For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் பங்கேற்ற திக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் திடீரென புறக்கணிப்பா? திருமா விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திடீரென தாம் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டதாக வெளியான செய்திகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நலக் கூட்டணியில் இருந்தாலும் திமுகவை ஆதரிக்கும் திராவிடர் கழகத்தின் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார்.

Thirumavalavan speaks on DK protest and Stalin

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் திமுக அணிக்கு போக விரும்புகிறது விடுதலைச் சிறுத்தைகள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் திக ஆர்ப்பாட்டத்தில் சிறுத்தைகள் கலந்து கொள்வதால் திமுக கூட்டணிக்கு போவதற்கான முன்னோட்டமாக இது இருக்கலாம் எனவும் கருதப்பட்டது.

ஆனால் திருமாவளவன் கூட்டணிக்கு வருவதை விரும்பாத ஸ்டாலின் திடீரென திக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் திருமாவளவன் இதில் கலந்து கொள்ளாமல் தம்முடைய பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி வைத்திருந்தார். இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு திருமாவளவன் அளித்துள்ள பேட்டி விவரம்:

கேள்வி: தி.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமல் நீங்கள் திடீரென புறக்கணித்ததாக கூறப்படுகிறதே?

பதில்: புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது தொடர்பாக திராவிடர் கழகம் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் கலந்து கொள்ளுமாறு விடுதலை சிறுத்தைகளுக்கு அழைப்பு வந்தது.

அன்று என்னால் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. எங்கள் கட்சியின் சார்பில் பாவலன் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் எங்கள் கட்சியின் சார்பில் வன்னியரசு கலந்து கொள்வார் என்று ஏற்கனவே திராவிடக்கழகத்திற்கு தகவல் கொடுத்து இருந்தோம்.

போராட்டம் நடக்கிற நாளில் எனக்கு வேலூர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் இருந்தன. அதனால் வன்னியரசு கலந்து கொண்டார். நான் புறக்கணிப்பதாக இருந்தால் ஆலோசனை கூட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் எங்கள் பிரதிநிதிகள் பங்கேற்காமல் தவிர்த்து இருப்போம்.

நாங்கள் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தாலும் பொது பிரச்சினைகளுக்காக திராவிடர் கழகத்தோடு இணைந்து செயல்படுவதை தவிர்ப்பது இல்லை. மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்களும் இதனை சங்கடமாக பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.

நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று தெரிந்து தான் தி.மு.கவும் அதில் கலந்து கொண்டது. நான் பங்கேற்பதை மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறுவது வெறும் யூகமேயாகும்.

கேள்வி: இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நீங்கள் தி.மு.கவுக்கு தூது விட்டதாக சொல்லப்படுகிறதே?

பதில்: இது வெறும் கற்பனை. நாங்கள் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளோடு தான் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம். எங்கள் கட்சியின் மாநில செயற்குழுவில் அதை தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

இது தி.மு.க.வுக்கும் திராவிடர் கழகத்துக்கும் மிக நன்றாகவே தெரியும். போராட்டத்தின் மூலம் தான் தூது விட வேண்டுமா இது தவறான கருத்து.

கேள்வி: இந்த ஆர்ப்பாட்டத்தில் உங்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டதால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்: இந்த போராட்டத்தின் நோக்கத்தையும் தேவையையும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மிக நன்றாக அறிவார்கள். புதிய கல்வி கொள்கையை இடதுசாரி கட்சிகள் மற்றும் ம.தி.மு.க வரவேற்கவில்லை.

எனவே தி.க நடத்திய போராட்டத்தில் விடுதலை சிறுத்தை பங்கேற்றதை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் எதிர்மறையாக பார்க்க மாட்டார்கள். கொள்கைக்கான போராட்டங்களையும் தேர்தலுக்கான உறவுகளையும் பிரித்து பார்க்க கூடிய பக்குவமுள்ளவர்கள்.

கேள்வி: தி.மு.க.வுடன் கூட்டணி சேர லோக்சபா தேர்தலுக்காக இப்போதே அச்சாரம் போடுகிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே?

பதில்: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இதற்கிடையில் எத்தனையோ அரசியல் போராட்டங்கள் நிகழலாம். இப்போதே அதற்கு அச்சாரம் போட வேண்டும் என்பது அதிகப்படியான கற்பனையாகத் தெரிகிறது.

மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் என்று நாங்கள் கூறியதில் இருந்து இந்த சந்தேகம் வருகிறது. நாங்கள் தேர்தலை வைத்து இந்த கருத்தை முன்மொழியவில்லை. இந்த தேசத்தின் நலன்களை வைத்தே கூறி இருக்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
VCK leader Thol. Thirumavalavan said that he didn't skip DK parotest on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X