For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு படுதோல்வி: ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 81.18 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பது தான் உண்மை என பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும் மிகவும் அவசியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பது தான் உண்மை.

Tamilnagu governmenment failed to create employment opportunities, Ramadoss

தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 81.18 லட்சம் பேர் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். 2007-ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 1.40 கோடி பேர் வேலை கேட்டு புதிதாக பதிவு செய்துள்ளனர். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இரண்டரை லட்சம் பேருக்கு மட்டுமே அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் லட்சணம் இப்படித்தான் இருகிறது.

கடந்த 2007-ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை 49,64,285 ஆகும். அதன்பின் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைக் கூட்டி, வேலை பெற்றோரின் எண்ணிக்கையை கழித்தால் வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 1.87 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், 81.18 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பகங்களில் காத்திருப்பதால், ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் தமிழக அரசால் தங்களுக்கு வேலை வழங்க முடியாது என்ற அவநம்பிக்கையில் வேலைவாய்ப்பக பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர் என்பதை உணர முடிகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வியடைந்ததற்கு இதைவிட சிறந்த சாட்சியம் தேவையில்லை.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்றது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே உள்ள பணியிடங்களையும் அரசு ஒழித்து வருகிறது. 1998-ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது அரசு, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 14.50 லட்சமாக இருந்தது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 12.50 லட்சமாக குறைந்தது.

கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 31.12.2014 அன்றைய நிலவரப்படி அரசு ஊழியர் எண்ணிக்கை 5,27,790, பொதுத்துறை பணியாளர்கள் எண்ணிக்கை 3,12,149, உள்ளாட்சி ஊழியர்கள் 1,65,325 என 10 லட்சத்து 5164 பேர் மட்டுமே அரசு சார்ந்த பணிகளில் உள்ளனர். அதற்குப் பிந்தைய இரண்டரை ஆண்டுகளில் ஒரு லட்சம் காலியிடங்கள் ஏற்பட்டிருக்கும் எனக் கொண்டால், தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் ஐந்தரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இது ஐந்தரை லட்சம் பேரின் அரசு வேலைவாய்ப்பை பறிக்கும் துரோகத்திற்கு இணையானதல்லவா?

2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.40,091 கோடி மதிப்புள்ள 37 தொழில்திட்டங்களைச் செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன்மூலம் 2.52 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்பின் அதிமுக ஆட்சியில் ரூ.31,706 கோடி மதிப்பில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒற்றைச்சாளர அனுமதி மூலமாக ரூ.14,896 கோடி உட்பட ரூ.46,602 கோடி முதலீடு வந்துள்ளதாகவும், அதன்மூலம் 2.50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய 98 நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதாகவும், அதன்மூலம் 4.70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆக, மொத்தம் கடந்த 10 ஆண்டுகளில் கிடைத்த முதலீடுகளைக் கொண்டு 9.72 லட்சம் பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் 9,000 பேருக்குக்கூட தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை. இதுதான் திராவிட ஆட்சியாளர்களின் சாதனை ஆகும்.

ஒருபுறம் தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அனைத்தும் தமிழகத்தில் நிலவும் ஊழல் காரணமாக கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆந்திரத்தின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கும், தெலங்கானா மாநிலத்திற்கும் செல்கின்றன. அம்மாநிலங்களில் தொழில் தொடங்க கையூட்டு தர வேண்டியதில்லை என்பதாலும், விண்ணப்பித்த 2 வாரங்களில் அனுமதி கிடைப்பதுமே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதில்லை.

தமிழகத்தில் இயங்கும் என்.எல்.சி, சென்னை பெட்ரோலிய நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம், தெற்கு தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வட இந்தியர்களுக்கே வேலை வழங்குகின்றன. தனியார், பொதுத்துறை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குறிப்பிட்ட அளவு பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்குவதன் மூலம் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுகவுக்கு அதற்கான துணிச்சலோ, செயல்திறனோ கிடையாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு தாராளமாக வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சூழலை பாமக ஏற்படுத்தும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK supremo Dr.S. Ramadoss Accusation on Tamilnagu governmenment failed to create employment opportunities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X