For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: தி.மு.க. பக்கம் சாயும் தே.மு.தி.க? செக் வைக்கும் அ.தி.மு.க, பா.ஜ.க.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வியூகங்களை செயல்படுத்தும் வேலைகளில் படுபிஸியாகிவிட்டன.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தே.மு.தி.க., காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவருவது முதல் ப்ளான். இந்த திட்டப்படி கூட்டணி அமைந்தால் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் ம.தி.மு.க, காங்கிரஸ் வாக்குகள் கணிசமாக உதவும்; வட மாவட்டங்களில் தே.மு.தி.க. வாக்குகள் கை கொடுக்கும் என்பது தி.மு.க.வின் கணக்கு.

தி.மு.க. அணி

தி.மு.க. அணி

ம.தி.மு.க., காங்கிரஸ் இரண்டுமே தி.மு.க.வுடன் இயற்கையான கூட்டணி என்பதற்கேற்பவே நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்த கட்சிகள் எப்படியும் தி.மு.க. கூட்டணிக்குள் வந்துவிடும் என்றே நம்பப்படுகிறது.

இதேபோல் பாரதிய ஜனதா கையைப் பிடித்துக் கொண்டிருந்த தே.மு.தி.க. இப்போது காங்கிரஸ் கட்சியின் கையை ரொம்பவும் இறுக்கமாக பற்றிக் கொண்டிருக்கிறது. அதுவும் பாரதிய ஜனதாவும் அண்ணா தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க. அணிதான் தங்களுக்குப் பாதுகாப்பு என தே.மு.தி.க. கருதுகிறது.

விஜயகாந்த், இடதுசாரிகள்

விஜயகாந்த், இடதுசாரிகள்

இதன்வெளிப்பாடாகவே அண்மைக்காலமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தெல்லாம் அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். தி.மு.க. கூட்டணிக்குள் ம.தி.மு.க.வை கொண்டு வரும் நிலையில் மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் என்ற பெயரில் அக்கட்சியுடன் கைகோர்த்துள்ள இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகளையும் எப்படியும் கூட்டணிக்குள் இழுத்துவிடலாம் என்பதும் தி.மு.க.வின் கணக்கு.

ஆக முதலில் ம.தி.மு.க, காங்கிரஸ்; அதன் பின்னர் ம.தி.மு.க. மூலமாக இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகளை இணைப்பது; காங்கிரஸை உள்ளே கொண்டு வந்து அதன் மூலம் தே.மு.தி.க.வை கொண்டுவருவது என்பதுதான் தி.மு.க.வின் மெகா கூட்டணி ப்ளான்.

மெகா கூட்டணிக்கு செக்

மெகா கூட்டணிக்கு செக்

அதே நேரத்தில் இப்படி தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைவதை நிச்சயம் ஒருபோதும் அ.தி.மு.க. விரும்பாது. சட்டசபை தேர்தலில் தனியாக போட்டியிடவே அ.தி.மு.க. விரும்பினாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுக்க ஒரு கூட்டணிக்கு அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறது.

இதற்காகவே தி.மு.க. பக்கம் தே.மு.தி.க. சாய்ந்துவிடாமல் இருப்பதற்கான அத்தனை காய்களையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

பா.ஜ.க. பரிதவிப்பு

பா.ஜ.க. பரிதவிப்பு

என்னதான் பா.ஜ.க.- அ.தி.மு.க. நெருங்கி வருவதாக சொல்லப்பட்டாலும் நாங்கள் தே.மு.தி.க.வுடன் கூட்டணியிலேயே இருக்கிறோம் என்று தலைகீழாக நிற்கிறது பா.ஜ.க.. சென்னையில் விஜயகாந்த் மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருந்த போது வலிய சென்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை வாழ்த்து தெரிவித்ததும் இதற்காகத்தான்..

இப்படி செய்வதன் மூலம் தே.மு.தி.க.வை குழப்பத்திலேயே இருக்க வைப்பது அ.தி.மு.க.வின் திட்டம். இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ், இடதுசாரிகளை தங்களது அணிக்கு கொண்டு வந்து தி.மு.க. தலைமையில் ஒரு வலுவான அணியை உருவாக்கவிடாமல் செய்வதற்கான 'மூவ்'களையும் அ.தி.மு.க. மேற்கொண்டு வருகிறது.

லாபியிஸ்டுகள்

லாபியிஸ்டுகள்

இதற்கிடையேதான் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியை உருவாக்கிவிடுவதற்கு லாபியிஸ்டுகள் படு மும்முரமாக களமிறங்கியிருக்கின்றனர். அ.தி.மு.க. தலைமைக்கு இருக்கும் நெருக்கடிகளை இந்த சக்திகள் சாதகமாக்கிக் கொண்டு பேரம் பேசிக் கொண்டிருக்கின்றன. இதன் ஒருபகுதியாகத்தான் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

பா.ம.க.

பா.ம.க.

பா.ம.க.வைப் பொறுத்தவரையில் தங்களுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக நம்புகிறது; அதனால்தான் மீண்டும் மீண்டும் தனித்தே களமிறங்கப் போவதாக கூறி வருகிறது.

தமிழக அரசியலில் தற்போது நிகழ்ந்துவரும் நிகழ்வுகள் அனைத்தும் இத்தகைய வியூகங்களுக்கு மத்தியில்தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

English summary
DMK try to make a mega alliance for upcoming Tamilnadu assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X