For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்குமார் பிரேத பரிசோதனையை 3வது நீதிபதி முடிவு செய்வார்- 2 நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வது குறித்த அவரச வழக்கில் தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிப்பதில் நீதிபதிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் 3வது நீதிபதி விசாரித்து உத்தரவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Third judge will decide on Ramkumar autopsy

செவ்வாய்கிழமையன்று, 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.எம்,சி.யைச் சேர்ந்த செல்வக்குமார், ராயப்பேட்டையில் உள்ள பிரேத பரிசோதைனை நிபுணர்களான மணிகண்டன், வினோத் ஆகியோருடன் இணைந்து ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். வீடியோ பதிவுடன் இந்த பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராம்குமார் தந்தை பரமசிவம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கரசுப்பு மேல்முறையீடு செய்தார். தாங்கள் கூறும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனைநேற்று மாலை அவசர வழக்காக விசாரிக்க உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. நீதிபதிகள் குளுவாடி ரமேஷ், வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ராம்குமாரை திட்டமிட்டு கொலை செய்திருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சாவில் மர்மம் உள்ளதால், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, எங்கள் தரப்பில் ஒரு டாக்டரை அதில் இடம் பெறச்செய்யவேண்டும் என்று மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

எந்த டாக்டரை நியமிக்கச் சொல்கிறீர்கள்? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர், டாக்டர் சம்பத்குமார் என்பவரை நியமிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 4 டாக்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது, 5-வது தனியார் ஆஸ்பத்திரி டாக்டரை நியமிக்கவேண்டும் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? ஒருவேளை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரை நியமித்தால், ஒவ்வொருவரும் இதுபோன்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரமாட்டார்களா? என்று நீதிபதி வைத்தியநாதன் கேட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் மர்மமான முறையில் இறந்துள்ளார். பொதுவாக அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையை காவல்துறைக்கு ஆதரவாக வழங்குவதாக தேசிய மனித உரிமை ஆணையமே கூறியுள்ளது. அதனால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒரு டாக்டரை நியமிக்கவேண்டும் என்று வக்கீல் தெரிவித்தார்.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் எழுந்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்காக இறந்து போனவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தனியார் டாக்டரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கக்கூடாது. இந்த கோரிக்கையை ஏற்றால், ஒவ்வொரு வழக்கிலும் பிரேத பரிசோதனை செய்ய தனியார் டாக்டரை நியமிக்கவேண்டும் என்று பலர் வழக்கு தொடருவார்கள் என்று கூறினார்.

அதற்கு நீதிபதி குளுவாடி ரமேஷ், யார் வருவார்கள்? தெருவிலோ, வீட்டிலோ ஒருவரை வெட்டிக் கொலை செய்திருந்தால், அதற்காக இந்த கோரிக்கையுடன் வழக்கு தொடரமாட்டார்கள். ராம்குமார் இறந்தது சிறையில். அதாவது சிறை அதிகாரி கட்டுப்பாட்டின் கீழ் அவர் இருந்தபோது மர்மமான முறையில் இறந்துள்ளார். அதனால், சாவில் மர்மம் உள்ளது என்றும், பிரேத பரிசோதனை செய்யும் அரசு டாக்டர்களுடன் தங்களது தரப்பில் ஒரு டாக்டரை நியமிக்கவேண்டும் என்றும் மனுதாரர் கேட்கிறார் என்று தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனை டாக்டரை நியமிப்பதற்கு பதில் மேலும் ஒரு அரசு டாக்டரை நியமிக்கலாமே? என்று நீதிபதி வைத்தியநாதன் கூறினார். ஆனால் மனுதாரர் வக்கீல், அரசு மீது நம்பிக்கை இல்லாததால்தான், தனியார் டாக்டரை கேட்கிறோம் என்றார்.
நீதிமன்றத்தில் இவ்வாறு வாதம் நடந்தது.

இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இருதரப்பு வக்கீல்களும் வாதம் செய்தனர். அப்போது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, தங்களது விருப்பத்தின்படி ஒரு டாக்டரை நியமிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வழக்கில், போலீஸ் காவலில் அல்லது என்கவுண்டரில் சாகும் ஒரு நபரை பிரேத பரிசோதனை செய்யும்போது, பாதிக்கப்பட்டோர் சார்பில் ஒரு தடயவியல் நிபுணரை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தற்போதுள்ள வழக்கில், ராம்குமார் சிறைத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இறந்துள்ளார். எனவே, அவரது உடலை பரிசோதனை செய்யும்போது, சுதந்திரமான ஒரு நிபுணரை அதில் இடம் பெறச் செய்யவேண்டும். அதுதான் நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்கும்.

இதனால், ஒரு சுதந்திரமான தடயவியல் நிபுணரை நியமிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஆனால், சகோதர நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இந்த முடிவில் இருந்து மாறுபடுகிறார் என்று நீதிபதி குளுவாடி ரமேஷ் தெரிவித்தார்.

அவர் கூடுதல் அட்வகேட் ஜெனரலின் வாதத்தை ஏற்கிறார். தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒரு டாக்டரை நியமிப்பதற்கு பதில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மேலும் ஒரு டாக்டரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இந்த வழக்கில் இரு நீதிபதிகளுக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை 3வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறோம். எனவே, இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம்.
3வது நீதிபதி விசாரித்து இறுதி தீர்ப்பை பிறப்பிக்கும் வரை, ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பார்வையாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Madras high court referred the matter of autopsy on the body of Ramkumar, the sole accused in techie Swathi murder case who allegedly committed suicide in Puzhal prison on September 18, to a third judge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X