For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டால் யாருக்கு லாபம்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

அதிமுக அடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் முன்னால் வைத்து முழங்க உதவும் முதலீட்டாள் மாநாடு சென்னையில் இனிதே தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டிற்கு ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகியவை பங்கு நாடுகளாக உள்ளன.

மாநாட்டில் பங்கேற்க 15 நாடுகளில் இருந்து சர்வதேச முதலீட்டாளர்கள் சுமார் ஆயிரம் பேர் வந்துள்ளனர். இந்தியாவில் பல பாகங்களில் இருந்து 4 ஆயிரம் பேர் வந்து, இந்த மாநாட்டுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர் முதல் நாளிலேயே ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக அறிவித்தது தமிழக அரசு.

தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவசர கதியில் மாநாட்டை நடத்துவதற்கு தேர்தல் முக்கிய காரணம்.

Tamilnadu GIM2015: Who will get the benifit?

அம்மா உணவகம், உப்பு என்று அறிமுகம் செய்யப்பட்டதே தவிர, பெரிய அளவில் எந்த தொழில் திட்டங்களையும் ஜெயலலிதா அரசு கொண்டுவரவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கும், மக்களின் மனோநிலைக்கும் மாற்று அளிக்க முதலீட்டாளர் மாநாடு அக்கட்சிக்கு உதவும்.

பொதுவாக எந்த ஒரு அரசும் பதவிக்கு வந்த சில மாதங்களிலோ அல்லது 2 ஆண்டுக்குள்ளாகவோதான் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியுள்ளன. காலம் கடந்து மாநாடு நடத்தினால், தேர்தலுக்கு பிறகு எந்த அரசு வருமோ என்ற நிலையற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.

ஆனால், ஆட்சி காலம் முடிவடைய உள்ள ஒரு அரசு நடத்தும் மாநாட்டுக்கு இத்தனை தொழில்முனைவோர்கள் வருகை தர முக்கிய காரணம், மத்திய அரசின் ஒத்துழைப்பும், வேண்டுகோளும்தான் என்கின்றனர் விவரம் அறிந்தோர்கள். மேலிட உத்தரவுப்படியே, மாநாட்டுக்கு வந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழகத்தில் தொழில்வளர்ச்சி பிரமாண்டமாக இருப்பதாக புகழ்ந்து தள்ளிவிட்டனர். மத்திய அரசின் இந்த கைத்தாங்கல் காரணமாகத்தான் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Tamilnadu GIM2015: Who will get the benifit?

முதலீட்டாளர் மாநாட்டில் கையொப்பமாகும், ஒப்பந்தங்களின் மதிப்பை பிரமாண்டமாக பிரச்சாரம் செய்து, மீண்டும் அதிமுக அரசை ஆட்சிக்கு கொண்டுவந்தால்தான், இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வரும், வேலைவாய்ப்பு பெருகும் என்றெல்லாம் ஆசை காட்டி ஓட்டு வாங்க அதிமுகவுக்கு பெருமளவிற்கு இம்மாநாடு பயன்தரப்போகிறது. ஆனால், தமிழக மக்களுக்கு இதனால் பலன் கிடைக்குமா?

தொழிற்சாலை தொடங்கப்படுவதற்கு தடையற்ற மின்சாரம், போதிய அளவுக்கு தண்ணீர், பணியாளர் வளம், மூலப்பொருட்களைக் கொண்டுவரவும் உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்லவும் உரிய போக்குவரத்து வசதிகள் போன்றவை மிகவும் அவசியம். இவை தமிழகத்தில் உள்ளதா என்றால் பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கிறது.

அறிவு சார்ந்த தொழிலாளர் வளம் கொண்டது தமிழகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களை சென்னைக்கும், கோவைக்கும், பெங்களூருக்கும் ஓடவிடாமல் தடுத்து தமிழகத்திலேயே பணியாற்ற வைக்க கட்டமைப்பு இல்லை. தோல் பதனிடும் தொழிலில் முன்னணியில் இருந்தது தமிழகம். லஞ்சமும், ஊழலும் கொடி கட்டி பறப்பதால் ஆந்திரா பக்கம் பல தொழில் நிறுவனங்கள் இடம் பெயர ஒப்பந்தம் செய்துவிட்டன என்று 2 மாதங்கள் முன்பே எச்சரித்தது ஆங்கில பொருளாதாரா நாளிதழ் ஒன்று.

எந்த தொழிலை தொடங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் இன்றி காரியம் நடக்காது என்ற நிலையில், தொழிலாளர்கள் தமிழகம் வர என்ன தேவையுள்ளது? மத்திய, மாநில அரசுகளின் நெருக்கடியால் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போடப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. அவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லை என்று தெரிந்துவிட்டால் ஒப்பந்தத்தை அடுத்த சில நாட்களிலேயே கூட ரத்து செய்யும் அதிகாரம் முதலீட்டாளர்களுக்கு உண்டு.

முதலீட்டாளர் மாநாட்டில் போடப்படும் ஒப்பந்தங்களில் வெறும் 5 சதவீதம் அளவுக்குதான் நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை அண்டை மாநிலமான கர்நாடகா முதல் மேலும் பல மாநிலங்களின் கடந்த கால வரலாறு நமக்கு காட்டுகிறது.

தேர்தல் நெருங்கும் இந்த நிலையில், தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு தேவைப்படும் வசதியை செய்ய அரசு முனைப்பு காட்டுமா என்பது சந்தேகமே. எனவே இந்த 5 சதவீதம் கூட நமக்கு கிடைக்காதோ என்ற ஆதங்கம் தமிழக பொருளாதாரா வல்லுநர்களுக்கு உள்ளது.

லஞ்சமில்லா நிர்வாகம், தடையற்ற மின்சாரம், போதிய கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தால் மட்டுமே முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெறும். அல்லது இது வெற்று கோஷமாக மாறும்.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa on Wednesday inaugurated the Tamil Nadu Global Investors Meet 2015 which the State claims would attract investments to the tune of Rs. 1 lakh crore. But who will get the benifit from this event is the biggest question mark.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X