For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரியாதைக்குரிய டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு!

நீட் மாணவர்களின் எதிர்காலம் கருதி, பாஜக மாநில தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு பற்றி தமிழிசை செளந்தர்ராஜன்-வீடியோ

    சென்னை: மரியாதைக்குரிய தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு,

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தமிழக மக்கள் உங்களை எவ்வளவு நேசித்தார்கள் தெரியுமா? ஆதிக்க போக்கு நிறைந்த பாஜகவிலே நீங்கள் அங்கம் வகித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்கள் மேல் அதிக மரியாதை வைத்திருந்தனர். ஏன்... இன்னமும்கூட உங்கள் மேல் அரசியலையும் தாண்டி பலபேர் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

    நீங்கள் பாஜகவில் இருந்தாலும் எச். ராஜா போன்றோ, மற்றவர்களைப் போன்றோ உங்களை ஒரு முழு பாஜகவாதியாக பார்க்க மக்களுக்கு மனம் வரவில்லை. அதற்கு காரணம் உங்களது பாரம்பரியம், உங்கள் தகப்பனார் மீதுள்ள மரியாதை, ஏன் உங்களிடமே பொதிந்திருக்கும் சில நல்ல குணங்களே.

    குமரியார் மகள் நாகரீகம் மிக்கவர்

    குமரியார் மகள் நாகரீகம் மிக்கவர்

    ஒரு முறை பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் நீங்களும் பங்கேற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில், அண்ணே என்று அவரை அழைத்து பேசும் பாங்கையும், அதேபோல எதிர்க்கட்சியினர் யாராக இருந்தாலும், மரியாதைக்குரியவர், பாசத்துக்குரியவர் என்று நீங்கள் பேசும்போது உங்களையும் அறியாமல் வார்த்தைகள் தெறித்து விழுவதையும் மக்கள் உன்னிப்பாக பார்த்துதான் வந்திருக்கிறார்கள். அதேபோல, திமுக தலைவர் கருணாநிதிகூட, "குமரியார் மகள் அரசியல் நாகரீகத்துடன் இருப்பார்" என்றும் "மக்கள் விரோத கட்சியிலே அங்கம் வகித்தாலும் அவரது அடிப்படை குணம் ஒருபோதும் மாறாது" என்றும் பாராட்டியதையும் யாரும் மறந்திருக்க முடியாது. உங்களை உங்கள் பெற்றோர் வளர்த்தவிதம்தான் உங்களை மக்கள் முழுவதுமாக வெறுக்கி ஒதுக்கி தள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

    தனிநபர் தாக்குதல் ஏன்?

    தனிநபர் தாக்குதல் ஏன்?

    ஆனால் கடந்த 4 வருடங்களாக உங்கள் மீதான மக்கள் கண்ணோட்டம் மாற என்ன காரணம்? சமூக வலைதளங்கள் உட்பட நெட்டிசன்கள் உங்களை விமர்சித்தும், கிண்டல்-கேலி செய்தும் வருகிறார்களே, ஏன்? ஒருவரின் உருவத்தை விமர்சிப்பது நாகரீகம் அல்ல. அப்படி விமர்சிப்பது தவறும்கூட. ஆனால் ஒரு பெண் என்றும் பாராமல், மருத்துவர் என்றும் பாராமல், குடும்ப பிண்ணனியையும் யோசிக்காமல், கட்சியின் மாநில தலைவி என்ற பொறுப்பையும் பொருட்படுத்தாமல், தனிப்பட்ட தாக்குதலை உங்கள் மீது தொடுக்க என்ன காரணம்? நீங்கள் சார்ந்துள்ள கட்சியும், அதற்கு வக்காலத்து வாங்கும் போக்கும்தானே.

    வாஜ்பாய் நிலைதான்

    வாஜ்பாய் நிலைதான்

    பாஜகவுக்கு எப்போதுமே ஒரு முகமூடி தேவைப்படுகிறது. அது தன் நிஜமுகத்தை என்றுமே நேராக காட்டியதில்லை. மக்களிடம் பிரபலமும், மரியாதையும் பெற்றவரை முன்னிறுத்தியே தங்களை காரியங்களை சாதித்து கொள்வதேயே வழக்கமாக வைத்துள்ளது. அன்றைய மத்திய ஆட்சியில் வாஜ்பாய் என்ற வெள்ளை மனம் படைத்தவரின் முகம் மக்கள்முன் காட்டப்பட்டது என்றாலும், அவருக்கு பின்னே அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் கோர முகங்கள் மறைந்திருந்ததே உண்மை. அன்று வாஜ்பாய்க்கு வந்த அதேநிலைதான் இன்று உங்களுக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப்பெண், படித்தவர், அதிலும் மருத்துவர், பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர், தமிழக மக்களால் நேசிக்க கூடியவர் என்ற காரணங்களை முன்வைத்தே உங்களுக்கு மாநில தலைவர் பொறுப்பு வந்தடைந்தது.

    கல்லடி பட்ட மரமாய்...

    கல்லடி பட்ட மரமாய்...

    சுப்பிரமணியசாமி, எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன் போன்றோர் பாஜக மாநில தலைவர்களாக பதவி வகித்திருந்தால் பாஜக தமிழகத்தில் என்றோ காணாமல் போயிருக்கும். ஆனால் அவர்கள் இன்று உங்கள் பின்னால் இருக்க, நீங்களோ கல்லடி பட்ட மரமாய் ஆகி கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. மக்கள் இன்று உங்கள் மீது இவ்வளவு வெறுப்புக்களை உமிழும் அளவுக்கு பாஜகவின் தடாலடி முடிவுகளுக்கெல்லாம் ஏன் தலையாட்ட வேண்டும்? யார் உங்களை நிர்பந்திப்பது? செய்தியாளர்களின் சந்திப்புகளில் கேட்கப்படும் சரமாரி கேள்விகளுக்கெல்லாம் தட்டு தடுமாறி மழுப்பல்களுடன் பதில் வர என்ன காரணம்? ஏன் இப்படி நடந்து கொண்டு வருகிறீர்கள்? உங்களது பதவியை தக்க வைத்துக்கொள்ள இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீரா? அல்லது கட்சி தலைமையின் உத்தரவா? அல்லது சுப்பிரமணியசாமி, எச்.ராஜா போன்று பலமான ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை என்ற காரணத்தினால்,அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்களா?

    நீட் மைய அறிவிப்பு தேவைதானா?

    நீட் மைய அறிவிப்பு தேவைதானா?

    கடந்த இரு தினங்களாக தமிழகம் பட்ட பாட்டையும், மக்களின் மனதின் கொதிநிலையின் வெப்பத்தையும் உணர முடிந்ததா? உயிர்பலிக்கிடையே நடைபெற்ற நீட் தேர்வு முறை லட்சணத்தை பார்த்தீர்களா? 2 நாள் முன்பு தேர்வு மையங்களை அறிவித்தால் மாணவர்களும் பெற்றோர்களும் எப்படி ஆயத்தமாவார்கள்? ஏன் ராஜஸ்தானிலும் பீகாரிலும் தேர்வை நடத்த வேண்டும். அதற்கு ஏதேனும் தலைபோகிற காரணம் ஏதாவது உண்டா? தமிழ்நாடு எங்கே இருக்கிறது? ராஜஸ்தான் எங்கே இருக்கிறது? பெண்பிள்ளைகள் அனைவருமே கிட்டத்தட்ட 18 வயதை நிரம்பியவர்கள். அவர்களை வெகுதொலைவு பயணத்துக்கு, மொழி, இடம் தெரியாத, புரியாத தேசத்துக்கு, தனியாக பெற்றோர் அனுப்பி வைக்க முடியுமா? அப்படியே பெற்றோர் அழைத்து சென்றாலும் இது கோடை விடுமுறை காலம். ரயில்களில் எப்படி முன்பதிவு செய்து டிக்கெட் பெற முடியும்? அதுவும் நாட்டின் கடைகோடி மாநிலமான சிக்கிமில் கூட தேர்வெழுத தமிழக மாணவர்களை நிர்ப்பந்திப்பது நியாயமா? இப்படி ஒரு அறிவிப்பே தேவையில்லாத ஒன்று என்று உங்கள் அடிமனதுக்கே தெரியவில்லையா?

    ஏன் இவ்வளவு கெடுபிடிகள்?

    ஏன் இவ்வளவு கெடுபிடிகள்?

    இவ்வளவு வருடங்களாக தமிழ்நாட்டில் எப்படி மருத்துவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன என்பதை உங்கள் சிறு வயது முதலே பார்த்து வந்திருப்பீர்களே. காலம் காலமாக நம் பிள்ளைகள் சத்தமில்லாமல் 5 வருடம் படித்து வெளியே வரவில்லை? தமிழகத்தில் படித்த தலைசிறந்த மருத்துவர்கள் உருவாகவில்லை? அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்து பின் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தபின் ஆங்கில திறமையை வளர்த்து மருத்துவராக வெளியே வரவில்லை? தமிழகத்தின் மருத்துவர்கள் ஏராளமானோர் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக பல மருத்துவமனைகளில் கொடிகட்டி பறக்கவில்லை? தற்போது வரை எண்ணற்ற உயிர்களை அவர்கள் காப்பாற்றி வரவில்லை? ஏன் நீங்கள் மருத்துவம் படிக்கும்போதே இதை கண்கூடாக உணர்ந்திருப்பீர்களே? அப்போதெல்லாம் வராத பிரச்சனை இப்போது வரக் காரணம் என்ன? நீங்கள் படிக்கிற காலத்தில் இதுபோன்ற கெடுபிடிகள் இருந்திருந்தால் நீங்கள் மருத்துவராக உருவாகி இருப்பீர்களா?

    அகதிகளாக திரியவிடப்பட்ட மாணவர்கள்

    அகதிகளாக திரியவிடப்பட்ட மாணவர்கள்

    தேர்வெழுத ஏன் தொலைதூரம் செல்கிறோம், ஏன் இப்படி அகதிகளாக திரியவிடப்பட்டுள்ளோம், ஏன் இப்படி பந்தாடப்படுகிறோம் என்று கூட தெரியாமல் மாணவர்கள் வெளிறிய முகத்துடன் இருந்ததை கவனிக்கவில்லையா? கடந்த முறை இதேபோன்று நீட் தேர்வின்போது, மாணவிகள் கொண்டு வந்த கைப்பைகளை சோதனையிட்டதில் சானிடரி நாப்கின்கள் சிதறி விழுந்ததையும், கண்ணீருடன் அவற்றினை எடுத்துக் கொண்டு மாணவிகள் தேர்வை சந்தித்ததையும் ஒரு தாயாக, மருத்துவராக, தமிழ் மகளாக, கட்சியின் மாநில தலைவியாக, நீங்கள் உணரவில்லையா? நேற்றைய தேர்வில் மாணவிகளின் ஆடைகள் களையப்பட்டு, தலைமுடிகள் அவிழ்க்கப்பட்டு, மூக்குத்தியைக் கூட அனுமதிக்காமல், வரம்பின் எல்லைகூட தெரியாமல் நடந்துகொண்ட நாகரீகத்தை அறிந்தீர்களா? இதையெல்லாம் பார்க்கும்போது, இரு தினங்களுக்கு முன்பு மன்சூரலிகான் சொன்ன வன்முறை வார்த்தைகள் சரியென்றே நினைக்கவே தோன்றுகிறது.

    நீட் விலக்கிற்கான பரிசா?

    நீட் விலக்கிற்கான பரிசா?

    இவ்வளவு அமர்க்களங்கள் செய்ததற்கு பதிலாய், தமிழக மக்களெல்லாம் மருத்துவர் மருத்துவர் ஆக கூடாது, அதற்கான தகுதியெல்லாம் கிடையாது என்று நேரிடையாகவே திரு.பாரத பிரதமர் அறிவித்திருக்கலாமே? நீட் தேர்வு விலக்கு கேட்ட பிள்ளைகளுக்கு தந்த தண்டனையா இது? பொதுப்பட்டியலில் கல்வியை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு விடுக்கும் ஒருவகை மிரட்டலா இது? அந்தந்த மாநிலங்களிலேயே எழுதுவதற்குக்கூட ஏற்பாடு செய்ய முடியாத நிறுவனமாக சிபிஎஸ்இ உள்ளதா? ஏன் மாநில அரசின் ஆலோசனையை கூட கேட்கவில்லை? இந்த கூத்தையெல்லாம் பார்த்தால் தற்போது பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு மருத்துவராகும் ஆசை எழுமா?

    விடிவு பிறக்க காத்திருக்கும் மக்கள்

    விடிவு பிறக்க காத்திருக்கும் மக்கள்

    தமிழிசை அவர்களே, எத்தனையோ தாய்மார்கள் இன்று கண்ணீருடன் அழுதுகொண்டிருக்கிறார்கள், எத்தனையோ மாணவர்கள் தங்களது எதிர்காலம் என்னவாகும் என விழிபிதுங்கி மனஉளைச்சல், பயணக்களைப்புடன் வெறித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், தமிழகத்தில் தலைசிறந்த மருத்துவர்கள் வரவேண்டும் என்று அடிமனதில் நினைத்து, தமிழகத்துக்கு விடிவு பிறக்க நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கி கொள்ள நடவடிக்கை எடுங்கள், இல்லையென்றால் தயவு செய்து பாஜகவை விட்டு வெளியே வர முயற்சி செய்யுங்கள். அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைந்து கொண்டோ அல்லது தனிக்கட்சி தொடங்கியோ தமிழக மக்களுக்கு நீங்கள் நீங்கள் சேவை புரியுங்கள். அப்படி நீங்கள் செய்ய முன்வந்தால், நீங்கள் செய்த 4 வருட தவறுகளை மன்னிக்க தமிழக மக்கள் இன்னும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.


    இப்படிக்கு,
    உங்கள் நலம் விரும்பி

    English summary
    The Tamil Nadu neet students have been suffering for the last 2 days to write the selection process. BJP State President Tamizhisai Soundarajan should take action for students in fulfilling his dream of becoming a doctor. In Tamil Nadu you need to get full exemption from the selection of the candidate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X