For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்தின் திறன் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது : அன்புமணி

தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்தின் திறன் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்தின் திறன் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தொழிற்துறையின் வீழ்ச்சி குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு ஊழல் செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

 மிகப்பெரிய வீழ்ச்சி

மிகப்பெரிய வீழ்ச்சி

மேலும் அந்த அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு 2017ம் ஆண்டில் கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்து மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. 2017ம் ஆண்டில் தமிழகத்திற்கு வெறும் ரூ.1574 கோடி மட்டுமே முதலீடாக வந்திருக்கிறது. இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களுக்கு 2017ம் ஆண்டில் கிடைத்த முதலீடுகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழகம் தான் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

 1574 கோடி ரூபாய்

1574 கோடி ரூபாய்

மராட்டிய மாநிலம் ரூ.18,993 கோடி முதலீட்டுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.11,715 கோடி, குஜராத்துக்கு ரூ.9795 கோடி முதலீடு கிடைத்திருக்கிறது. தென்மாநிலங்களைப் பொறுத்தவரை ஆந்திரப் பிரதேசம் ரூ.4509 கோடியும், தெலுங்கானா ரூ.3306 கோடியும் தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளன. கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும் குறிப்பிடத்தக்க முதலீட்டை கைப்பற்றியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் இவற்றை விட குறைவாக ரூ.1574 கோடி அளவுக்கு மட்டுமே தொழில் முதலீடு கிடைத்துள்ளது.

 மூன்றில் ஒரு பங்கு முதலீடு

மூன்றில் ஒரு பங்கு முதலீடு

தமிழ்நாட்டிற்கு கடந்த 2016ம் ஆண்டில் ரூ.4793 கோடி முதலீடு கிடைத்தது. ஆனால், 2017ம் ஆண்டில் அதைவிட மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான முதலீடு மட்டுமே கிடைத்துள்ளது. 2016ம் ஆண்டில் மொத்தம் 20 தொழில் திட்டங்கள் தமிழகத்திற்கு வந்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டில் வெறும் 9 தொழில் திட்டங்கள் மட்டும் தான் தமிழகத்திற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் தலைமை இல்லாதது தான் முதலீடுகள் குறைவதற்கு காரணம் என்று தொழில்துறையினர் கூறியுள்ள போதிலும் அது மட்டுமே காரணமல்ல.

 நிறுவனங்களின் முதலீடு

நிறுவனங்களின் முதலீடு

அதைத் தாண்டிய காரணம் தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல் தான். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக ஆர்வத்துடன் முன்வருபவர்கள் கூட, அதற்காக தாங்கள் தர வேண்டிய கையூட்டுத் தொகையைக் கேட்டவுடன் பின்வாங்கி வேறு மாநிலங்களுக்கு ஓடுகின்றனர் என்பது தான் உண்மையாகும். இதற்கு பல ஆதாரங்களைக் காட்ட முடியும். உதாரணமாக 2017ம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.3131 கோடி அளவுக்கு முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அதில் பாதியளவு தொகையை மட்டுமே 9 நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.

 உலக முதலீட்டாளர் மாநாடு

உலக முதலீட்டாளர் மாநாடு

மீதமுள்ள தொகையை முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்கள் தமிழக ஆட்சியாளர்கள் கேட்ட கையூட்டை கொடுக்க முடியாமல் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன என்ற உண்மையைத் தான் மேற்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து உணர முடிகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலும் இதே நிலை தான் காணப்பட்டது. 2015-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் கடந்த ஆண்டு வரை ரூ.62,738 கோடி அளவுக்கு மட்டுமே முதலீடு வந்திருப்பதாக தமிழக அரசே தெரிவித்திருக்கிறது.

 செயலாக்கம் பெறாத முதலீடுகள்

செயலாக்கம் பெறாத முதலீடுகள்

ஆனால், உண்மையில் தமிழகத்திற்கு வந்த மொத்த முதலீடுகளின் அளவு ரூ.32,702 கோடி மட்டும்தான். இதிலும் கூட ரூ.19,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலம் சார்ந்த பல்வேறு சர்ச்சைகளால் இன்னும் செயலாக்கம் பெறவில்லை. அதனால் இதுவரை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.13,000 கோடி மட்டும்தான். இது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட தொகையில் வெறும் 5.34 விழுக்காடு மட்டும் தான். தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்தின் திறன் நாளுக்குநாள் மோசமடைந்து வருவதையே இது காட்டுகிறது.

 தொழில் வளம் பெருகாது

தொழில் வளம் பெருகாது

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழிப்பதன் மூலம் மட்டுமே தமிழகத்திற்கு அதிக அளவில் தொழில் முதலீட்டை ஈர்க்க முடியும். அதிக தொழில் முதலீட்டை ஈர்ப்பதன் மூலமாக மட்டுமே வேலைவாய்ப்புகளை பெருக்கி வேலையில்லாமல் காத்திருக்கும் ஒன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது தான் வழி வகுக்கும். ஆனால், தமிழ்நாட்டில் ஊழல் செய்வதை மட்டுமே முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள பினாமி ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும் வரை ஊழல் ஒழிக்கப்படுவதற்கோ, தொழில்வளம் பெருகுவதற்கோ வாய்ப்பில்லை. ஆகவே, தமிழகத்தில் பினாமி அரசு அகற்றப்படுவது தான் தொழில் வளர்ச்சியின் தொடக்கமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu is setting a bad example on Investors says Anbumani. PMK Youthwing Leader Anbumani Ramadoss says that, Tamilnadu is doing worst on Attracting Investors on Business Development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X