For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: அப்படியே கலைஞரை பார்த்தது போல இருந்தது.. சிலிர்த்து விட்டேன்.. முல்லைவேந்தன் நெகிழ்ச்சி

ஸ்டாலினை பார்க்கும்போது கருணாநிதியை பார்ப்பதுபோல உள்ளதாக முல்லைவேந்தன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அப்படியே கலைஞரை பார்த்தது போல இருந்தது- முல்லைவேந்தன் நெகிழ்ச்சி- வீடியோ

    சென்னை: "கலைஞர் நாற்காலியில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்கார்ந்திருந்ததை பார்த்தும் எனக்கு ஒரு நிமிஷம் அப்படியே மெய்சிலிர்த்து விட்டது... அப்படியே கலைஞரை பார்ப்பது போலவே இருந்தது. உணர்ச்சிப்பெருக்கால் கண்ணே கலங்கிவிட்டது" என்று நெகிழ்ச்சி உணர்வுடன் கூறுகிறார் முல்லைவேந்தன்!!

    முல்லைவேந்தன்!! ஒரு ஆசிரியராக தன் வாழ்வை துவக்கினார். திமுகவின் சிறந்த பேச்சாளராக வலம்வந்தார். பின்னர் தி.மு.கவில் இணைந்து தருமபுரி மாவட்ட செயலாளராக உயர்ந்தார். 1989, 1996, 2016 ஆம் ஆண்டுகளில் மொரப்பூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    தருமபுரி மாவட்டத்தின் முதல் அமைச்சரே முல்லைவேந்தன்தான். அதற்குமுன்பு அந்த மாவட்டத்தில் வேறு எந்த கட்சியிலும் அமைச்சர்கள் உருவானதில்லை. அமைச்சராக இருந்தபோது முல்லைவேந்தன் செய்த நலத்திட்டங்கள் கணக்கிலடங்காது. பத்திரிகையாளர்களுக்கென நலவாரியம், ஓய்வூதியம் என அனைத்துவிதமான சலுகைகளையும் பெற்று தந்தார். கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி கடலில் இன்று நின்றுகொண்டிருக்கும் வள்ளுவர் சிலையை அமைத்ததில் முக்கிய, முதல் பங்கு முல்லைவேந்தனுக்குதான் போய்ச்சேரும்.

    The DMK will fight against the communal forces: Mullaivendan

    மாவட்டத்தில் முல்லைவேந்தன் அமைத்து கொடுத்த ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் காரணமாகத்தான் இன்றும் அவரை மக்கள் மனசார ஏற்று... வாயார புகழ்ந்து வருகிறார்கள். திமுகவில் முல்லைவேந்தன் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, கட்சியின் சில மூத்த தலைவர்களும் மாவட்ட மக்களும் முல்லைவேந்தனுக்கு தங்கள் மனதில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் நிரந்தரமாக அவரை உட்கார வைத்துவிட்டார்கள்.

    அவர், தற்போது தாய்க்கழகத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார். கட்சியில் இணைந்த பிறகு எந்த மீடியாக்களுக்கும் பேட்டி அளிக்காத முல்லைவேந்தன், "ஒன் இந்தியா தமிழ்"-க்காக தன் முதல் பேட்டியினை அளித்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியினை தருகிறது. அவரது பேட்டி இதோ:

    கேள்வி: ஒரு இடைவெளிக்கு பிறகு திமுகவில் மீண்டும் இணைந்திருக்கிறீர்களே? அதற்கு என்ன காரணம்?

    பொதுமக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும். அதோடு என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட கட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் மதவாத சக்திகளும் மற்றொரு பக்கம் ஊழல் நிர்வாகமும் தமிழ்நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்து போராடுகிற ஒரே இயக்கம் திமுகதான். எனவே என்னை வளர்த்து ஆளாக்கிய இயக்கத்திற்கு இறுதிவரை உடனிருந்து கட்சியின் வளர்ச்சிக்கும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்கும் பயன்படுகிற வகையில் பணியாற்றுவது என் கடமை என்ற அடிப்படையில்தான் இணைந்தேன். அதுமட்டுமல்ல, மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், திராவிட முன்னேற்றத்தைக் கழக தோழர்கள், பகுத்தறிவுவாதிகள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினை சேர்ந்தவர்கள் எல்லோருமே 'மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நான் பயன்பட வேண்டும்' என்று விரும்பிய காரணத்தினால்தான் நான் இணைந்தேன்.

    கேள்வி: உங்களுக்கு ஸ்டாலின் ஏன் அழைப்பு விடுத்தார் என்று நினைக்கிறீர்கள்?

    தளபதி என்னை அழைத்தால் நான் கழகத்தில் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் ஏற்கனவே கடந்த சில காலங்களில் சொல்லி வந்தேன். அந்த வகையில், திமுகவின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுவேன் என்ற நம்பிக்கையை என் மீது வைத்தும், கழகத்தின் சிறந்த தொண்டனாக நான் இருப்பேன் என்று உறுதியாக நினைத்தும்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது நம்பிக்கையின்படி என்னை இயக்கத்தில் இன்னும் தீவிரமாக இணைத்து அதன் வளர்ச்சிக்கு என்றுமே நான் பாடுபட தயாராக இருக்கிறேன்.

    கேள்வி: கட்சியில் மீண்டும் இணையும் நாளன்று, நேரில் உங்களை பார்த்த ஸ்டாலின் என்ன சொன்னார்?

    முதலில் என்னை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்துக் கொண்டார். என் இரு கைகளையும் இறுக்கமாக பற்றிக் கொண்டார். "நம் கழகத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும், உங்களை போன்ற நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கழகம் வளர வேண்டும்" என்று வாழ்த்தினார். அதற்கு நான், "கலைஞர் ஆணையிட்டால் எப்படி அதை செய்து முடிப்பேனோ, அதேபோல, உங்களது ஆணையையும் ஏற்று பணியாற்றுவேன்" என்ற உறுதியை அவருக்கு கொடுத்தேன். அதேபோல எனது மாவட்டத்தில் கடந்த காலங்களில் எப்படி பணியாற்றினேனோ அதேபோல இப்போதும் பணியாற்றுவேன் என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

    கேள்வி: இனி உங்கள் அரசியல் பயணம் எப்படி இருக்க போகிறது? மதவாதம், இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரான ஒரு செயல்பாட்டில் ஈடுபட போகிறீர்களா?

    நிச்சயமாக. பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு, திமுக தலைவர் தலைமையில் பணியாற்றுவதுதான் என்னுடைய வரப்போகிற அரசியல் பயணம் இருக்க போகிறது.

    கேள்வி: மீண்டும் திமுகவில் இணைந்தது குறித்து மற்ற திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என்ன சொன்னார்கள்? உங்களுக்கான வரவேற்பு அங்கு எப்படி இருக்கிறது?

    எல்லாருக்குமே நான் திரும்ப கட்சிக்குள் வந்தது மகிழ்ச்சி. மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து எனக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். திமுக என்றில்லை, அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். 5 ஆண்டுகாலம் அரசியலிலிருந்து விடுபட்டு மீண்டும் அரசியல் பணியாற்ற வந்திருப்பதை எல்லோருமே மகிழ்ச்சியோடு வரவேற்பதாக சொன்னார்கள்.

    கேள்வி: உங்க மாவட்ட மக்கள் உங்களின் இந்த இணைப்பு குறித்து என்ன நினைக்கிறார்கள்?

    என் மாவட்ட மக்கள், கட்சி தொண்டர்கள் என எல்லோருக்குமே நான் திமுகவில் இணைந்தது மகிழ்ச்சிதான். நான் அமைச்சராக இருந்தபோது, அவர்களிடம் இருந்த மகிழ்ச்சியை விட இப்போது இன்னும் அதிகமாகவே பூரிப்பில் இருக்கிறார்கள். சென்னையிலிருந்து இப்போது என் மாவட்டத்துக்கு திரும்பி வரும்போது, அவர்கள் என்னை வரவேற்ற விதத்திலேயே அது வெளிப்பட்டது. அவர்களின் வரவேற்பில் நான் மிகவும் நெகிழ்ந்தே போய்விட்டேன். கட்சி தொண்டர்கள் மத்தியில் இவ்வளவு மதிப்பும், மரியாதையும் இருக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை.

    கேள்வி: அப்படியென்றால், இவ்வளவு காலம் வீணாக்கிவிட்டோமே... திமுகவில் முன்பே இணைந்திருக்கலாமே? என்று வருத்தப்படுகிறீர்களா?

    ஆமாம். நிச்சயமாக. என்னுடைய 5 ஆண்டு காலம் ஒரு வனவாசம் மாதிரி இருந்தது எனக்கு. ஒரு வெறுமை தெரிந்தது. 5 ஆண்டு காலமும் ஒரு பயனற்ற வாழ்க்கைதான். பொதுவாழ்க்கையில் ஈடுபடாமல் இப்படி வீணாக்கி விட்டோமே என்று உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். இனி சமூக நீதி, பகுத்தறிவு, சுயமரியாதை கருத்துக்களை இளைஞர்களிடத்தில் கொண்டு செல்வேன். அடித்தட்டு மக்களுக்காக கழகம் விடுக்கும் அத்தனை முயற்சிக்கும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் தயாராகி விட்டேன்.

    கேள்வி: அன்று நீங்கள் பார்த்த ஸ்டாலினுக்கும், இன்று நீங்கள் பார்க்கும் ஸ்டாலினுக்கும் ஏதாவது வித்தியாசங்கள் தெரிகிறதா உங்களுக்கு? அவரது அணுகுமுறை, பக்குவங்கள் எல்லாம் இப்போது எப்படி இருக்கிறது?

    அது மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம். தளபதிபதியாக இருந்து பணியாற்றியதை அன்று பார்த்தேன். இன்று தலைவராக பணியாற்றுவதை பார்க்கிறேன். கலைஞர் எப்படி இயக்கத்தை வழிநடத்துவாரோ, தொண்டர்களுக்கு எப்படி ஆணையிடுவாரோ அந்த அடிப்படையில்தான் தலைவரை பார்க்கிறேன். இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் மறு உருவமாகவே அவரை இப்போது பார்க்கிறேன். நான் அன்று மீண்டும் கட்சியில் இணைவதற்காக அறிவாலயம் சென்றிருந்தேன். அப்போது கலைஞரின் நாற்காலியில் அவர் உட்கார்ந்திருந்ததை பார்த்ததும் ஒரு கணம் திகைத்துவிட்டேன். தலைவருக்கான அந்த சீட்டில் அவர் உட்கார்ந்திருந்தது கலைஞர்தான் என்பதுபோன்ற தோன்றியது. எனக்கு மெய்சிலிர்த்து விட்டது. அப்போது அவரிடம் பேசும்போது கூட, கலைஞரிடம் பேசுவதை போலவே என்னால் உணர முடிந்தது. அந்த உணர்ச்சிப்பெருக்கில் நான் அப்போது கண்கலங்கியே போய்விட்டேன்!

    English summary
    The DMK will fight against the communal forces: Mullaivendan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X