For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரைக்கால் திருவிழா: சிவபெருமானை மாங்கனி வீசி வழிபட்ட பக்தர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காரைக்கால்: காரைக்காலில் பிறந்து... தலையினால் நடந்து கயிலாயம் சென்று இறைவனை வணங்கி, திருவாலங்காட்டில் சிவனில் காலடியில் இடம் பிடித்தவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்பிற்குரியவர். இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி... இறைவனுக்கு மாங்கனி விருந்து கொடுத்த மங்கை என்ற பல்வேறு சிறப்புக்களைக் கொண்டவர் காரைக்கால் அம்மையார்.

மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ‘மாங்கனி திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது.

Thousands witness Karaikkal`Mangani' festival

காரைக்கால் அம்மையார் கோவில்

சிவபெருமானில் திருவாயினால் ‘அம்மையே' என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில் உள்ளது. இக்கோயிலில் காரைக்கால் அம்மையாரின் வரலாற்று நிகழ்ச்சியை மையமாக கொண்டு நடைபெறும் மாங்கனி திருவிழா திங்கட்கிழமை மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் துவங்கியது.

திருக்கல்யாணம்

2ம் நாளான நேற்று 30ம் தேதி காலை காரைக்கால் அம்மையார் தீர்த்தக்கரைக்கு வரும் நிகழ்ச்சியும், பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்திற்கு வரும் நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 10.40 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு வீதியுலா நடைபெற்றது.

மகா அபிஷேகம்

3ம் நாளான இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேக, தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் காசுக்கடை மண்டபத்திலிருந்து இரு மாங்கனிகளை தன் இல்லத்திற்கு கொடுத்தனுப்பும் நிகழ்ச்சியும், நடைபெற்றது.

Thousands witness Karaikkal`Mangani' festival

மாங்கனி திருவிழா

காலை 9.05 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வந்தார் அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வீட்டு மாடிகளிலும், பால்கனிகளிலும் கூரைகளில் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபட்டனர். அவ்வாறு இறைக்கப்பட்ட மாங்கனிகளை ஏராளமானோர் எடுத்துச் சென்றனர். அன்று இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து சென்று அமுதுபடையல் படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்

திருவிழா கொண்டாடுவது ஏன்?

காரைக்காலில் உள்ள சிறந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். இவரை நாகப்பட்டினத்தில் உள்ள வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார்.

சோதித்த சிவன்

ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை பெற்றுக்கொண்ட புனிதவதி தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார். அப்போது பசியுடன் ஒரு சிவனடியார் வந்தார் சிவன். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார்.

அதற்கு சிவனடியார் ‘‘அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!'' என்றார்.

மாங்கனி கொடுத்த மங்கை

அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார்.

இரண்டாவது மாங்கனி

மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.

மாங்கனி கொடுத்த இறைவன்

இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு உண்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான்.

தெய்வப்பிறவி

கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார்.

விலகிய பரமதத்தன்

தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான்.

இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2வது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.

கயிலாயம் சென்ற அம்மையார்

கணவனே தன்னை தெய்வம் என்று கூறி வணங்கியதால் இறைவனை வேண்டி பேய் உருவமாக மாறி காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார்.

அம்மையே என்றழைத்த இறைவன்

அப்போது இறைவன், அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார்.

அதற்கு அம்மையார்,இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்'' என்று கேட்டார்.

திருவாலங்காட்டில் இடம்

உடனே சிவபெருமான், ‘‘அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்'' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம்.

பக்தர்கள் கோலாகலம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைக்கால் அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனி படைத்தது, சிவபெருமானிடம் அம்மையார் மாங்கனி பெற்றது போன்ற நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று காரைக்காலில் உள்ள ‘காரைக்கால் அம்மையார்' திருக்கோவிலில் மாங்கனி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

English summary
Thousands of devotees on Monday witnessed the famous `Mangani' festival, the main event of the four-day annual festival of the Karaikal Ammaiyar Temple, in Karaikal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X