For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டு சோத்து பெருச்சாளிகளும், புதிய தலைமை செயலாளரும்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணனின் மகள் கிரிஜா வைத்தியநாதன்தான் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர். வெங்கிடரமணன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக டிசம்பர் 22, 1990 முதல் டிசம்பர் 21, 1992 வரையில் பணியாற்றியிருக்கிறார்.

இந்த காலகட்டம் இந்திய அரசியலில் மிகவும் முக்கியமானதோர் காலகட்டம். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பி.வி. நரசிம்மராவ் பிரதமராகவும் மன்மோஹன் சிங் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட காலகட்டம். பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக தொடங்கிய நேரம். 1991 ல் நரசிம்மராவ் அரசு பொறுப்பேற்ற போது ஒரு வார காலம் மட்டுமே இந்தியாவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. அப்போதுதான் சர்வதேச செலவாணி நிதியத்திடம், (ஐஎம்எஃப்) இருந்தே கடன் வாங்கும் சூழலுக்கு இந்தியா தள்ளப் பட்டது. இதற்காக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை இந்தியா குறைத்துக் கொள்ளும் (devaluation) நிலைக்குத் தள்ளப் பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் devaluation இரண்டு முறைதான் மேற்கொள்ளப் பட்டது. முதலில் 1967, பின்னர் 1991 ல் நிகழ்ந்தது. இந்த முக்கிய நிகழ்வின் போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர்தான் வெங்கிடரமணன்.

The challenges before new CS Girija Vaidhyanathan

இவரது மகளான கிரிஜா வைத்தியநாதன் 1981 ம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. ஐஐடி யில் பி.டெக் பட்டம் பெற்றவர். பின்னர் 2012 ல் சென்னை ஐஐடியில் நலவாழ்வு பொருளாதாரத்தில் (Health Economics) பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருக்கிறார். பொது சுகாதாரம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். 'அரசாங்கங்கள் செலவு செய்து உருவாக்கும் பொது சுகாதாரக் கொள்கைகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளின் பலன்கள் யாருக்குப் போய்ச் சேருகின்றன? ஏழைகளுக்கா அல்லது பணக்காரர்களுக்கா?' என்பதுதான் அவரது ஆராய்ச்சித் தலைப்பாக இருந்திருக்கிறது.

'ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டே அவர் ஐஐடி யில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவருக்கு எப்போதுமே ஆராய்ச்சியில், குறிப்பாக சுகாதாரம் சம்மந்தமான விஷயங்களில் அரசாங்கங்களின் கொள்கை வகுப்பில் ஆக்கப் பூர்வமான தாக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ச்சியாகவும், வலுவாகவும் இருந்து வந்திருக்கிறது. இது போன்ற விஷயங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும் அவர் உன்னிப்பாக கவனித்தே வந்திருக்கிறார்' என்று ஒன்இந்தியாவிடம் கூறினார், ஐஐடி யில் அவருடன் பி ஹெச்டி பயின்ற பொருளாதார நிபுணர் ஒருவர்.

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப் பட்டதில் இவருக்கு முக்கிய பங்கிருப்பதாகவும் கூறப்படுகிறது.

'ஆம். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் டிசைன் என்று சொல்லப்படும், வடிவமைப்பு, அதாவது எந்தெந்த வியாதிகளுக்கு எந்தெந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்புவது உள்ளிட்ட நடைமுறைகளை இவர்தான் உருவாக்கினார். சுகாதாரம் மற்றும் கல்வியில் அரசின் கொள்கை வகுப்பில் தொடர்ச்சியாக கருத்தாக்கங்களை கொடுத்துக் கொண்டிருப்பதுதான் (inputs) இவருக்குப் பிடித்தமான பணி,' என்று மேலும் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த அந்த பொருளாதார நிபுணர்.

இவரது கணவர் ராஜா வைத்தியநாதன் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயின்றவர். 2007 ம் ஆண்டு காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தமிழக தலைமை அதிகாரியாக பணி புரிந்திருக்கிறார். தற்போது மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். திருமணமான ஒரு டாக்டர் மகள் சென்னையில் இருக்கிறார். பிடெக் படித்த ஒரு மகன் ஹாங்காங்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ராஜா வைத்தியநாதன் திரைப்பட நடிகர் எஸ்வி சேகரின் சொந்த அண்ணன்.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போதுள்ள தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலில் கிரிஜா வைத்தியநாதனால் என்ன சாதிக்க முடியும்? எப்படி செயல்பட முடியும்? என்பதுதான் முக்கியமான கேள்வி. ஏக இந்தியாவிலும் இல்லாத ஒரு வித்தியாசமான நிலைமை தமிழ் நாட்டு அரசு நிர்வாகத்தில் இருக்கிறது. அதுதான் அரசு ஆலோசகர் பதவி என்பது. எல்லா மாநிலங்களிலும் தலைமை செயலாளர்தான் தலைமை நிர்வாக அதிகாரி, அதனால்தான் அவர் சீஃப் செகரட்டரி. ஆனால் இந்த ஆலோசகரோ தலைமை செயலாளருக்கே உத்தரவு போடும் மேலதிகாரி. அதனால்தான் இவரை சூப்பர் சீஃப் செகரட்டரி என்றே அரசு அதிகாரிகள் வட்டாரங்களில் அழைக்கிறார்கள்.

ஜெயலலிதா 2011 ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது தொடங்கிய இந்த வியாதி இன்றளவும் தொடர்கிறது. முதலமைச்சருக்கும் ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்துக்கும் இடையிலான பாலமாக ஆலோசகர்தான் இருந்து கொண்டிருக்கிறார். தலைமை செயலாளரே இந்த ஆலோசகர் மூலம்தான் முதலமைச்சரை அணுக முடியும் என்பதுதான் ஜெ இருந்த வரையில் யதார்த்தம். தற்போது இந்த அமைப்பில் என்ன பெரிய மாற்றம் வரப்போகிறது என்று தெரியவில்லை. இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் ஆலோசகர் என்று ஒரு பதவி உண்டு. ஆனால் தமிழகத்துக்கும் அந்த மாநிலங்களுக்குமான பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. அந்த மாநிலங்களின் ஆலோசகர்கள் வெறும் ஆலோசகர்கள் மட்டும்தான். அவர்கள் தலைமை செயலாளர்கள் கீழ்தான் பணி புரிகிறார்கள். ஆனால் இங்கோ ஆலோசகர்கள் சூப்பர் சீஃப் செகரட்டரி மட்டுமல்ல, அவர்கள் தனியானதோர் அதிகார மையமாகவும் செயற் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போதய ஆலோசகர் சர்வ வல்லமை படைத்த அரசின் உயரதிகாரி. தமிழக தலைமை செயலகத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் இவரிடம் தான் ரிபோர்ட் செய்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம். இனிமேல் இவர்கள் புதிய தலைமை செயலாளரிடம் ரிப்போர்ட செய்வார்களா அல்லது பழைய நிலைமையே தொடரப் போகிறதா? மற்றோர் முக்கியமான விஷயம் இந்த ஆலோசகர் அஇஅதிமுக வில் தற்போது வரையில் அசைக்க முடியாத அதிகார மையமாக இருந்து கொண்டிருக்கும் நபரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இது புதிய தலைமை செயலாளரின் பணியை இன்னமும் சிக்கலானதாக ஆக்குகிறது. அரசு நிர்வாகத்தில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாகவே கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒருவரை மீறி தன்னிச்சையாக (independent) புதிய தலைமை செயலாளரால் செயற் பட முடியுமா? ஜெ இருந்த வரையில் ஆலோசகரை மீறி பதவியில் இருக்கும் எந்த உயரதிகாரியாலும் தன்னிச்சையாக எந்த காரியத்தையும் சாதிக்க முடிந்தது இல்லை.

மற்றோர் முக்கியமான சவால் முதலமைச்சரின் அலுவலகத்தில் இருக்கும் ஓய்வு பெற்ற சில அதிகாரிகள். இவர்கள் ஜெ வின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். ஆலோசகருக்கும் இவர்களுக்கும் சரியான பணிச் சூழல், தொடர்பு அதாவது working relationship உண்டு. இவர்கள் 2011 க்குப் பிந்தய தமிழக நிர்வாகச் சூழலில் மற்றோர் அதிகார மையம். ஓய்வு பெற்ற இந்த அதிகாரிகள்தான் ஆலோசகரின் ஆசிர்வாதங்களின் படி பணியில் இருக்கும் அதிகாரிகளை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் டிசம்பர் 22 ம் தேதி ராம்மகன் ராவ் வீட்டில் நடைபெற்ற ரெய்டுகள் ஒரு செய்தியை தமிழக அரசு அதிகாரிகள் வட்டாரத்திற்கு (Beauracrats) கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 'தலைமை செயலாளர் வீட்டில் நடந்த ரெய்டுகள் தெளிவாகவே ஒன்றை சொல்லி விட்டன. இனிமேல் தமிழகத்தை ஆளப் போவது மத்தியில் இருக்கும் மோடி அரசுதானே தவிர இங்குள்ளவர்கள் அல்ல. நேரடியாகவே தன்னுடைய ஆதிக்கத்தை மத்திய அரசு தமிழக அரசு நிர்வாகத்தில் செலுத்தத் துவங்கி விட்டது. ஜெ போன பிறகு வந்திருக்கும் முதலமைச்சர் பலவீனமான முதலமைச்சர். ஆகவே அதிகாரிகள் இனிமேல் தங்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்றே மோடி அரசு விரும்புகிறது. இந்த புதிய சூழலை புத்திசாலித்தனமான அதிகாரிகள் புரிந்து கொண்டு அதற்கேற்பவே நடந்து கொள்ளுவார்கள் என்றே நினைக்கிறேன்,' என்கிறார் ஓய்வு பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

இவர் சொல்லும் மற்றோர் தகவலும் சுவாரஸ்யமானது. 'ரெய்டுகள் நடந்து கொண்டிருக்கும் போதே கிரிஜா வைத்தியநாதனை புதிய தலைமை செயலாளராக நியமிக்கும்படி மத்திய அரசிடமிருந்து முதலமைச்சருக்கு உத்தரவு வந்து விட்டது. ஆனால் அஇஅதிமுக வின் அதிகார மையம் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஓபிஎஸ் ஸால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. பின்னர் மத்திய அரசின் அழுத்தம் அதிகமானதால்தான் ஓபிஎஸ் அரசு இறங்கி வந்தது. இதனால்தான் ஒரு நாள் காலதாமதம்' என்று மேலும் கூறுகிறார் அவர்.

ராம்மோகன் ராவ் வீட்டில் ரெய்டுகள் நடந்த போது தமிழக அரசிடமிருந்து ஒரு நாள் முழுவதும் எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை. மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவிக்கிறார். ஆனால் தமிழக அரசு மெளனம் காத்தது. டில்லியில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலாளர் அலுவலகம், வீடுகளில் ரெய்டுகள் நடந்த போது அடுத்த நிமிடமே கெஜ்ரிவால் அதனைக் கண்டித்து கடுமையாக பேசினார், அறிக்கைகள் வெளியிட்டார். ஆனால் தமிழக அரசோ சுமார் 30 மணி நேரம் மெளனியாக இருந்து பின்னர்தான் ராம் மோகன் ராவ் மீது நடவடிக்கை எடுத்தது.

கெஜ்ரிவாலுக்கு இருந்த தைரியம் ஓபிஎஸ் ஸுக்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன என்பதை சேகர் ரெட்டியிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் அசாதரணமானதோர் கட்டத்தில்தான் தமிழ் நாட்டின் புதிய தலைமை செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் எந்தளவுக்கு தமிழக அரசு நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவ ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் 'கட்டு சோத்து பெருச்சாளிகளுடன்' மல்லுக் கட்ட முடியும் என்பது சுவாரஸ்யமான கேள்விதான்!

English summary
Mani's analysis on the challenges before the New Chief Secretary of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X