For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் வழக்கு: அறிவு உட்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வேண்டுகோள்!

By Manjula
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்ற அறிவு உட்பட 7 தமிழர்களையும் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ராஜிவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த 3 பேர் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் என 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

Tamilnadu Film Directors Association Request

ஆனால் மத்திய அரசின் முட்டுக்கட்டையால் 7 தமிழர் விடுதலை சாத்தியம் இல்லாம உள்ளது. இந்நிலையில் அண்மைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசே 7 தமிழரையும் விடுதலை செய்யலாம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தற்போது 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் மற்றும் பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களது அறிக்கை விவரம்:

மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

தமிழக அரசு நடவடிக்கை

பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று குறைத்தது. அதற்கு அடுத்த நாளே சட்டமன்றத்தை கூட்டிய முதல்- அமைச்சர், இவர்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் விடுதலை செய்வதாக அறிவித்தீர்கள். அன்று தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் முதல்-அமைச்சர் அம்மாவுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.

தலையிட முடியாது

ஆனால் அந்த தீர்ப்புக்கு தடை வாங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் டிசம்பர் 2 அன்று வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு, குற்றவியல் நடைமுறை சட்டத்தை பயன்படுத்தும்பொழுது அது மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று அறிவித்தது. ஆனால் அதே உச்சநீதிமன்ற அரசியல் அமர்வு மாநிலங்களுக்கு இருக்கும் அரசியல் அமைப்பு அதிகாரம் 161 அல்லது குடியரசு தலைவருக்கு உள்ள அதிகாரம் 72 ஆகிய கட்டற்ற அதிகாரங்களில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என்றும் தெளிவாக விளக்கியுள்ளது.

தியாகராஜன் கருத்து

இந்த நிலையில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய புலனாய்வு அதிகாரி தியாகராஜன் இன்று அந்த வாக்குமூலம் தவறானது என்று அறிக்கை கொடுத்திருப்பது நம் நாட்டில் இல்லாத நிகழ்வாக நடந்து இவர்களின் குற்றத்தன்மையின் மேல் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கால் நூற்றாண்டு

ஆகவே இந்த வழக்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருணையோடு அணுகி இவர்களின் கால் நூற்றாண்டு கால சிறைவாசத்தை கணக்கில் கொண்டு இவர்களின் அப்பழுக்கற்ற நன்னடத்தை ஆவணங்களையும் கணக்கில் கொண்டு மீதமுள்ள இவர்களின் ஆயுட்காலத்தை பயனுள்ள வகையில் செலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர்கள் சங்கம் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், வரும் பொங்கல் தினத்தில் என் மகன் என்னுடன் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu Film Directors Association Request to Our Chief Minister "In Rajiv Gandhi Murder Case to Release 7 Prisoners at the Prison".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X