குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - நெல்லை அருகே பணிகள் நிறுத்தம்
நெல்லை: நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் கடைத் திறப்பதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
நெல்லை மாவட்டம் பணகுடி மெயின் ரோட்டில் இயங்கி வந்த 3 டாஸ்மாக் கடைகளில் இரண்டை கடந்த மாதம் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கடைகள் மூடப்பட்டு தற்போது ஒரு கடை மட்டுமே சேரன்மகாதேவி ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

இதனையும் மாற்றி அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பணகுடி அண்ணா நகர் பகுதியில் டாஸ்மாக் கடை தொடங்குவதற்காக கட்டப்பட்டு வந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இதையடுத்து அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இடத்தை வி்ட்டு விட்டு அதிகாரிகள் அழகியநம்பி புரத்தில் தனியார் இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் போட்டுள்ளனர். இதுகுறித்து அங்கு வேலை செய்தவர்களிடம் விசாரித்தபோது டாஸ்மாக் கடை கட்டுவதற்கான பணிகளை தொடங்குவது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமுக செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் அப்பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்டிட வேலையை நிறுத்தி விட்டு கட்டிட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். பணகுடி போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!