For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக கல்வித்துறை வணிகமயமாக மாறி வருகிறது.. திருநாவுக்கரசர் பகீர் குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கல்வித்துறை என்பது வணிகமயமாக மாறி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் நாடு முழுவதும் கட்டாயக் கல்வி உரிமை வழங்கும் சட்டத்தை கடந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2006-ல் நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது.

Thirunavukkarasar Allegation on state education department

கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி, தமிழகத்தில் மொத்தம் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால், 16 ஆயிரத்து 194 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டிய தனியார் பள்ளிகள் 8.8 சதவீதம்தான் ஒதுக்கியிருந்தன.

எல்லாவற்றையும் மிஞ்சுகிற கொடுமை என்னவெனில், தமிழகத்தில் உள்ள 10,758 தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் படி சேர்க்க வேண்டிய மாணவர்களில் ஒரே ஒரு மாணவர்தான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 2015-16-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக கல்வியமைச்சர் கூறியிருக்கிறார். எனவே, கல்வி உரிமைச் சட்டப்படி எவ்வளவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர் என்ற விவரத்தை கல்வியமைச்சர் வெளியிட வேண்டும்.

மேலும், தமிழகத்தில் படிக்கிற மாணவர்களின் தரம் குறித்து செய்யப்பட்ட ஆய்வறிக்கை மிகுந்த அதிர்ச்சியை தரும் வகையில் உள்ளது. இந்த அறிக்கையின்படி கிராமப்புற பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கிற மாணவர்களில் 21 சதவீதத்தினர்தான் முதல் வகுப்பு பாடங்களையே படிக்க திறனுள்ளவர்களாகவும், இரண்டாம் வகுப்பு பாடத்தை 30 சதவீத மாணவர்கள்தான் படிக்க முடிகிறது என்கிற ஆய்வறிக்கையின் கூற்றை கண்டு அதிர்ச்சியடையாதவர்கள் இருக்க முடியாது.

ஆனால், மத்திய பாடத்திட்டம், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களின் கல்வித்திறன், அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்களைவிட மிகுந்ததாக இருப்பதால், தமிழக மாணவர்களிடையே கல்வியறிவில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவாகி வருகிறது. இந்நிலையின் காரணமாக தமிழக கல்வித்துறை என்பது வணிகமயமாக மாறி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் தரம் உயர்த்தப்பட்டு, கற்பிக்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu congress party president Thirunavukkarasar Allegation on state education department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X