For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்தோஷ வாழ்வு தரும் திருவோண விரதம்!.... ஓங்கி உலகளந்த பெருமானை வணங்குவோம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கை.

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.

திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது.

திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும்.

தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்று ஆகும். ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.

தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும். எல்லா மாதங்களிலும் வரம் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருந்தாலும் ஆவணி திருவோண விரதம் மிக முக்கியமானதாகும்.

இந்த விரதம் இருப்போர் கேளர மாநிலம் திருக்காக்கரை விஷ்ணுகோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்க மன்னார் கோவில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆகிய தலங்களில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம். இத்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் 108 திவ்யதேசங்களில் ஏதேனும் ஒரு தலத்திற்கு சென்று பெருமாளை வழிபடலாம்.

திருவோணத் திருவிழா பிறந்த கதை

திருவோணத் திருவிழா பிறந்த கதை

தமிழ் மாதமான ஆவணி மாதத்தை, கேரளாவில் ‘சிங்க மாதம்' என்று அழைப்பர். அந்த மாதத்தை அவர்கள் ஆண்டின் தொடக்க மாதமாகவும் கருது கிறார்கள். அந்த மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தன்று வளர்பிறையில் இந்தப் பண்டிகை வருகிறது. கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை அனைத்து மக்களும் சாதி, சமய பாகுபாடு இன்றி கொண்டாடுவது தனிச்சிறப்பாகும். ‘காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு' என்ற பழமொழி, இந்த பண்டிகையின் பெருமையை பறை சாற்றுகிறது. கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதைப்போல் ஓணம் பண்டிகை தோன்றியதற்கும் ஒரு கதை உண்டு.

வாமன அவதாரம்

வாமன அவதாரம்

தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாபலி சக்கரவர்த்திக்கு முக்திப் பேற்றினை வழங்கிய திருவோணத்தன்று, மக்கள் வாழ்வில் அனைத்து நலனும் பெற வேண்டி பெருமாளை நோக்கி விரதம் இருந்து வழிபடுகின்றனர். சந்தோஷ வாழ்வு அருளும் திருவோண விரதத்தை மலையாள மொழி பேசும் மக்கள் ‘ஓணம் பண்டிகை'யாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

விளக்கின் திரி தூண்டிய எலி

விளக்கின் திரி தூண்டிய எலி

தமிழகத்தில் நாகை மாவட்டம் கடற்கரையையொட்டி திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம் நகர் உள்ளது. அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் தனது திருமண காட்சியை காட்டி அருளிய தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவிலில், ஒரு முறை அர்த்தசாம பூஜை முடிந்து கதவு தாழிட்ட பின், கருவறை விளக்கு அணையும் தருவாயில் இருந்தது.
அப்போது இறைவன், இத்திரியை யார் தூண்டி விடுகிறார்களோ, அவர்களுக்கு அரச பதவியும், மறுபிறவியில் வீடு பேற்றையும் தருவோம் என்றார். அப்போது விளக்கின் நெய்யை குடித்திட வந்த எலியின் மூக்குப்பட்டு தீபம் தூண்டப்பட்டது. அந்த எலியை பின்நாளில் மகாபலி மன்னராக பிறக்குமாறு இறைவன் அருள் புரிந்தார்.

மகாபலி சக்கரவர்த்தி

மகாபலி சக்கரவர்த்தி

எலியின் தெய்வீகப்பணியில் மனம் மகிழ்ந்த பரமசிவன், எலியை மறுப்பிறவியில் மன்னராக பிறக்கும் படி பேரருள் புரிந்தார்.
சர்வேஸ்வரனிடம் வரம் பெற்ற எலி மறு பிறவியில், அசுர குலத்தில் மாவலி என்ற பெயரில் பிறந்து மன்னராகி கேரளாவை ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சி காலத்தில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தனது ஆற்றலாலும், தவ வலிமையாலும் மாவலி மன்னர், தேவர்களை தோற்கடித்தார். மூவுலங்களையும் ஆளும் ஆதிக்கம் பெற்று மகாபலி சக்கரவர்த்தியானார். மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார்.

மகாவிஷ்ணு

மகாவிஷ்ணு

நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச்சாரியார். ‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்' என்று மகாபலியை எச்சரித்தார்.

விஷ்ணுவுக்கு தானம்

விஷ்ணுவுக்கு தானம்

மகாபலி கேட்கவில்லை. ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது' என்றார் மகாபலி. விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார்.
வாமன அவதாரம் எடுத்து மகாபலி முன்தோன்றி மூவடி மண் வேண்டும் என்று தானம் கேட்டார்.

நீரை வார்த்து தானம்

நீரை வார்த்து தானம்

அதற்கு சம்மதம் தெரிவித்த மகாபலி மன்னன் நீரை வார்த்து தானம் கொடுத்தார். அசுர குரு சுக்ராச்சாரியார் ஒரு வண்டாக மாறி கமண்டல துவாரத்தை அடைத்தார். இதை பார்த்த பகவான் குறுநகை புரிந்தவாறே தர்ப்பையால் கமண்டலத்தின் வாயை குத்தினார். அதனால் சுக்ராச்சாரியார் ஒரு கண்ணை இழக்க நேரிட்டது. பின்னர் வாமனர் திரி விக்ரமனாக வளர்ந்தார்.

ஓங்கி உலகலந்த உத்தமன்

ஓங்கி உலகலந்த உத்தமன்

ஒரடியால் சத்யலோகத்தை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமனானார். ஈரடியால் மண்ணையும், விண்ணையும் அளந்தார். 3வது அடியில் மகாபலி மன்னரின் தலையில் தனது பொற்பாதத்தை வைத்து அவரை பாதாள லோகத்தில் அழுத்தி பேரருள் புரிந்தார். அப்போது மகாபலி மன்னர் மகாவிஷ்ணுவிடம் ‘பகவானே, நான் மிகப்பெரிய பேறு பெற்றேன். அடியேன் பேறு பெற்ற இத்திருநாளை எல்லா மக்களும் இன்பநாளாக கொண்டாட அருள்புரிய வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார்.

பாதாள லோகத்தில் மன்னன்

பாதாள லோகத்தில் மன்னன்

அதற்கு பகவானும் அருள் செய்தார். மகாபலி பகவானுக்கு தானம் கொடுத்தது ஆவணி மாதம் திருவோண தினத்தன்று நடந்தது. அன்றைய தினம் மகாபலி மன்னன் தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து தான் ஆட்சி செய்த கேரளா மாநிலத்திற்கு வருவதாக ஐதீகம்.

அத்தப்பூ கோலம்

அத்தப்பூ கோலம்

இதை நினைவு கூறும் வகையிலும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 'ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி அன்றில் இருந்தே மகாபலி சக்கரவர்த்தியின் வருகைக்காக கேரள மக்கள், வீடுகள் தோறும் வாசலில் கோலமிட்டு வண்ண, வண்ண பூக்களின் மூலம் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள்.

கோவில்களில் வழிபாடு

கோவில்களில் வழிபாடு

கேரளா முழுவதும் மகாபலி, விஷ்ணு உருவங்கள் பெரிய அளவில் வரையப்படும்.10வது நாளாக திருவோணம் தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து திருவிளக்கேற்றி வழிபட்டனர். கும்மியடித்து, நடனமாடியும் ஊஞ்சல்களை விளையாடியும் மகிழ்ந்தனர். கேரளாவில் எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மலையாள மக்கள்

மலையாள மக்கள்

ஓணம் அன்று சிறப்பான உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வார்கள். அன்றைய விருந்தில் ஸ்பெஷல் பாயாசம் இடம் பெறும். இளைஞர்கள் வாண வேடிக்கை செய்து மகிழ்வர். ம் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம், சிங்காரி மேளம், கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. கேரள மக்கள் எங்கிருந்தாலும் கொண்டாடி மகிழும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். சென்னை, நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி மாவட்டங்களில் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

பெருமாள் கோவில் வழிபாடு

பெருமாள் கோவில் வழிபாடு

தமிழகத்தில் திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விஷ்ணு புராணங்களை படிக்கலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை ஒரு பொழுது சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.

English summary
Mahabali's rule is considered the golden era of Kerala, ancient Bharata.Thiruonam day is the most important day of Onam. In Onam 2016, Thiruvonam date is 14 September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X