For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி நிறுவனத்தை மூடுவதா.. பாஜகவின் தமிழ் விரோதப் போக்கிற்கு.. வலுக்கும் எதிர்ப்பு

செம்மொழி நிறுவனத்தை மூடும் பாஜகவின் தமிழ் விரோதப் போக்கிற்கு விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் அறிஞர்களால் போராடிப் பெற்ற செம்மொழி மத்திய நிறுவனத்தை மூடும் பாஜகவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அறிஞர்கள், அரசியல் கட்சிகள் போராடிப் பெற்ற உரிமையைக் குழி தோண்டிப் புதைக்கும் பாஜக அரசின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிர்ச்சி

அதிர்ச்சி

சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைத்துவிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கையை உடனே கைவிடவேண்டுமென மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மாநில மொழிகளுக்கு வந்த சோதனை

மாநில மொழிகளுக்கு வந்த சோதனை

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவு திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களும் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதித்து அதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிகிறோம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் செம்மொழி நிறுவனங்களையும்கூட ஆங்காங்கே இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களோடு இணைத்துவிட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவெடுத்துள்ளது.

இனி நிதி கிடைக்காது

இனி நிதி கிடைக்காது

மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்ற தகுதியை இழக்கும். அதன் நிதி மற்றும் நிர்வாக அதிகாரம் யாவும் பல்கலைக்கழகத்திடம் சென்றுவிடும்.

நிதிக்காக காத்திருக்க வேண்டியதுதான்

நிதிக்காக காத்திருக்க வேண்டியதுதான்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) மூலம் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் அவர்கள் ஏதேனும் ஒதுக்கினால் அதைக் கொண்டுதான் அது இனிமேல் செயல்படவேண்டும் என்ற நிலை உருவாகும். அது பல்கலைக் கழகத்தின் துறைகளில் ஒன்றாக குறுக்கப்பட்டுவிடும்.

அறிஞர்களின் போராட்டம் வீண்

அறிஞர்களின் போராட்டம் வீண்

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் முதலான அமைப்புகளும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராசன், முனைவர் பொற்கோ முதலான தமிழறிஞர்களும் தொடர்ந்து போராடி வந்தார்கள். திமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.

திமுக ஆட்சியில் செம்மொழி

திமுக ஆட்சியில் செம்மொழி

திமுக தலைவர் கலைஞர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாக 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெறப்பட்டது. அதன்பிறகு அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் மைசூரில் இயங்கி வந்த செம்மொழி நிறுவனம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது.

குழி தோண்டி புதைக்கும் பாஜக

குழி தோண்டி புதைக்கும் பாஜக

அப்படிப் போராடிப் பெற்ற உரிமையைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இன்றைய பாஜக அரசின் நடவடிக்கை உள்ளது. இதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஒருங்கிணைந்து குரல் எழுப்ப..

ஒருங்கிணைந்து குரல் எழுப்ப..

பாஜக அரசு தனது தமிழ் விரோத நடவடிக்கையை உடனடியாகக் கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் காக்க அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்பவேண்டும் என அழைக்கிறோம் என்று திருமாவளவன் கூறினார்.

வேல்முருகன் கண்டனம்

வேல்முருகன் கண்டனம்

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓர் இனத்தை அழிப்பதென்றால் முதலில் அதன் மொழியைத்தான் அழிப்பர் பகைவர் என்கிறது வரலாறு. இக்கொடுமை தமிழ் இனத்திற்கு ஆயிரத்திற்கும் மேல் ஆண்டுகளாகவே நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியில் பாஜகவின் மோடி அரசு வந்ததிலிருந்தே தமிழ், தமிழினம், தமிழகத்திற்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அணிவகுக்கின்றன; அதிகரிக்கின்றன.

பாஜகவின் தடாலடி

பாஜகவின் தடாலடி

அதன் நீட்சிதான் தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை முடக்க நடுவண் அரசு மேற்கொள்ளும் தடாலடி நடவடிக்கையும். தன்னாட்சி அமைப்பான தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை மூடிவிட்டு, பதிலாக அதை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஓர் அங்கமாக ஆக்குவதென நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.

இந்திக்கு அடிமை

இந்திக்கு அடிமை

இதற்கான பரிந்துரையை நடுவண் நிதி ஆயோக் அமைப்பு செய்துள்ளது. இந்தி, சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளுக்கான நிலைகளை அந்தந்த மாநிலத்தில் உள்ள நடுவண் பல்கலைக்கழகத்துடன் இணைத்துவிடச் சொல்கிறது நிதி ஆயோக். இதிலிருந்து தெரிவது என்ன? "இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கே இங்கு ஆளுகை; மற்ற மொழிகள் யாவும் அவற்றிற்கு அடிமை!" இந்தியை வளர்க்க நாடு முழுவதும் இந்தி பிரச்சார சபாக்கள்; இவற்றிற்கு கணிசமான அளவில் மத்திய நிதி! செத்த மொழி சமஸ்கிருதத்திற்கோ வகைதொகையில்லாமலே வாரியிறைக்கப்படுகிறது மக்கள் வரிப்பணம்!

மூட துடிக்கும் மோடிக்கு கண்டனம்

மூட துடிக்கும் மோடிக்கு கண்டனம்

இத்தனையும் செய்யும் மத்திய அரசு செம்மொழி உயராய்வு நிறுவனத்தைக் கண்டுகொள்வதேயில்லை. ஏற்கனவே சென்னையில் உள்ள தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்கு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதனை செயலற்றதாக்கியுள்ள நிலையில், மோடி அரசு வந்ததும் அதற்கான நிதியையும் நிறுத்திவிட்டது. இப்போது அதை மூடிவிடவே முடிவு செய்கிறது மோடி அரசு. இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்ச் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடக் கோருகிறது! இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
VCK leader Thirumavalavan has condemns for closing CICT.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X