For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் கொடுமை... இடிஅமீன் ஆட்சி செய்த நாட்டில் வாழ்கிறோமா? - திருநாவுக்கரசர்

நீட் தேர்வு எழுத சென்ற போது நேர்ந்த கொடுமைகளை பார்க்கும் போது நாம் இடிஅமீன் ஆட்சி செய்த நாட்டில் வாழ்கிறோமா என்கிற சந்தேகமும், அச்சமும் எழுகிறது என்று திருநாவுக்கரசர் கேட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு நீட் நுழைவுத் தேர்வின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க, போராட துணிவில்லாத, முதுகெலும்பற்ற வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

Thirunavukkarasar blasts NEET conditions

மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 85 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6,510 இடங்களுக்காக இத்தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

இத்தேர்வில் பங்கேற்ற மாணவ - மாணவியர்கள் கடுமையான பரிசோதனைக்குப் பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரவாதிகளை பரிசோதனை செய்வதைப் போல தலை முதல் கால் வரை சோதனை நடத்தியுள்ளனர்.

மாணவிகள் அணிந்திருந்த செயின், கம்மல், மூக்குத்தி, மோதிரம், கொலுசு, வளையல், பிரேஸ்லெட், ஹேர்பின் உட்பட அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவிகள் இவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுதச் சென்றனர். அதேபோல. மாணவர்கள் முழுக் கை சட்டை அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால், அப்படி அணிந்து வந்த மாணவர்கள் அந்த இடத்திலேயே சட்டையை கத்திரி கோலால் வெட்டி அரைக் கை சட்டையாக மாற்றிய பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியர் பர்தா அணிந்து சென்ற போது கழற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கெடுபிடியான சூழலில் எப்படி தேர்வை சிறப்பாக எழுத முடியும் ? இத்தகைய செயல்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

நுழைவுத் தேர்வு எழுதச் சென்ற மாணவ - மாணவியர் மீது இத்தகைய கொடுமைகளை ஏவி விட்டதைப் பார்க்கிற போது நாம் இந்தியாவில் தான் வாழ்கிறோமா ? அல்லது இடிஅமீன் ஆட்சி செய்த நாட்டில் வாழ்கிறோமா என்கிற சந்தேகமும், அச்சமும் எழுகிறது. இத்தகைய நெருக்கடிகளை, அடக்குமுறைகளை ஏவிவிடுகிற போது இங்கே சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்வியே எழுகிறது.

தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின்படி படித்து வருகிற 8 லட்சம் மாணவர்களை மத்திய பாடத்திட்டத்தின்படி நடைபெறுகிற தேசிய நுழைவுத் தேர்வில் பங்கேற்க நிர்பந்திப்பதால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று பலமுறை மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் கூறியிருந்தோம். இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் ஆர்ப்பாட்டமும் நடத்தியது.

மத்திய - மாநில பாடதிட்டங்களுக்கிடையே சம நிலைத் தன்மை இல்லாததால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு நடத்த குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்காவது விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். ஆனால் கடந்த காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று ஓராண்டு விதிவிலக்கு அளித்த மத்திய பாஜக அரசு தற்போது அதிமுக ஆட்சியாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்காமல் உதாசினப்படுத்தியதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

தமிழக மாணவ - மாணவியர்கள் 12 ஆண்டுகளாக மாநில பாடதிட்டத்தில் படித்துவிட்டு திடீரென தேர்வு எழுதி முடித்த ஒரு மாதத்தில் மத்திய பாடதிட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிற நுழைவுத் தேர்வில் பங்கேற்க நிர்பந்தித்ததால் பல மாணவர்கள் தேர்வை மனநிறைவோடு எழுத முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு நுழைவுத் தேர்வின் மூலம் பறிக்கப்பட்டு, வெளி மாநில மாணவர்களுக்கு கிடைக்கிற அநீதி நிகழ்வதற்கான வாய்ப்பு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பாகும். இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

தமிழக நலன்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க, போராட துணிவில்லாத, முதுகெலும்பற்ற வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருக்கிற தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

English summary
TNCC president Thirunavukkarasar has blasted NEET exam conditions and slammed the ADMK govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X