காந்திய வழியில் நடப்பார்கள் என்ற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்துவிட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் கொண்டாடுகிற ரஜினியின் ரசிகரான பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் காந்தி சிலையைப் புனரமைத்திருப்பதை நான் உள்ளம் திறந்து பாராட்டுகிறேன்.

    முதல்வராக

    முதல்வராக

    காந்திக்கும் ரஜினிகாந்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள். தனக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள உங்களையெல்லாம் இந்த மண்ணை நேசிப்பவர்களாக மாற்றிய ரசவாதத்தைச் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினி ரசிகர்களான உங்களை, இப்போது மக்கள் நலன் சார்ந்த பாதுகாவலர்களாக அவர் மாற்றியிருக்கிறார். நீங்கள்தான் நாளை மாற்று அரசியல் மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள். அந்த மனிதனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமர்த்தி தமிழகத்தில் நல்லாட்சி மலரக்கூடிய சூழலை உருவாக்கப் போகிறீர்கள்.

    காந்தி - ரஜினி

    காந்தி - ரஜினி

    காந்திக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? உடனே இதை சிலர் ஏளனம் பேசுவார்கள். ஏறுகிற மேடைக்கு ஏற்றார்போல் கச்சேரி வாசிக்கும் கலைஞன் நானில்லை. என் நெஞ்சில் பட்டதை நேர்ப்படப் பேசுவதுதான் வழக்கம். இந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் ஒரு செப்புக்காசைக் கூட அறத்துக்கு மாறாக நான் பெற்றவனுமில்லை, நெறிக்கு மாறாக நான் வாழ்ந்தவனும் இல்லை. ஆகவே மனம் கனிந்து சொல்கிறேன்.

    பொள்ளாச்சி மகாலிங்கம்

    பொள்ளாச்சி மகாலிங்கம்

    வாழ்நாளெல்லாம் காந்தியையும் வள்ளலாரின் பெருமையையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதையே தவமாகக் கொண்ட அருட்செல்வர் நா மகாலிங்கத்தின் வேண்டுகோளின்படி அவரது கல்லூரி இரண்டு மணி நேரம் பேசினேன். அப்போது காந்தியம் பற்றி நான் சொன்னது, "காந்தியம் ஒரு வாழ்வியல் சார்ந்த உண்மை. ஒருவரியில் சொல்வதென்றால் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பதைப் போல காந்தியத்துக்கும் இரு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் உண்மையாய் இருப்பது, மறுபக்கம் அன்பாக இருப்பது," என்றேன்.

    புத்துயிர்

    புத்துயிர்

    ரஜினிகாந்த் தன்னளவில் உண்மையாக இருக்கும் மனிதன். இந்த சமூகத்தை, மக்களை உண்மையாக நேசிக்கும், அன்பு செலுத்தும் மாமனிதன். தான் வாழக்கூடிய இந்த மண் முழுவதையும் அன்பால் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ள வேண்டும் எனத் துடித்துத் தவமிருக்கும் மனிதன் ரஜினிகாந்த்.

    காந்தியவாதி ரஜினி

    காந்தியவாதி ரஜினி

    உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி. அவரது ரசிகர்களான நீங்களும் காந்தியவாதிகளே. முடிந்துவிட்ட வரலாறாக காந்தியத்தை நினைத்து நான் கண்ணீர் விட்டிருக்கிறேன். ஆனால் இன்று அந்த காந்தியத்துக்கு உங்களால் புத்துயிர் கிடைத்திருப்பதைப் பார்க்கிற போது நெகிழ்ச்சியாக உள்ளது.

    ரஜினிகாந்தின் வாசகம் உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வு வரும்.

    மனிதன்

    மனிதன்

    ரஜினிகாந்த்தை முதல் முறையாக நான் சந்தித்தபோது, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்புடன்தான் போன்ற பல. அடுத்த முறை சந்தித்த போது, அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன். அடுத்து அடுத்து அவரை நான் சந்தித்துக் கொண்டே, பேசிக் கொண்டே இருக்கிறேன். என் முதல் சந்திப்பில் அவர் நடிகர் என்கிற மாயை மறைந்தது. அவரை அடுத்தடுத்து சந்தித்த போது அவர் நடிகர் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போனது.

    தமிழக முதல்வர்

    தமிழக முதல்வர்

    உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து இனிமேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரை அழைக்க வேண்டாம். அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் சொல்ல வேண்டியது தமிழகத்தின் முதல்வர் ரஜினிகாந்த் என்று.

    மலேசிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார்: "ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்துவிடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல," என்றார்.

    இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது ஆறு. ஒரே இடத்தில் தேங்கிவிட்டால் அது சாக்கடை. ஆறு தொடங்குகிற முதல் கட்டத்திலிருந்து கடலில் கலக்கும்வரை அது முதுகு காட்டிச் சென்றதே இல்லை... முன்னோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது. அதனால்தான் அது ஊருக்குப் பயன்படுகிறது. ஆனால் எவ்வளவு சுத்தமான தண்ணீராக இருந்தாலும், அது ஓரிடத்தில் தங்கிவிட்டால் அது சாக்கடையாகிவிடும். எனவே மனிதர்கள் தேங்கிவிடக் கூடாது. அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டும்.

    அடுத்த கட்டம்

    அடுத்த கட்டம்

    அபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலேவில் அவர் வெறும் நடிகர். பல நடிகர்களில் ஒருவர். அடுத்த மெல்ல மெல்ல வளர்ந்து, தனது போட்டியாளர்கள் அனைவரையும் கடந்து அடுத்த கட்டமாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்தார். ஒரு நடிகனாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கக் கூடிய மனிதனுக்கு அதுதான் உச்சம். அதுவே போதும். ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிற போதுதான், சூப்பர் ஸ்டார் என்கிற இடத்திலே இருந்து அடுத்த இடம் நோக்கி நகர்கிறார். அதுதான் தமிழகத்தின் மக்களுக்கு நல்வாழ்வு தருகிற முதல்வர் என்கிற இடம். அந்த இடத்தை நோக்கி அவர் நடக்க வேண்டும், அவர் அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்க' என்று சொல்வதை நிறுத்திவிட்டு, 'தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க' என்று சொல்லிப் பழகுங்கள்.

    நல்லாட்சி அமைக்க

    நல்லாட்சி அமைக்க

    ஒவ்வொரு சொல்லும் ஒரு மந்திரம். சொல்லற்ற ஓசையும் கூட ஒரு மந்திரம். வட மொழி மந்திரங்களைக் கேட்டால் நமக்கு அர்த்தமே புரியாது. வெறும் ஓசையாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஓசையைத் தொடர்ந்து உச்சரித்தால் மந்திரமாக மாறும். அந்த மந்திரமே அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வலைகள் மாபெரும் மாற்றத்தையே உருவாக்கும். தமிழகம் முழுவதும் எந்தத் திசை நோக்கித் திரும்பினாலும் 'ரஜினிகாந்த் முதல்வர்' என்று சொல்லிக் கொண்டே இருங்கள். அதுவே மந்திரச் சொல்லாக, அதிர்வலைகளாக மாறும். தேர்தலில் அவர் வென்று மக்கள் ஆதரவுடன் நல்லாட்சி அமைக்க உதவும்.

    தவம் நிறைவேறும்

    தவம் நிறைவேறும்

    நான் காமராஜர் காலடியில் அரசியல் கற்றவன். என் வாழ்வின் இறுதி நாள் வரை பெருந்தலைவர் காமராஜரின் லட்சியத்திலே உறுதியாக இருப்பேன். அவர் லட்சியத்தை நிறைவேற்றுவேன். இது அவர் காலடியில் நான் எடுத்த சத்தியம். காமராஜர் வாழ்ந்த இறுதிக் காலம் வரை சொன்னது, 'இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்'. தமிழகம் நல்வாழ்வு பெற வேண்டும் என்றால் இரண்டு கழகங்களையும் முற்றாக தூக்கி எறிய வேண்டும். இதுதான் என் தவம். இந்தத் தவத்தை நிறைவேற்ற கடைசியில் எனக்குக் கிடைத்துள்ள நம்பிக்கைதான் ரஜினிகாந்த்.

    யார் சொல்ல முடியும்!

    யார் சொல்ல முடியும்!

    சிஸ்டம் கெட்டுவிட்டது என்றார் ரஜினி. எத்தனைப் பொருள்மிக்க, அர்த்தமிக்க வார்த்தை அது. இந்த மாநிலத்தை ஆண்ட இரு கழகங்களின் ஒட்டுமொத்த ஊழல்களையும் சீர்கேடுகளையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.

    என் பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இப்போதே ஓடிவிடுங்கள் என்று பகிரங்கமாகச் சொன்னார் ரஜினி. தமிழக அரசியல் சரித்திரத்தில் எந்தத் தலைவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்? ரஜினிகாந்த் ஒருவரால்தான் இப்படிச் சொல்ல முடிந்தது.

    எப்படி கட்சி வளர்த்தார்கள்

    எப்படி கட்சி வளர்த்தார்கள்

    திரும்பத் திரும்ப சிலர் சொல்வது... ரஜினிகாந்த் வெறும் நடிகர்...அவருக்கு என்ன தெரியும் என்று. இப்படிச் சொல்பவர்கள் யார் தெரியுமா... எம்ஜிஆர் என்ற நடிகரின் பின்னால் நின்று கொண்டாடியவர்கள்... ஜெயலலிதா என்ற நடிகைக்குப் பின்னால் இருந்துகொண்டு சம்பாதித்துக் கொழுத்தவர்கள். அறிஞர் அண்ணா அவர்களே, எம்ஜிஆர் முகத்தைக் காட்டி, இதயக்கனி என்று சொல்லித்தானே திமுகவை வளர்த்தார்...

    ரஜினிகாந்தை வெறும் நடிகராக நினைப்பவர்கள் ஏமாந்து போய்விடுவார்கள். அவர் ஒரு அரசியல் ஞானி. அவருக்கு ஓஷோ தெரியும்... அதற்கு மேல் புரிந்து கொள்ளவே கடினமான ஜேகேவின் தத்துவங்களைப் படித்துப் புரிந்த மனிதர்.

    அன்பரசியல்

    அன்பரசியல்

    தமிழகத்தில் இப்போது நடப்பது வெறுப்பரசியல். ஆனால் ரஜினிகாந்த் மனதில் யார் மீதும் வெறுப்பே கிடையாது. அன்பு அன்பு அன்பு... அவர் மனசு முழுக்க அன்புதான். அதனால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரையும் பாராட்டுகிறார். வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அன்பு சார் அரசியலை தமிழகத்தில் வளர்த்தெடுக்க விரும்புகிறார் ரஜினி.

    அதேபோல, போட்டிக்கு பதில், ஒத்துழைப்பு அரசியலை அவர் முன்னெடுக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் மாற்று அரசியலை அவர் முன் வைக்கிறார்.

    ஒருவனை விமர்சித்தால்தான் தனக்கு வாழ்வு என நினைக்கிறார்களே... அவர்கள் முன்னெடுப்பது வெறுப்பரசியல். ஆனால் ரஜினி முன்வைப்பது அன்பு ததும்பும் மாற்று அரசியல்.

    ப்ளாட்பாரத்தில்

    ப்ளாட்பாரத்தில்

    சுயநலத்துக்கு மாற்றாக பொது நலத்தை முன்வைத்துள்ளார் ரஜினி. அவர் என்னிடம் ஒரு முறை சொன்னார்: அய்யா நான் 40 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துக்கு வந்தபோது, பட வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தபோது, மவுன்ட்ரோடு எல்ஐசிக்கு எதிரில் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தவன். நான் அங்கிருந்துதான் புறப்பட்டேன். இன்று எனக்கு வந்திருக்கிற கவுரவம், செல்வம் அனைத்துமே இந்த தமிழ் மக்கள் கொடுத்தது. இந்த மக்களுக்கு நான் ஏதாவது நல்லது செய்தாக வேண்டும். ஒரு திருமண மண்டபம் கட்டி சில இலவசத் திருமணங்களைச் செய்தால் போதாது... இந்த தமிழகத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்," என்றார்.

    ரஜினிகாந்த் போன்ற உயர்ந்த, உச்ச நிலையில் உள்ள ஒருவர் இப்படிச் சொல்வாரா... ரஜினிகாந்த் பொது நலத்தை மட்டுமே விரும்புவதால் அவரால் இப்படிச் சொல்ல முடிந்தது," என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா, வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி உள்பட, அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

    English summary
    Gandhian Makkal Iyakkam President Tamilaruvi Manian's sensational speech on 'Rajinikanth as CM of Tamil Nadu.'
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X