தலைமை செயலாளரை மருத்துவமனையில் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி: நிதித்துறை செயலருக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து ராம் மோகன் ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை அடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது எதிர்பாராத விதமாக கிரிஜா வைத்தியநாதன் கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து காலில் ஏற்பட்ட தொடர் வலி காரணமாக சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கிரிஜா வைத்தியநாதன்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கீழே விழுந்ததன் காரணமாக அவரது கணுக்காலில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, அவருக்கு காலில் மாவுக்கட்டு போடப்பட்டது. சிகிச்சை பின்னர் வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் நேற்று கால் வலி அதிகமானது.
இதனையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கிரிஜா வைத்தியநாதன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரிஜா வைத்தியநாதனை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பும் வரை அவரது பொறுப்பை நிதித்துறை செயலாளர் சண்முகம் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.