• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவிரிக்காக பொங்குறோமே.. காலம் காலமாக நம்மை கலங்கடிக்கும் அவலத்தை கவனித்தோமா?

By Veera Kumar
|

சென்னை: காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுடன் தமிழகம் தொடர்ந்து போராடி வருகிறது. இன்று பாதி ஆயுளை கடந்தவர்கள் கூட சிறு வயதில் இருந்து காவிரி என்பது, இரு மாநிலங்களின் தீரா வலியாக தொடர்வதை உணர்வார்கள்.

காவிரி கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடி அதை புண்ணிய நதியாக போற்றி மகிழ்வது தமிழர்கள் பாரம்பரியம். காவிரிக்கு பின்னால் பல புராண கதைகளும் உண்டு.

எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை என கன்னடர்கள் சொல்வதும், எங்கள் பங்கை எங்களுக்கு தருவது மட்டுமே உங்கள் வேலை என தமிழர்கள் சொல்வதும் கீறல் விழுந்த ரெக்கார்டுகளாய் காதில் ஒலிக்கும் வசனங்கள்.

உயிரும், குருதியும் ஊற்றி வளர்த்தோம்

உயிரும், குருதியும் ஊற்றி வளர்த்தோம்

1991ல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்தபோது, பெங்களூரு உட்பட கர்நாடகா முழுக்க எத்தனையோ தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது நமது சம கால சோகங்களில் முக்கியமானது. இப்படி, உயிரையும், செங்குருதியையும், தியாகமாக்கிய பிறகு தமிழகம் வந்தடையும் காவிரி நதி என்ன ஆகிறது தெரியுமா?

பலன் என்ன பாருங்கள்

பலன் என்ன பாருங்கள்

2005ம் ஆண்டு 70.96 டிஎம்சி, 2006ம் ஆண்டு 42.85 டிஎம்சி, 2007ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் ஏழு முறை மேட்டூர் அணை நிரம்பி 100 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. 2008ம் ஆண்டு 78.15 டிஎம்சி, 2009ம் ஆண்டு 65.42 டிஎம்சி வீணாக கடலில் உபரி நீர் கலந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு 16 மதகுக்கண் வழியாக 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

என்ன ஒரு அலட்சியம்

என்ன ஒரு அலட்சியம்

காவிரியில் இருந்து வீணாகும் உபரி நீரை சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளுடன் இணைக்க வேண்டும்.தானாதியூர்-மூலக்காடு நீரேற்று திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சரபங்கா ஆற்றுடன் காவிரி நதியின் உபரி நீரை இணைக்க வேண்டும். இதன்மூலம், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டை களுக்கு காவிரி உபரி நீர் சென்றடையும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பன போன்ற கோரிக்கைகள் அலட்சியத்துடன் கடந்து செல்லப்படுகின்றன.

நமது மாநில நதி கதி

நமது மாநில நதி கதி

அதேநேரம், கர்நாடகா காவிரியை முழுமையாக பயன்படுத்தவும் நாம் விடுவதில்லை. குறுக்கே அணை கட்ட விட்டால், தண்ணீரை குறைத்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு இதற்கு காரணம். அதிலும் உண்மையும் இருக்கலாம். ஆனால், நமது மாநிலத்திலேயே உற்பத்தியாகி நமது மாநிலத்திலேயே கடலில் கலக்கும் ஒரு ஜீவ நதியின் ஜீவனை நாம் துடிக்க விடுவது தெரியுமா?

பாலைவனமாக்கினோமே

பாலைவனமாக்கினோமே

தமிழகத்தின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி பாயும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கதை தெரியுமா உங்களுக்கு? பொதிகை மலை உச்சியில் புறப்பட்டு வரும் தாமிரபரணி பாயும், இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள, ராதாபுரம், நாங்குநேரி, சாத்தான்குளம் தாலுகாக்களில் மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடையாது! மணல் குன்றுகள், முட்செடிகள் என ஒரு பாலைவனத்தை அப்படியே கண்முன் கொண்டுவருகின்றன இந்த தாலுகா நிலப்பரப்பு. இத்தனைக்கும் முன்பு குட்டி கொழும்பு என புகழப்பட்ட செழுமை பூமி இது.

பாவம் என்ன

பாவம் என்ன

தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களும் ஒரே மாவட்டத்தில் அமைந்துள்ளது என்றால் அது திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே. இதில் பாலை அமைந்திருப்பதற்கு நாம் பெருமைப்பட முடியாது. ராதாபுரம் உள்ளிட்ட அம்மூன்று தாலுகாக்களும் பாலையாக இருக்க தாமிரபரணி செய்த பாவம் என்ன?

மனசாட்சியில்லையா

மனசாட்சியில்லையா

அதிர்ச்சி தகவல் என்னவென்றால், தாமிரபரணி ஆற்றில் மழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 13 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் அது பாயும் மாவட்டத்தில் பாலை நிலம் பளபளக்கிறது. இதற்காக கொண்டுவரப்பட்ட தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தினால் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

காட்சிகள் ஒன்றுதான்

காட்சிகள் ஒன்றுதான்

இத்தனைமுறை ஆட்சிகள் மாறியும் தாமிரபரணி தண்ணீரை உருப்படியாக பயன்படுத்தி, வறட்சியால் இடம் பெயர்ந்து ஓடும், அம்மாவட்ட மக்களை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை! ஆட்சிகள் மாறும்.. காட்சிகள் ஒன்றே!!

ஒருவழியாக ஒரு திட்டம்

ஒருவழியாக ஒரு திட்டம்

தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் 13 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுத்து ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர தாமிரபரணி - கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டத்தை, கடந்த 2006-ம் ஆண்டு ஒரு வழியாக, தமிழக அரசு உருவாக்கியது.

நதியை கொல்லும் மணல் கொள்ளை

நதியை கொல்லும் மணல் கொள்ளை

இதற்காக 369 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கி பணிகளை, விரைவுப்படுத்தாமல் விட்டுள்ளது தமிழக அரசு. நம்பியாறு என்பது இப்போது சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளது. உவரி அருகே அந்த ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் மணல் கொள்ளையர்கள் டன் டன்னாக மணலை அள்ளி வெளிநாடுக்கு விற்பனை செய்துவிட்டனர். இதனால் நிலத்தடி நீர் உப்பாக மாறி பாலைவன கொடுமை அம்மக்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.

கடலி்ல் கலப்பது தண்ணீர் மட்டுமா?

கடலி்ல் கலப்பது தண்ணீர் மட்டுமா?

ஆறுகளில் இருந்து வீணாக கடலில் கலக்கும் ஒவ்வொரு சொட்டு நீரும், மக்களின் உடலில் ஓடும் ரத்தம் கடலில் கலப்பதற்கு சமம். தண்ணீரால் மற்றொரு உலக போர் வரும் என்று உலக விஞ்ஞானிகள் கணிக்கும் காலத்தில், ஆறுகளை கனிம கொள்ளையர்கள் கற்பழிப்பதற்கு அனுமதித்து, கடலில் கலந்து வீணாகுவதை பார்த்துக்கொண்டிருப்பதை போன்ற பெரும் கயமை வேறு இருக்க முடியாது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Tamilnadu government's mismanagement in the river issues leaves south Tamilnadu a dessert.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more