For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவிந்திருக்கும் பிரச்சினைகள்.. நாயுடு ஸ்டைலில் டெல்லியைக் கலக்குவாரா ஸ்டாலின்..திடீர் எதிர்பார்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin: ஸ்டாலின் டெல்லியை கலக்குவாரா?- வீடியோ

    சென்னை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முகாமிட்டு போராட்டம் நடத்தி கவனம் ஈர்த்ததைப் போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அதிரடிப் போராட்டத்தில் ஈடுபடுவாரா என்ற திடீர் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஒரு நல்ல அரசு என்பது மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் அரசாக இருக்கவேண்டும் என்பதுதான் முடியாட்சி முதல் குடியாட்சி வரை அரசுக்கான இலக்கணமாக நமது முன்னோர்கள் வகுத்து சென்ற இலக்கணம். அப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் இருந்தால் போராட்டங்கள் தினமும் நீரோட்டங்கள் போன்று மாறுவதை தவிர்க்க முடியாது. டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எத்தனையோ விதமான போராட்டங்கள் நடைபெற்றன, நடைபெற்று வருகின்றன. அதில் நேற்று முன்தினம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த போராட்டமாக மாறியது, காரணம் ஒரு மாநில முதலமைச்சரே நேரடியாக வந்து மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். இதனால் மாற்றுக்கட்சி தலைவர்களும் தேசியத் தலைவர்களும் வந்து ஆதரவு தருகிறார்கள்.

    தமிழகமும் தாங்கவொண்ணா பிரச்சனைகளில் தினம் தினம் தள்ளாடி வருகிறது. பாருக்கே சோறு போட்ட சோழ வளநாட்டை கொண்ட தமிழகம் இன்று சோற்றுக்கு வெளி மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் விவசாயம் பொய்த்து போய் விட்டது. மழை இல்லை, உலகம் வெப்ப மயமாகிவிட்டது என்று எண்ணற்ற காரணங்களை அடுக்குவார்கள் நமது அரசியல்வாதிகள். மழை இல்லை என்பதும் உலகம் வெப்ப மயமாகிவிட்டது என்பதுவும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பிரச்சனைதான். விவசாயத்தை பொறுத்தமட்டில் தமிழகம் அப்பட்டமாக வஞ்சிக்கப்படுகிறது, காவிரி நீர் முறையாக தமிழகம் வருவதில்லை, எத்தனையோ சட்டப் போராட்டங்கள் நடத்தினாலும் காவிரி நீருக்கு இன்னமும் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம். இப்போது அதையும் தாண்டி மேக்கேதாட்டு பிரச்சனை பெரும்பிரச்சனையாக உருமாறிக்கொண்டிருக்கிறது.

    காவிரிக் கண்ணீர்

    காவிரிக் கண்ணீர்

    இந்தப் பிரச்சனைகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தெளிவாக தெரிந்தே கர்நாடகாவுக்கு சாதமாகவே நடந்து கொண்டிருக்கிறது. காரணம் பாஜகவுக்கு கர்நாடகாவில் இன்றில்லை என்றாலும் நாளை ஆளுவதற்கான வாய்ப்பு வரலாம் ஆனால் தமிழகத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அப்படி ஒரு வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது. அதனால்தான் தண்ணீர் பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் காட்டி வருகிறது. இந்தப் பிரச்சனைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலை நகர் டெல்லியில் தினம் ஒரு போராட்டம் என்று பல்வேறு போராட்ட வடிவங்களில் போராடி பார்த்து விட்டனர். பிரதமரோ மத்திய அரசோ அசைந்தே கொடுக்கவில்லை.

    உதய் மின் திட்டம்

    உதய் மின் திட்டம்

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கடுமையாக எதிர்த்த திட்டம் உதய் மின் திட்டம். இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் தமிழகத்தின் கடன் தொகை அதிகரிக்கும் என்று கூறியே அவர் இந்த திட்டத்தில் சேர மறுத்து வந்தார். ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு மத்திய அரசு மாநில அரசை மிரட்டியே பணிய வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போதைய மின்துறை அமைச்சர் பியுஸ் கோயல் உதய் மின் திட்டத்தில் தமிழகம் சேரும் பட்சத்தில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறியதாக செய்திகள் உண்டு. ஆனால் இன்று வரை அப்படி எந்த தொகையையும் அவர் வாங்கி கொடுத்ததாக தெரியவில்லை. மாறாக உதய் மின் திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததால் இப்போது கடன் தொகை அதிகமாகி சில ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே கட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். இதுவும் தமிழகத்தின் நிதி நிலையை சரிய வைத்துள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

    டெல்டாவின் துயரம்

    டெல்டாவின் துயரம்

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலினால் அந்தப் பகுதி மக்கள் சந்தித்த துன்பம் ஏராளம் ஏராளம். அவற்றிலிருந்து மீண்டு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். இந்த நிலையில் புயல் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு கேட்ட தொகையில் இருந்து 10% கூட மத்திய அரசு தரவில்லை. ஆனால் எவ்வித பாதிப்புகளும் இல்லாத மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.4500 கோடிகளை அள்ளிக் கொடுக்கிறது மத்திய அரசு. ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது என்னாயிற்று? விளைபொருட்களுக்கு ஆதார விலை உயர்த்தப்பட்டாலும், வருமானம் இரட்டிப்பாக்கப்படவில்லை ஏன் இந்த நிலைமை என்று அரசின் பீடத்தில் நின்று கொண்டு அரசின் அங்கமாக விளங்கும் துணை சபாநாயகர் தம்பிதுரை அரசை கேள்வி கேட்கிறார் பதில் கூறத்தான் ஆளில்லை. பிரதமரின் விவசாயிகள் திட்டம் என்பது நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொருந்துகிறது. நிலம் இல்லாத விவசாயிகளுக்கு உதவவில்லை.

    ரூ. 12,000 கோடி பாக்கி

    ரூ. 12,000 கோடி பாக்கி

    தமிழகத்திற்கு தரவேண்டிய தொகை ரூ.12 ஆயிரம் கோடிகள் நிலுவையில் இருக்கின்றன. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே உங்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். உங்கள் காதுகளில் விழவில்லையா என்று வினவுகிறார் தம்பிதுரை. நிதியில்லாமல் ஒரு மாநிலத்தை எப்படி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்கிறார். தம்பிதுரை ஒருபுறம் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார் என்றால் தமிழக நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் வருத்தப்படுகிறார். ஜி.எஸ்.டி யில் மட்டும் தமிழகத்திற்கு வரவேண்டிய தொகை கிட்டத்தட்ட 6ஆயிரம் கோடிகள் என்கிறார். IGST மூலமாக தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகை 5400கோடிகள் என்றும் GST மூலமாக 450 கோடிகள் என்றும் தமிழக சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கையின்போது பதிவு செய்கிறார்.

    கல்வியிலும் பிரச்சினை

    கல்வியிலும் பிரச்சினை

    அதோடு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய கல்வியிலும் கை வைத்துள்ளது மத்திய அரசு சர்வசிக்ஷான் அபியான் திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியான ரூ. 6 ஆயிரம் கோடிகளை கொடுக்காததால் 34 ஆயிரம் குழந்தைகள் கல்வியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் தமிழக சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் பதிவு செய்த பிரச்சனை. இது ஒருபுறம் என்றால் தமிழகம் முழுவதும் அந்த அந்த பகுதிகளில் ஒவ்வொரு பிரச்சனைகளால் மக்கள் தினம் தினம் கொதித்து போயுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ, தங்களது உயிர் தியாகத்திற்கு எவ்வித பலனும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர், தூத்துக்குடி மக்கள்.

    காவிரியில் கலக்கும் எண்ணெய்

    காவிரியில் கலக்கும் எண்ணெய்

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுத்துக்கொண்டு இருக்கிறது. அங்கு திடீரென்று சில காலத்திற்கு முன்னர் எண்ணைய் குழாய்கள் வெடித்து அங்கிருந்த விவசாய நிலங்களில் எல்லாம் எண்ணை பரவியது. சற்றே தீ பிடித்திருந்தாலும் ஊரே காலியாகியிருக்கும். அங்கிருக்கும் மக்கள் எங்களை வாழ விடுங்கள் என்று கதறுகிறார்கள். கேட்பாரில்லை. தஞ்சைக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து அதிகார மையங்களின் நீண்ட வாசல்களில் தவம் கிடக்கிறார்கள். தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று, கேட்க ஆளில்லை. சற்று மேற்கே வந்தால் கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் ‘கெயில்' நிறுவனத்தை எதிர்த்து நிற்கிறார்கள். வாழ்வாதாரத்தை அளித்துவிட்டு தொழில் வளர வைத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பது அவர்கள் கேள்வி. விடை கூறத்தான் ஆளில்லை.

    அணு உலை அபாயம்

    அணு உலை அபாயம்

    அங்கிருந்து தெற்கே சென்றால் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மக்கள் போராடினார்கள், இப்போதும் போராடுகிறார்கள், ஆனால் ஒரு உலைதானே வேண்டாம் என்றீர்கள் இதோ பாருங்கள் நாங்கள் அனுப்பூங்காவே அமைப்போம் என்று அரசு பிடிவாதமாக நிற்கிறது. ஏழை சொல் அம்பலம் ஏறாமல் தவித்து போய் நிற்கிறார்கள் மக்கள். அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் நகர்ந்துசென்றால் இனையம் மாற்று பெட்டக முனையத்தை எதிர்த்து மீனவர்கள் போராடினார்கள் எப்படியோ வென்றும் விட்டார்கள். அங்கிருந்து மறுபடியும் திரும்பி நாகை தஞ்சை மாவட்டங்களுக்கு வந்தால் மீத்தேனை எதிர்த்து விவசாய பெருங்குடி மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அது போதாதென்று இப்போது கஜாப் புயலும் அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து போடா வழிதெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறார்கள் அவர்கள். மீனவர்களின் பிரச்சனை தீரவேண்டும் என்றால் 56 இஞ்ச் மார்பளவு கொண்ட தன்னால்தான் சாத்தியம் என்றார் பிரதமர் மோடி, ஆனால் இன்னமும் கண்ணீரில் தத்தளிக்கிறார்கள் மீனவர்கள்.

    தவிக்கும் 7 தமிழர்

    தவிக்கும் 7 தமிழர்

    இன்னொரு பக்கத்தில் 28 ஆண்டுகளாக தங்கள் வாழ்வை சிறை கொட்டடியில் கழித்தவர்கள் இப்போது நீதிமன்றம் கூறிய பின்னரும் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படியாக தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும், இன்னும் சொல்வதென்றால் ஒவ்வொரு ஊர்களுமே தங்களின் உரிமைகளுக்காக மத்திய அரசிடம் கெஞ்சும் நிலையை ஆள்வோர் ஏற்படுத்தி விட்டனர். இந்த அவல நிலையை மாற்ற இங்கிருக்கும் மாநில அரசு முயற்சிக்குமா என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவதாக இல்லை. தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதிலேயே அவர்களின் முழு நேரமும் செலவாகிவிடுகிறது. நேற்றைய தினம் தங்கள் மாநில உரிமைகளுக்காக மாநில மக்களை அழைத்துக்கொண்டு தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. போராட்டம் உடனடியாக வெற்றிபெறவில்லை என்றாலும் அகில இந்திய தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அரசு செய்யவில்லை என்றாலும் அடுத்து அமையபோகும் அரசு செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த போராட்டம்.

    திமுக போராடுமா

    திமுக போராடுமா


    தமிழகத்தில் ஆளும் அரசு செய்யத் தயங்கவே செய்யும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் இந்த போராட்டங்களை பற்றி நன்கு அறிந்தவர். குறைந்தபட்சம் அவராவது இப்படி ஒரு போராட்டத்தை டெல்லியில் நடத்தி மாநில மக்களின் குறைகளை போக்குவாரா? மாநில மக்கள் போராட தயாராகவே உள்ளனர். டெல்லியில் சென்று போராடிய விவசாயிகள் இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் அம்மணமாகவும் ஓடி விட்டனர். ஆக போராட தயாராக மக்கள் உள்ளனர். தலைமையேற்க எதிர்க்கட்சி தலைவராவது வருவாரா என்று ஏங்குகின்றனர் மக்கள்.

    English summary
    Will DMK lead a protest like Chandra Babu Naidu in Delhi?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X