For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டிபட்டிக்கு இடைத்தேர்தல்? தினகரனுடன் மல்லுக்கட்டும் தங்க.தமிழ்ச்செல்வன் முடிவின் பரபர பின்னணி

தகுதி நீக்கத்தை எதிக்கும் வழக்கை வாபஸ் பெற்று இடைத்தேர்தலை எதிர்கொள்ள தங்க தமிழ்ச்செல்வன் முடிவெடுத்தது ஏன் என்பது குறித்த பின்னணியை விவரிக்கிறது இச்செய்தி.

Google Oneindia Tamil News

சென்னை: தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனின் திடீர் முடிவு, அந்த கூடாரத்தை அதிர வைத்திருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே சசிகலா ஆதரவாளராக இருக்கிறார் தமிழ்ச்செல்வன். இதை தினகரன் ரசிக்கவில்லை. அதன் எதிரொலியாகத்தான் இப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் காட்டியிருக்கிறார் தங்க தமிழ்ச் செல்வன் என்கின்றனர் சசிகலா குடும்ப கோஷ்டிகள்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா சென்றதில் இருந்தே, 'அவரை யாரெல்லாம் சந்திக்க வேண்டும்' என்பதில் தெளிவாக இருந்தார் தினகரன். சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசுவதற்குப் பலமுறை முயற்சி செய்தும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நடராஜன் மரணத்துக்குப் பரோலில் வந்த சசிகலாவை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அவர் சிறைக்குச் செல்வதற்கு முதல்நாளிலேயே அதற்கான அனுமதி கிடைத்தது.

தினகரன் பேரவை

தினகரன் பேரவை


'தன்னைத்தாண்டி யாரும் சசிகலாவை நெருங்கிவிடக் கூடாது' என்பதில் தினகரன் உறுதியாக இருப்பதை தங்க.தமிழ்ச்செல்வன் ரசிக்கவில்லை. இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய அவர், சின்னம்மா என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செயல்பட்டு வருகிறேன். அவர் யார் பேச்சைக் கேட்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டுச் சென்றாரோ அதில் இருந்து இம்மியளவும் நான் மாறவில்லை. ஆனால், சிலர் இதை நம்புவதில்லை. குவைத்தில் சின்னம்மா பேரவை என்ற அமைப்பின் சார்பில் பேசுவதற்கு எனக்கு அழைப்பு அனுப்பினார்கள். இதற்காக, தினகரனிடம் அனுமதி கேட்டேன். ' இப்படியொரு கூட்டத்துக்குப் போகக் கூடாது' எனக் கறாராகக் கூறிவிட்டார். எனவே, அந்த அமைப்பின் பெயரை மாற்றுமாறு குவைத் நிர்வாகிகளிடம் கேட்டேன். அவர்களும், தினகரன் பேரவை என மாற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உடனடியாக அனுமதி கொடுத்தார் தினகரன். இப்படித்தான் அ.ம.மு.க சென்று கொண்டிருக்கிறது' எனப் பேசியிருக்கிறார்.

தினகரனுக்கு ஷாக்

தினகரனுக்கு ஷாக்

இந்த அதிருப்தியின் தொடக்கமாகத்தான் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் அதிரடி முடிவை அவர் எடுத்திருக்கிறார். தகுதிநீக்க வழக்கின் முரண்பட்ட தீர்ப்பை எதிர்பார்க்காத தங்க.தமிழ்ச்செல்வன் நேற்று பேசும்போது, ' நான் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். என்னுடைய தொகுதி மக்களுக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை. அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்தால்கூட, என் பேச்சை அவர்கள் கேட்பதில்லை. கடந்த ஒன்பது மாதங்களாக மக்களுக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை. எனவே, ஆண்டிபட்டி தொகுதிக்கு நிரந்தர எம்.எல்.ஏ கிடைப்பதற்காக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக, இந்த வழக்கில் இருந்து நான் மட்டும் விலகிக் கொள்கிறேன். தினகரன் அணியிலேயே தொடர்ந்து நீடிப்பேன் என அதிரடியாகக் கூறிவிட்டார். இதற்குப் பதில் அளித்த தினகரனும், மூன்றாவது நீதிபதி நியமிக்கப்படும்போது, அவரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுங்கள் என அவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். இடைத்தேர்தல் வந்தாலும் குக்கர் சின்னத்திலேயே தங்க.தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் எனக் கூறினார்.

 தங்க தமிழ்ச்செல்வன் புறக்கணிப்பு

தங்க தமிழ்ச்செல்வன் புறக்கணிப்பு

"இருவரும் பேசி வைத்துக் கொண்டு செயல்படுவது போல வெளிஉலகுக்குக் காண்பித்தாலும் உள்ளுக்குள் நிலவரம் கலவரமாக இருக்கிறது. இப்போது வரையில் தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட சில எம்.எல்.ஏக்களின் செலவுகளை விவேக்தான் கவனித்து வருகிறார். அவரிடம்தான் மனக்குமுறல்களை எல்லாம் இறக்கி வைக்கிறார். இந்தத் தகவல் சசிகலா கவனத்துக்குச் செல்லும் எனவும் அவர் நம்புகிறார்" என விவரித்த டெல்டாவைச் சேர்ந்த சசிகலா உறவினர் ஒருவர், "சென்னை அசோக் பில்லர் அருகில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான இடத்தில் கட்சி அலுவலகம் திறந்தார் தினகரன். இந்த நிகழ்ச்சியில் தங்க.தமிழ்ச்செல்வன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து தினகரன் கேட்டபோது, உடல்நலம் சரியில்லை' என ஒரே வரியில் பதில் கூற, ' அப்படியா...சரி' என முடித்துக் கொண்டார். திவாகரனுடன் தினகரன் மோதியதையும் தங்க.தமிழ்ச்செல்வன் ரசிக்கவில்லை. ' குடும்பத்துக்குள்ளேயே இப்படி மோதிக்கிட்டு இருந்தால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? நாங்க என்னதான் முடிவெடுக்கிறது' என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பினார்.

திவாகரன் விருந்தில் பங்கேற்பு

திவாகரன் விருந்தில் பங்கேற்பு

இந்த மோதலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான், திவாகரன் அளித்த விருந்தில் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். இதில் இருந்தே தங்க தமிழ்ச்செல்வனை சந்தேகக்கண் கொண்டுதான் பார்த்து வந்தார் தினகரன். அதனால்தான் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவருக்குத் தகவல் சொல்லாமல் புறக்கணிக்கும் வேலையில் இறங்கினார். இந்த மோதல் வீதிக்கு வந்ததன் அடையாளம்தான், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இருந்து தங்க.தமிழ்ச்செல்வன் மட்டும் வெளியேறியது. இதற்கு சசிகலா குடும்பத்தினர் சிலரது ஆசிர்வாதங்களும் உண்டு" என்றார்.

English summary
According to the sources said Thanga Tamilselvan who was disqualified by Speaker now revolt against AMMK Deputy General Secretary Dinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X