For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா?

சிக்கலில் எழுந்தருளியுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாகை: நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.

இக்கோவிலில் சன்னதி கொண்டுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் போது இன்றைக்கும் முருகனுக்கு வியர்க்கிறது என்பது அதிசயம்.

The Mystery of the Sweating Idol, Sikkal Singaravelar

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு பெற்ற ஒன்றாகும். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் முருகன் சிங்காரவேலவர், வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் உற்சவம் முக்கிய நிகழ்ச்சியாகும்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ந்தாலும் அது நடக்க வித்தாக உருவானது சிக்கலில் தான். மேலும் "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்ற சொல் வழக்கும் உண்டு.

சக்தி வேலின் வீரியத்தின் காரணமாக, சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சியை இன்றளவும் காணலாம்.

இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் தேரில் அலங்கார கோலத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

The Mystery of the Sweating Idol, Sikkal Singaravelar

நேற்று அதிகாலை 5 மணிக்கு சிங்காரவேலவர் தேரில் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து காலை 7.30 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து சக்திவேல் வாங்குதல் நடைபெற்றது. சக்தி வேல் வாங்கிய முருகனுக்கு முத்து முத்தாக வியர்வை சிந்தியது. அதை பட்டுத்துணியில் ஒற்றி எடுத்தனர். இதனையடுத்து வேல்நெடுங்கன்னி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.

சிக்கல் வந்த கதை

தேவலோகத்துப் பசுவான காமதேனு தன் சாபம் நீங்க, வசிஷ்டரின் ஆசிரமம் அமைந்திருந்த மல்லிகை வனம் என்னும் சிக்கல் தலத்திற்கு வந்து, மேற்குப் பக்கம் உள்ள தீர்த்தத்தில் தன் பாவம் தீர வேண்டுமென நினைத்து நீராடியது. காமதேனு முழுகி எழுந்த போது அதனுள் இருந்த ஆத்ம சக்தி பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அந்த குளமே இன்று "தேனு தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகிறது அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து

வெண்ணெயைத் திரட்டி எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை மாற்று இடத்தில் சேர்க்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது எடுக்க இயலாமல் அந்த வெண்ணெய் லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்றும் காமதேனு நீராடிய தீர்த்தம் பாற்குளம் என்றும் விளங்குகிறது. இறைவன் வெண்ணெய்யப்பர், நவநீதேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார்.

அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சம்பந்தர். இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் தானமாகப் பெற திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து நவநீதேஸ்வரரை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் இத்தலப் பெருமாள் "கோல வாமனப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருளுகின்றார்.

பிரசித்தி பெற்ற சிக்கல் ஆலயத்தில் முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலராக வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறார். அம்பாளுக்கு நெடுங்கண்ணி என்பது பெயராகும். அம்பாளுக்கு வேல் நெடுங்கண்ணி என பெயர் மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு:

முருகப்பெருமான் சூரனை அழிக்க திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிறுவி, அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட்டார். சிவபெருமான் நேரில் தோன்றி, "போரில் வெற்றி உனக்கே சித்திக்கும்' என வரம் தந்ததோடு, "உன் அன்னை நீ வெற்றி பெற வேண்டுமென மல்லிகை வனத்தில் தவம் இருக்கிறார். ஆதலால் அங்கு சென்று வேண்டி நீ சக்தியைப் பெற்றுச் செல்' என ஆசி வழங்கினார்.

அதன்படி, முருகப்பெருமான் மல்லிகை வனம் சென்று தாயான சக்தி தேவியிடம் சூரனை வதம் செய்வதற்காக அனுமதி கேட்டார். சக்தியும் தன் தவ வலிமையால் வேல் ஒன்று உருவாக்கி அதனை இத்தலத்தில் சிங்காரவேலவருக்கு வழங்கினார். அந்த வேலைக் கொண்டு சூரனை வதைத்து அவனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் செந்தூர் குமரன். குமரனுக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் "வேல்நெடுங்கண்ணி அம்மன்' என்னும் திருநாமம் பெற்றார்.

அன்னையிடம் வாங்கிய வேல் கொண்டு சூரசம்ஹாரத்தை நிகழ்த்தி போரில் வெற்றி பெற்றார் முருகப்பெருமான் என்கிறது கந்த புராணம். நாளைய தினம் சிக்கலில் சிங்கார வேலருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

English summary
On the fifth day of the festival Skandha receives his Vel from his mother Velnedunkanni, amidst much gaiety and colors, to vanquish the asura. This is known as the "Vel Vaangum Thiruvizha" and is the highlight of the festival. The amazing fact is that when Skandha prepares to receive his Vel, the utsavar idol of Singara Velavar breaks out into profuse sweating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X